நமது நாட்டில் நல்ல தலைவர்கள் இல்லையா...?! மக்கள் மாறினால் மட்டுமே மக்களாட்சி மலரும் .....!!

நமது நாட்டில் நல்ல தலைவர்கள் இல்லையா...?! மக்கள் மாறினால் மட்டுமே மக்களாட்சி மலரும் .....!!

கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

14 ஆண்டுகள் பதவியிலிருந்த நெதர்லாந்து பிரதமர் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தன் பதவியை அடுத்த பிரதமரிடம் ஒப்படைத்து விட்டு மிகவும் சிரித்த முகத்துடன் சைக்கிளில் செல்வது போன்ற காட்சி அது.

 நம் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கும்   என்று எதிர்பார்க்க முடியுமா ? கனவிலாவது நடக்குமா?   என்றும் கூடவே ஆதங்கத்துடன் கேட்டிருந்தார்கள் .

நம் நாட்டிலும் இவரை விட எளிமையான தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

உள்துறை, ரயில்வே துறை , பிரதமர்  என பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரி தன் பதவிக் காலத்தில் அலகாபாத்தில் வாடகை வீட்டில் இருந்தார் என்பதும் , "ஹோம்லெஸ் ஹோம்மினிஸ்டர்" என்று அழைக்கப்பட்டார் என்பதும் நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும் ?

முதல்வராக இருந்த கர்ம வீரர் காமராசர் இறந்த போது அவரது உடமை சில நூறு ரூபாய்களும் இரண்டு ஜோடி ஆடைகளும் தான்.

அவரது அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் சட்டமன்றத்துக்கு மக்களோடு மக்களாக பஸ்ஸில் பயணம் செய்தது நினைத்தாலே பூரிக்கும் வரலாறு.

திரிபுராவில் 20 ஆண்டுகள் முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் , 23ஆண்டுகள் மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு இவர்கள் எல்லாம் பதவியை விட்டு விலகியவுடன் ஒரே ஒரு ஜோல்னா பையுடன்  வெளியேறியதும் , கார் பங்களா , தன் குடும்பத்தின் நான்கு முறைக்கு சொத்து சேர்க்காததும் கனவல்ல நிஜம்தான்.

உலகமே உச்சி முகர்ந்து பாராட்டிய நமது மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து கொண்டு வந்த சொத்து என்ன தெரியுமா ? பெட்டி நிறைய புத்தகங்கள் மட்டுமே.

ஆக நம் நாட்டிலும் நாம் வாழ்ந்த காலத்திலேயே   பதவி , பணம் , வீடு ,புகழ் இவற்றைக் சேர்த்துக் கொள்ளாத தன்னலமற்ற தொண்டு ள்ளம் படைத்தத் தலைவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்  என்பது அழிக்க முடியாத வரலாற்று உண்மை.

சரி இப்போது ஏன் அப்படிப்பட்ட தலைவர்கள் உருவாகவில்லை ? உருவாக்கப்படவில்லை? என்று கேட்பவர்கள் பின் வரும் விவரங்களைப் படியுங்கள்.

அமெரக்கா ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை குறைவு .. பரப்பளவும் குறைவு என்கிற உண்மையையும் , மக்களில் 90 சதவீதம் வரை படித்தவர்கள் .. மந்தை மனப்பான்மை இல்லாதவர்கள் என்கிற எதார்த்தையும் முதலில் ஒத்துக் கொள்ள வேண்டும்.

அங்கு பதவி என்பது அலுவலக வேலை மாதிரி. தங்கள் பதவிக்காலம் முடிந்ததும் அரசியலுக்கு டாடா காட்டி விட்டு சொந்த வாழ்க்கைக்கு எளிதாக திரும்பும் வழக்கம் உடையவர்கள் .

வெற்றி தோல்வி இரண்டையும்  ஒரே நிலையில் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள் .நாம் தோற்றாலும் நாடும் மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உரத்த சிந்தனை உள்ளவர்கள் .

