வாகனங்களை ஸ்கிராப் செய்ய வயது கட்டாயம் இல்லை......!

வாகனங்களை ஸ்கிராப் செய்ய வயது கட்டாயம் இல்லை......!

பழைய வாகனங்களின் பயன்பாடு இந்திய போக்குவரத்துத் துறைக்கு மிகப் பெரிய தலை வலியாக மாறி இருக்கின்றது. அதிக விபத்துகளுக்கும், குறிப்பாக, காற்று மாசுபாட்டிற்கும் பழைய வாகன பயன்பாடே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இதை முன் வைத்தே இந்திய அரசாங்கம் பழைய வாகனங்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போரை முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில், பழைய வாகனங்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மிகக் கடுமையான திட்டமே ஸ்கிராப்பிங் பாலிசி. பழைய பெட்ரோல், டீசல் என அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தும். ஒரு தசாப்தத்தைக் கடந்து பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் உடல் தகுதி தேர்வை சந்திக்க வேண்டும் என்பதை இந்த பாலிசி கட்டாயப்படுத்துகின்றது.

இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே குறிப்பிட்ட அந்த வகானம் பயன்பாட்டிற்கு உகந்ததாக கருதப்படும். இதில் தோல்வியைச் சந்திக்கும் வாகனங்கள் உடனடியாக பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டு, அவை அழிக்கப்பட வேண்டும். இதுவே புதிய ஸ்கிராப் பாலிசியின் முக்கிய நோக்கமாகும். இந்த நிலையிலேயே வாகன அழிப்பு திட்டத்திற்கு வயது முக்கியம் அல்ல என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

.சமீப சில நாட்களாக சமூக ஊடகங்கள் வாயிலாக சில வதந்திகள் பரவிய வண்ணம் இருக்கின்றன. அதாவது, 10 ஆண்டுகள் பழைய டிராக்டர்கள் பயன்பாட்டில் இருந்து கட்டாயமாக அகற்றப்பட்டு, அவை அழிக்கப்பட இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

மேலும், இந்த தகவல் ஆதாரப்பூர்வமற்றது மற்றும் தவறானது எனவும் குறிப்பிட்டு உள்ளது. புதன் கிழமை (நேற்று) அன்று இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு தன்னுடைய நிலைப்பாட்டையும் அமைச்சகம் உறுதிப்படுத்தியது. மேலும், வாகனங்களை ஸ்கிராப்பிங் செய்ய கட்டாய வயது வரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் அது தெரிவித்து இருக்கின்றது.

இதுதவிர, போக்குவரத்து வாகனம் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனம் என இரு வகையாக வாகன அழிப்பு திட்டத்தை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வகுத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. விவாசய வாகனம் போக்குவரத்து அல்லாத வாகனம் ஆகும். இதை பதிவு செய்யும்போதே 15 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்படுகின்றது.

இந்த காலம் முடிவடைந்த பின்னர் மறு பதிவு செய்யப்பட வேண்டும். அப்போது ஐந்து ஆண்டுகளுக்கு அந்த பதிவு நீட்டிக்கப்படுகின்றது. இதனை தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில், 10 ஆண்டுகளுக்கு பிறகு டிராக்டர்களை கட்டாயமாக அகற்ற வேண்டும் என தவறாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த தகவலைக் கண்டு யாரும் பீதி அடைய தேவையில்லை என அரசு தற்போது அனைவருக்கும் ஆறுதலான தகவலை வெளியிட்டு இருக்கின்றது. மேலும், மக்கள் மத்தியில் பீதியை கிளப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அமைசக்கம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

ஜிஎஸ்ஆர் 29 (இ) விதியானது குறிப்பிட்ட சில அரசு வாகனங்களுக்கு மட்டுமே வயதை நிர்ணயித்திருப்பதாக தெரிவிக்கின்றது. வேறு எந்த வாகனத்திற்கும் அரசு வயதை நிர்ணயிக்கவில்லை எனவும் அந்த விதி கூறுகின்றது. ஆகையால், எந்தவொரு வாகனமும் வயதை அடிப்படையாகக் கொண்டு அழிக்கப்படாது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இந்த புதிய ஸ்கிராப்பிங் பாலிசியானது தன்னார்வ வாகன ஸ்கிராப்பையே ஊக்குவிக்கின்றது. அதேவேளையில், முன்னதாக கூறியதைப் போல், பழைய வாகனங்கள் உடல் தகுதி தேர்வை சந்திக்க வேண்டும். இதில் அந்த வாகனம் தோல்வி அடையும் பட்சத்தில், அதை கட்டாயம் ஸ்கிராப் செய்ய வேண்டும். இதுமட்டுமின்றி, தகுதியற்ற வாகனத்தை பயன்படுத்தி வந்ததற்கு அபராதம் விதிக்கப்படும் என முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தானியங்கி சோதனைக் கூடம் வாயிலாகவே வாகனங்களின் பயன்பாட்டு திறன் சோதிக்கப்படுகின்றது. இதில், குறிப்பிட்ட அளவு மதிப்பை பெறுகின்ற வகையில் அந்த வாகனம் இருக்கும் எனில் அதை எந்த தடையும் இன்றி தாராளமாக சாலையில் பயன்பாடுத்திக் கொள்ளலாம். இது அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என்பது கவனிக்கத்தகுந்தது.

பள்ளி வாகனங்களை பொருத்தவரை யாரும் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் எந்த ஒரு பள்ளி வாகனம் தினமும் 50 லிருந்து 100 கிலோமீட்டருக்கு மேல் பயணிப்பது இல்லை. எனவே இந்த வாகனங்கள் அதிகப்படியான மாசு ஏற்படுத்தும் என்று எவராலும் குற்றம் சொல்ல முடியாது. இந்த வாகனங்களின் எஞ்சின் தயாரிப்பு நிறுவனம் நிர்ணயித்த கிலோமீட்டர் கூட இன்னும் தொடவில்லை. அதேபோன்று வாகனத்தின் உடல் அமைப்பிலும் எவ்வித குறைபாடுகளும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

 எனவே பள்ளி பயன்பாட்டில் இருக்கின்ற வாகனங்கள் அனைத்தும் தங்களின் வாழ்நாளை முடித்து இருந்தாலும் அவை இன்னும் 10. 15 வருடங்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல் நன்றாக ஓடக்கூடியது என்பதால் அவற்றை எல்லாம் அவ்வளவு சீக்கிரமாக அழித்துவிட முடியாது.

எனவே தாராளமாக இன்னும் சில காலங்களுக்கு இந்த வாகனங்களை எவ்வித பயமும் இல்லாமல் பயன்படுத்தலாம்.