கோவிட் - 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த க. தணிகாசலம் கைது 

கோவிட் - 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த க. தணிகாசலம் கைது 



கோயம்பேடு ஜெய் நகர் பகுதியில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையில் மருத்துவம் செய்துவருபவர் தணிகாசலம். இவர் தன்னை சித்த வைத்தியர், இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொண்டு மருத்துவம் செய்துவந்தார்.


இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்ததும் அந்த நோய்க்கு தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூற ஆரம்பித்தார். தன்னிடம் நோயாளிகளைக் கொடுத்தால், தான் அவர்களைக் குணப்படுத்தி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.


இது தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு அரசில் உள்ள பலருக்கும் சவால் விடுத்தார் தணிகாசலம். இதையடுத்து சென்னையில் உள்ள இந்திய மருத்துவத் துறையின் இயக்குனர் காவல்துறையில் புகார் அளித்தார்.


இந்த புகார்களை மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் பிரிவு விசாரித்துவந்தது. இந்த நிலையில், புகார் தெரிவிக்கப்பட்ட அன்றே ஒரு வீடியோவை வெளியிட்ட தணிகாசலம் தான் மருந்து கண்டுபிடித்ததற்காக தன்னைக் கைதுசெய்வதென்றால் கைதுசெய்யட்டும் என்று கூறினார்.


இதற்குப் பிறகு அவரது செல்போன் 'ஸ்விட்ச் - ஆஃப்' செய்யப்பட்ட நிலையில் இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை காலையில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.


அவர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 54வது பிரிவு, பெருந்தொற்றுப் பரவல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3, இந்திய தண்டனைச் சட்டத்தின் 188வது பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.


அவர் விரைவில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார்.


முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டறிந்துவிட்டதாக பேசிவந்த ஒருவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அரசு அங்கீகாரம் பெறாத மருத்துவ நிலையம் நடத்திவரும் போலி மருத்துவர் தணிக்காசலம் என்பவர் மீது வழக்கு தொடுக்கவிருப்பதாகக் கூறப்பட்டது.


சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்திவரும் க. தணிகாசலம் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு, பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருகிறார் என சுகாதாரத்துறை தெரிவித்தது.


மைய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இந்திய மருத்துவம் மற்றம் ஹோமியோபதித் துறை மூலம் சென்னை, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் ''கோவிட் - 19 எனும் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது,'' என்றும் தெரிவிக்கப்பட்டது