நான் ஒண்ணும் கோட்டாவில் சீட் வாங்கல.. நேரடியாக தாக்கிய அண்ணாமலை!

 நான் ஒண்ணும் கோட்டாவில் சீட் வாங்கல.. நேரடியாக தாக்கிய அண்ணாமலை!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுகவில் ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். திமுகவில் தேர்தல் பணியாற்ற, அமைச்சர் டிஆர்பி ராஜா கோவையில் இறக்கப்பட்டுள்ளார்.

கோவையில் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வரும் அமைச்சர் டிஆர்பி ராஜா, அண்ணாமலையை விமர்சித்திருந்தார். அதேபோல, அதிமுக கோவை வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனும் அண்ணாமலையை வறுத்தெடுத்து வருகிறார். இந்நிலையில், திமுக, அதிமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசி வருகிறார்.

அண்ணாமலை பரபர பேட்டி: கோவை சுங்கம் பகுதியில் பாஜக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோவை மக்களவைத் தொகுதி முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை பார்க்க முடிகிறது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது கோயம்புத்தூர் ஒரு புரட்சி செய்யும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதை களத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அரசியலில் திமுக இருப்பதே ஒரு அவமானம். திமுக 1967ல் என்றைக்கு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர ஆரம்பித்ததோ, விஞ்ஞான ஊழல், குடும்ப ஆட்சி, பணத்துக்கு வாக்கு கொடுப்பது ஆகியவை திமுக வந்த பிறகுதான் உருவானது. இன்று தனக்கென்று எதுவும் இல்லாமல் ஒரு பொம்மை முதலமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின். இவர் பிரதமர் மோடியை பற்றி பேச தகுதி இல்லை.

ஈசல் பூச்சி: டிஆர்பி ராஜா தஞ்சாவூர்காரர். அவரது அப்பா பணம் சம்பாதித்து வைத்து இருக்கிறார். அதை மட்டுமே வைத்து அரசியலுக்கு வந்திருக்கிறார் டிஆர்பி ராஜா. அதை தவிர அவருக்கு வேறு எந்த திறமையும் இல்லை. இத்துப்போன டப்பாவோ, கொலுசோ கொடுத்து கோவை மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என நினைக்கின்றனரா? டிஆர்பி ராஜா போன்றவர்களுக்கு இந்த மண்ணில் எப்பொழுதும் இடம் கிடையாது. அவர்கள் எல்லாம் ஈசல் பூச்சி மாதிரி. ஈசல் பூச்சிகள் போல கோவைக்கு திமுககாரர்கள் வந்திருக்கிறார்கள்.

தந்தையின் எம்எல்ஏ கோட்டாவை பயன்படுத்தி வந்தவர் அதிமுக வேட்பாளர். 2002ஆம் அதாவது 22 ஆண்டுகளுக்கு முன்பு நான் கோவைக்கு வரும்போது எப்படி 2 தகர பெட்டிகளை எடுத்து வந்தேனோ இன்றும் அதே மனநிலையில் இப்போதும் இருக்கிறேன். எனக்கு அடையாளம் கொடுத்தது கோவை. கிராமத்துப் பையனை பொறியாளனாக மாற்றியது கோவை. எனக்கு மனைவியும் சொந்தங்களும் கிடைத்தது கோவையில். இந்த கோவைக்கு நல்லது செய்வதற்கு வருகிறேன்.

கோட்டா சிஸ்டத்தில் வரவில்லை: அதிமுக வேட்பாளரை போல அப்பாவை வைத்து கோட்டா சிஸ்டத்தில் நான் வரவில்லை. சுயமாக, ஒவ்வொன்றிற்கும் சண்டை போட்டு ஒவ்வொரு படியாக ஏறி வந்திருக்கிறேன். அதனால் அந்த சின்னப் பசங்க விளையாட்டுக்காக வரவில்லை. கோவையினுடைய மாற்றத்திற்கு, தீவிரவாத, போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வருகின்றோம்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தையும், என்.ஐ.ஏ அலுவலகத்தையும் கோவைக்கு கொண்டு வருவோம். அதற்குப் பிறகு போதைப்பொருள் எப்படி வரும்? தீவிரவாதம் எப்படி வரும்? இது மோடி கியாரண்டி. நாங்கள் வந்தால் வளர்ச்சியை கொண்டு வருவோம், மெட்ரோ ரயில் கொண்டு வருவோம். இது எங்கள் வாக்குறுதி.

அண்ணாமலை புராணம்: இத்தனை காலமாக திமுக - அதிமுக மாற்றி மாற்றி பேசி வந்தார்கள். இப்போது பாருங்கள், காலையில் எழுந்து இரண்டு கட்சி வேட்பாளர்களும் அண்ணாமலை புராணம் பாடி கொண்டிருக்கிறார்கள். பாஜக புராணம், மோடி புராணம் பாடிக் கொண்டிருக்கின்றனர்.

சீட்டு கிடைக்காத எம்.பியும் அண்ணாமலை, அண்ணாமலை என்கின்றார். சீட்டு கிடைத்த திமுக, அதிமுகவினரும் எப்போது பார்த்தாலும் அண்ணாமலை அண்ணாமலை என்கின்றனர். எங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் 60 சதவீத வாக்குகள் பா.ஜ.கவிற்கு கிடைக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.