பெட்டமுகிலாளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு....!!
பெட்டமுகிலாளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு....!! 

 தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட தொழுவபெட்டா, குள்ளட்டி, பழையூர்,கவுண்டனூர் உள்ளிட்ட 6 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மற்றும் ஆழ்த்துளை கிணறுகளை ஆழப்படுத்த பொக்லைன் வாகனங்களை வனப்பகுதி வழியாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்தும், பல போராட்டங்கள் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று தொழுவபெட்டா, குள்ளட்டி பகுதியில் மக்களவைதேர்தலையொட்டி 2 வாக்குசாவடி அமைக்கப்பட்டது. ஆனால் தொழுவபெட்டா பகுதியில் உள்ள 617 வாக்காளர்களும், குள்ளட்டியில் 416 வாக்காளர்களும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை வாக்களிக்க மாட்டோம் என வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனசரகர் விஜயன் மற்றும் பிடிஒ சீனிவாசமூர்த்தி உள்ளிட்ட வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கூறியும் அப்பகுதி மக்கள் மாலை 6.30 மணி வரை வாக்களிக்கவில்லை, தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதால், மேலும் 2 மணி நேரம் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டு அங்கு தேர்தல் அலுவலர்கள் காத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, பெட்டமுகிலாளம் ஊராட்சியில் வசிக்கும் மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பதாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பொய்யான தேர்தல் வாக்குறுதி அளித்து வாக்குகளை பெற்று செல்கின்றனர். அதற்கு பின்பு தேர்தலில் வெற்றிபெறும்வேட்பாளர்கள் எங்கள் பகுதிக்கு வருவதில்லை, அரசு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை இதனால் இந்த முறை எங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தேர்தலை புறக்கணித்து வாக்களிக்க்க மாட்டோம் என கூறினர்.
B. S. Prakash