ஓட்டுக்காக தமிழ்நாட்டுக்கு வர்றேனா? பிரதமர் மோடி பரபர பேட்டி!

ஓட்டுக்காக தமிழ்நாட்டுக்கு வர்றேனா?  பிரதமர் மோடி பரபர பேட்டி! 



ஓட்டு வாங்குவதற்காக ஒன்றும் நான் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரவில்லை" என பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலின்போதே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார். மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டுக்கு வர உள்ளார் மோடி.

இந்நிலையில், தமிழ் செய்தி தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சார்பாக நடத்தப்பட்ட நேர்காணல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் பிரதமர் மோடி.

நீங்கள் எவ்வளவு கடுமையாக முயற்சி செய்தாலும் தமிழ்நாடு, பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது, அந்த நிலை இந்த தேர்தலில் மாறும் என நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, "இந்த கேள்வியை பலரும் ஏன் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் அரசியல்வாதி என்பதால், நான் செய்யும் எல்லா வேலையையும் அரசியலுக்காக மட்டும்தான் செய்வேனா? வாக்கு வாங்குவதற்கு மட்டும் தான் செய்வேனா? இந்த எண்ணம் எனக்கு பொருந்தாது.

நான் நாட்டுக்காகத்தான் வேலை செய்கிறேன். தமிழ்நாடு என் நாட்டின் மிகப்பெரிய சக்தி. தமிழ்நாட்டில் ஆட்சியை யாருக்கு கொடுக்கிறீர்கள் என்பது பற்றி எல்லாம் நான் யோசிக்கவே இல்லை. ஓட்டுக்காகத்தான் நான் வேலை செய்ய வேண்டும் என்றால் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கு எல்லாம் நான் இத்தனை முறை போயிருக்க மாட்டேன்.

இதுவரை இந்தியாவில் இருந்த பிரதமர்கள் அனைவரும் மொத்தமாக எத்தனை முறை வட கிழக்கு மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறார்களோ அதை விட அதிகமாக நான் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று உள்ளேன். இதையெல்லாம் நான் ஓட்டுக்காக செய்தேன் என்றால் அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

தேர்தல், அரசியல், பாஜக என்ற எண்ணத்திலேயே என்னுடைய ஒவ்வொரு செயலையும் அளவிடுவது, வளர்ச்சி பணிகளுக்காகவே செயல்படும் எனக்குச் செய்யப்படும் அநியாயமாக பார்க்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் யாருக்கு ஓட்டு போடுகிறார்கள் என்பது எனது பிரச்சனையே இல்லை. நான் அவர்களின் திறமைகள் பற்றி யோசிக்கிறேன். மக்கள் என்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த இடத்தில் இருந்து நான் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்றுதான் பார்க்கிறேன்.

இதை நான் டெல்லியில் உட்கார்ந்துகொண்டு செய்ய முடியாது. அந்த இடத்துக்கு நேரில் செல்ல வேண்டும். இதற்காகத்தான் இந்தியாவின் அனைத்து மூலைகளுக்கும் நான் பயணம் செய்கிறேன். தமிழ்நாட்டிற்கும் அடிக்கடி வருகிறேன். எனவே, தயவுசெய்து நான் எது செய்தாலும் அதை அரசியல் திட்டத்தோடு தான் செய்கிறேன் எனச் சொல்லாதீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு இவ்வளவு முறை சென்றும் ஓட்டு வரவில்லையே என்ற யோசனை வந்திருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள மோடி, "தமிழ்நாட்டு மக்கள் மீது எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லமாட்டேன். தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உள்ளது. தமிழ்ப் பண்பாட்டின் மீது ஒரு மயக்கத்தோடு இருக்கிறேன். அதனால் தான் தமிழ்நாட்டின் மீது ஈர்க்கப்பட்டு அடிக்கடி இங்கு வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் பற்றி பெருமையாக பேசுவதும், செங்கோல், காசி தமிழ் சங்கமம் உள்ளிட்டவற்றை செய்வதும், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருகை தருவதும் வாக்கு வாங்குவதற்குத்தான் என விமர்சிக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, "ஒருவேளை இதனால் தான் ஓட்டு கிடைக்கும் என்றால் நான் செய்வதற்கு முன்பே அவர்கள் செய்திருப்பார்கள். அவர்களிடம் அதற்கான சக்தியும் உள்ளது.

அவர்களுக்குத் தெரியும், இதனால் நாடு வளமடைகிறது, வாக்கு வங்கி அரசியல் முடிவடைகிறது, குடும்ப அரசியலுக்கு ஆபத்து என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் இந்த விஷயங்களைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள். இதனால் ஓட்டு கிடைக்கும் என்றால் எனக்கு முன்பாக அவர்கள் தான் ஓடி வருவார்கள்" எனத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.