 வாரிசு அரசியல் அங்கு அறவே கிடையாது. ஒரே மதம் என்பதால் பெரிய அளவில்  மத வேறுபாடுகள் ஜாதிப் பிரிவினைகள் கிடையாது. மதத்தை , ஜாதியை முன் நிறுத்தி வாக்கு சேகரிக்கும் அரசியல் வியாதி கிடையாது.

தப்பு செய்தால் தப்பித்துக் கொள்ளும் ஓட்டை உடைசல் சட்டங்கள் கிடையாது.

எந்த வழக்கும் வாய்தா, முன்ஜாமீன், பின் ஜாமீன் என்று சீரியல் மாதிரி இழுக்கும் நீதிமுறை கிடையாது.

 தெருவுக்கு 4 கட்சிகள் ஜாதிக்கு 100 கட்சிகள் ஒவ்வொரு கட்சியிலும் பல பிரிவுகள்  என்கிற கேவல நிலை அங்கே இல்லை .

மக்களும் அரசியல்வாதிகளை பெரிதாக எண்ணி போற்றுவதில்லை. தெய்வமாக நினைத்து கோயில் கட்டுவதில்லை.

"நீ எங்களைக் காப்பாற்றும் கடவுள் அல்ல .. எங்களைப் பாதுகாக்கும் பணியை செய்யும் ஒரு அதிகாரி" அவ்வளவுதான் என்ற மனநிலையில் இருப்பவர்கள் .75 % எல்லோருமே தன்னிறைவு பெற்றவர்கள் என்பதால் அரசின் இலவசங்கள் , சலுகைகளுக்காக ஏங்குவது, அரசியல் கட்சித் தலைவர்களிடம் மண்டியிடுவது போன்ற இழிநிலை அங்கேக் கிடையாது.

எந்த தலைவன் தப்பு செய்தாலும் கட்சி , இன வேறுபாடின்றி மொத்தமாக வீதிக்கு வந்து போராடும் போராட்டக் குணம் உடையவர்கள். 

ஒரே வரியில் சொல் தென்றால் அங்குள்ள மக்களும்  தலைவர்களும்  மானத்துடன் கூடிய சுய மரியாதையும் ,பகுத்தறிவும் கொண்டவர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அங்குள்ளவர்கள் தான் எப்படியிருந்தாலும்.. தங்களிடம் என்ன குற்றங்கள் குறைகள் இருந்தாலும்  தன் தலைவன் நல்லவனாக இருக்க வேண்டும் .. குற்றங்கள் செய்யாதவராக இருக்க வேண்டும்  என்பதில் உறுதியான கொள்கை உள்ளவர்கள் .

எந்த தேசத்தில் ஆள்பவர்கள் குற்றவாளிகளாகவும் மக்கள் நிரபாரதிகளாவும் இருக்கிறார்களோ அந்த தேசத்தில் நல்ல தலைவர்கள் உருவாக வாய்ப்பே இல்லை.

பழமையும் பெருமையும் வாய்ந்த நம் பாரத நாடு இந்தப் பட்டியலில் இப்போது இடம் பெற்றிருப்பது வெட்கத்துக்குரியது.

இந்த அவப்பெயரை நீக்கி இந்தியாவிலும் நல்ல தலைவர்களைத் தேட வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் கைகளிலும்தான் இருக்கிறது. 

ஆம் ! மக்கள் மாறினால் மட்டுமே மக்களாட்சி மலரும் .காரணம் மக்களில் இருந்துதானே தலைவர்கள் உருவாகிறார்கள் .. உருவாக்கப்படுகிறார்கள். 

நெதர்லாந்து பிரதமர் மாதிரி எளிமையான தலைவர்ளைத் தேடித் தேடி உருவாக்க வேண்டிய முயற்சிகளில் இறங்குவோம். 

நாம் மாறுவோம் !

நம் நாட்டை மாற்றுவோம்!

- உதயம் ராம்

9444011105