மகா சிவராத்திரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறி வழிபாடு

 மகா சிவராத்திரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறி வழிபாடு*

*ஓசூர் அருகே மலை மீது 4.500 அடி உயரமுள்ள சிவ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் : மகா சிவராத்திரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறி வழிபாடு*

ஓசூர் அருகே பேவநத்தம் கிராமத்தில் மலை மீது சுமார் 4.500 அடி உயரமுள்ள சிவ நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் இன்று மகா சிவராத்திரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறி சிவனை வழிபட்டனர்.

ஓசூர் அருகே உள்ள பேவநத்தம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவ நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த திருக்கோயில் கிராமத்தின் அருகே உள்ள மலையின் உச்சியில் அமைந்துள்ளது. பிரதோஷம், பௌர்ணமி ஆகிய நாட்களில் இந்த கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் செல்வார்கள், அதேபோல ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று இந்த கோயிலுக்கு பக்தர்கள் குடும்பத்துடன் மலை மீது ஏறி சிவனை வழிபடுவார்கள். 

அந்த வகையில் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு ஓசூர், கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி. தர்மபுரி மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு சென்றனர். மலை உச்சியில் வீற்றிருக்கும் சிவனை தரிசிக்க பக்தர்கள் மலையின் கீழ் அடிவாரத்தில் இருந்து கால்நடையாக மலை மீது வெறும் கால்களுடன் ஏறி சென்றனர். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பாறை மீது ஏறி சென்று சிவ நஞ்சுண்டேஸ்வரர் சுவாமியை வழிபட்டனர்.

வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவு சென்றதால் காவல்துறை மற்றும் வனத்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் கால்நடையாகவே நீண்ட நேரம் நடந்து சென்று பின்னர் மலை மீது ஏறி சென்றனர். மகா சிவராத்திரியையொட்டி கோயிலுக்கு சென்ற பொது மக்களுக்கு பக்தர்கள் சார்பில் நீர், மோர் பானங்கள் மற்றும் அன்னதானம் ஆகியவை இலவசமாக  வழங்கப்பட்டது.