ரஜினிகாந்த் சம்பந்திக்கு தமிழக பாஜகவில் பதவி

ரஜினிகாந்த் சம்பந்திக்கு தமிழக பாஜகவில் பதவி




தமிழக பாஜக தலைவர் நீண்ட காலமாக நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம், அக்கட்சியின் தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருந்த எல்.முருகனை பாஜக மாநிலத் தலைவராக டெல்லி மேலிடம் நியமித்தது. இதையடுத்து, தமிழக பாஜக புதிய மாநில நிர்வாகிகள், அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அண்மையில் நியமிக்கபட்டனர்.
 

திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்பட மொத்தம் 10 பேர் தமிழக பாஜக துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். அத்துடன், தமிழ் சினிமா பிரபலங்களான கெளதமி, நமீதா, ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, சின்னத்திரை பிரபலம் குட்டி பத்மினி ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

நடிகை நயன்தாராவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய விமர்சனத்தை முன் வைத்த காரணத்தால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி, நடிகை நமீதா பாஜகவில் சேர்ந்த சமயத்தில் இணைந்தார். ஆனால், நமீதாவுக்கு பதவி வழங்கப்பட்டதுடன், ராதாரவிக்கு பதவி வழங்கப்படாமல் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நடிகர் ராதாரவிக்கு தற்போது தமிழக பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநில செயற்குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் நடிகர் தனுஷின் தந்தையும், ரஜினிகாந்தின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா ஆகியோரும் தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.