கனகதாசரின் 536 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா : தலைமேல் தேங்காய் உடைத்து குரும்பர் இனமக்கள் வழிபாடு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ஸ்ரீ கனக ஜோதி சேவா சமிதி சார்பில் கனகதாசரின் 536 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த விழாவில் குரும்பர் இன மக்கள் தலைமேல் தேங்காய்களை உடைத்து நேர்த்திகடனை செலுத்தினர்
முன்னதாக தேன்கனிக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கனகதாசர் சிலை வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க டொல்லு குணிதா, வீரகாசை, விரபத்ர குணிதா ஆகிய பாரம்பரிய நடனங்களுடன் சிக்கம்மா, தொட்டம்மா, வீரபத்ரப்பா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம தேவதைகள் அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகளுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இதில் பக்தர்கள் பாரம்பரிய முறையில் நடனங்கள் ஆடினர். அப்போது ஊர்வலம் சென்ற சாலைகளில் தேங்காய்கள் உடைக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து சிக்கம்மா, தொட்டம்மா, வீரபத்ரப்பா, சித்தைய்யா, தொட்டய்யா, கரி எல்லம்மா, இராம லிங்கேஷ்வரா, சித்த லிங்கேஷ்வரா,
உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளுக்கும் காளை மாடுகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விழாவில் குரும்பர் இன மக்கள் 100க்கும் மேற்பட்டோர் தலைமேல் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி நூதன வழிபாடு மேற்கொண்டனர். இந்த விழாவில் ஸ்ரீ கனக ஜோதி சேவா சமிதி தலைவர் பாப்பண்ணா தலைமை தாங்கினார். ரவீந்திரநாத், வழக்கறிஞர் ராமகிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கெட் மஞ்சு, எல்லப்பா, ஸ்ரீசோமலிங்கேஸ்வர குரு, குப்பம் ஜெயப்பா, வரத்தூர் சுரேஷ், முன்கிருஷ்ணனப்பா, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட்ராமனப்பா, எம் எம் முனிகிருஷ்ணனப்பா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பீரப்பா, ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் ரவி, சிவராமன் உள்ளிட்ட கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் ஊன்றுகோல் ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த விழாவில் பேசிய ஸ்ரீ கனக ஜோதி சேவா சமிதி தலைவர் பாப்பண்ணா, தமிழகத்தில் குரும்பர் இன மக்கள் 40 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் குரும்பர் இன மக்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 6 சட்டமன்ற தொகுதிகளை எந்த கட்சி வழங்க முன் வருகிறதோ, அந்த கட்சிக்கு தங்களுடைய இன மக்களின் வாக்குகளை அளிக்க உள்ளதாகவும் அதற்காக சமுதாயத் தலைவர்களை ஒருங்கிணைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விழாவில் தமிழகத்தின் ஒசூர், தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, கெலமங்கலம், இராயக்கோட்டை மற்றும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர், கோலார், ஆனெக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
B. S. Prakash