ஓசூரில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களின் வசதிக்காக மாற்றம்...
*ஓசூரில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களின் வசதிக்காக மாற்றம் ஏற்படுத்த கிருஷ்ணகிரி எம்பி மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு*
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே குமுதேப்பள்ளி பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியாக இருபுறமும் அமையப்பெற்றுள்ள சர்வீஸ் சாலையை இணைக்கும் விதமாக மாற்றம் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஏதுவாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சிப்காட் இரண்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கனரக வாகனங்கள் தயாரிக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் இயங்கி வருகிறது இதில் சுமார் 10,000 மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல அதன் எதிர்ப்புறத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயிலும் மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
தொழிலாளர்களும் மாணவர்களும் குறித்த நேரங்களுக்கு அவரவர் இடங்களுக்கு சென்று வருவதற்கு தற்பொழுது உள்ள தேசிய நெடுஞ்சாலையின் அமைப்பு மிகவும் சிரமமானதாகவும் காலதாமதத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. எனவே ஓசூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பொழுது அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு எதிரே அமைந்துள்ள மேம்பாலத்தில் துவக்கப் பகுதியில் சர்வீஸ் சாலையை இணைக்க ஏதுவாக வசதியும், அதேபோல சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி வரும்பொழுது அதே பகுதியில் சர்வீஸ் சாலையை இணைக்க ஏதுவாகவும் மாற்றங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் நீண்ட நாள் கோரிக்கைகள் இருந்து வருகிறது.
மேலும் அந்தப் பகுதியை ஒட்டி பல குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளதால் அவ்வப்பொழுது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் தொழிலாளர்கள் மாணவர்கள் என பல தரப்பினரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் கோரிக்கையை பரிசீரித்த கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் இது தொடர்பாக தேசிய நெடுஞ் சாலைத்துறை ஆணைய திட்ட இயக்குனர் ரமேஷ் என்பவரை அணுகி இதுகுறித்து விவரித்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் மாற்று வசதியை ஏற்படுத்தித் தர ஏதுவாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் ஆகியோர் அப்பகுதி மக்களிடமும் தொழிலாளர்களிடமும் தேவைகள் குறித்து கேட்டு அறிந்தனர்.
பின்னர் இதற்கான சாத்திய கூறுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து வசதியை ஏற்படுத்தித் தர தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.