இனி ஓ. பன்னீர் செல்வத்திற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு....!

 இனி ஓ. பன்னீர்  செல்வத்திற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு....!

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக முழுமையாக சென்றுவிட்டது. இனி ஓ பன்னீர்செல்வம் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுகிறது. பாஜக கொடுத்த நம்பிக்கையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு வழக்கைத்தான் முழுமையாக நம்பி இருந்தார். இப்போது தீர்ப்பு எதிராக வந்திருப்பது ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சாதமாக மாறி மாறி தீர்ப்புகள் வந்துள்ளன. இறுதி தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக வந்துள்ளதால் இனி அதிமுகவில் அவரது கையே ஓங்கி இருக்கும் என்ற நிலை உள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை சசிகலா பதவியை ராஜினாமா செய்ய கூறியதாக கூறப்படுகிறது. 

இதனால் பதவியை ராஜினாமா செய்த ஓ பன்னீர்செல்வம் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி இரவு 8.50 மணிக்கு சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு நீண்டநேரம் தியானம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் ராஜினாமா செய்தேன் என கண்ணீர் மல்க கூறியதுடன் தாம் தர்ம யுத்தம் தொடங்கி உள்ளதாகவும் பிரகடனம் செய்தார். இதுதான் ஓபிஎஸ் நடத்திய முதல் தர்ம யுத்தம் ஆகும். 

அதன்பிறகு சசிகலா டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

ஆனால் ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியதால், ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. அவரை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முயன்றனர். 

வானகரத்தில் இதற்காக அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜுலை 23ம் தேதி கூட்டப்பட்டது. அப்போது ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடி ஏற்கனவே பட்டியலிடப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிதாக எந்த தீர்மானமும் நிறைவேற்ற அனுமதிக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார். அத்துடன் பொதுக்குழு கூட்டத்திலும் இபிஎஸ் உடன் ஒபிஎஸ் பங்கேற்றார். அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டவுடன் எழுந்த அமைச்சர் சி.வி.சண்முகம், "பொதுக்குழுவின் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம்" என ஆவேசமாக அறிவித்தார்.

 ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து ஆவேசமாக முழக்கமிட்டனர். ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டதாலும் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வர மீண்டும் அதிமுக பொதுக்குழு ஜூலை 11 கூடும் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே அதிமுக பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ம் தேதி நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். 

இந்தப் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் ஓ.பன்னீர்செல்வம். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அதிமுகவில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்று ஆகஸ்ட் 17ம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மேல் முறையீடு செய்ததது. இதை விசாரித்த நீதியரசர்கள் துரைசாமி & சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பினை ரத்து செய்து செப்டம்பர் 2 தீர்ப்பளித்தது. இதனால், ஜுலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது எடப்பாடி அணிக்கு சாதகமாக அமைந்தது.

இதனிடையே அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான பி.வைரமுத்துவும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். கடந்த செப்டம்பர் 30ம் தேதி இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் அதிமுக பொதுக்குழுவுக்கு தேர்தலை நடத்தவும் தடை விதித்தது.

இதனிடையே ஜுலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு தீர்ப்பு சாதமாக வந்துள்ளதால் அவர் தற்காலிக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து இனி நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். 

அதிமுகவின் கட்சியையோ சின்னத்தையோ இனி ஓ பன்னீர்செல்வத்தால் பயன்படுத்த முடியாது.

ஒரு காலத்தில் ஓ பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் சேர்த்து வைத்த பாஜக, தற்போது இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கட்சியில் முழு செல்வாக்கு இருப்பதை அறிந்து அவரது வேட்பாளரை ஆதரிக்குமாறு, ஓ பன்னீர்செல்வத்தை வலியுறுத்தியது. அப்போதே எடப்பாடி பழனிசாமிக்குத்தான் அதிமுக கட்சியும் இரட்டை இலை சின்னமும் போகப்போகிறது என்பது மறைமுகமாக உணர்த்தியது.

இந்நிலையில் தான் இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கிய ஓ பன்னீர்செல்வம், அடுத்து என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓ பன்னீர்செல்வத்திற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்னவென்றால் சீராய்வு மனு தாக்கல் செய்வது தான். ஆனால் அது எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பது தெரியாது.

 இதற்கிடையே டெல்லியில் தமிழக மாணவர் மீது நடந்த ஏபிவிபி தாக்குதலுக்கு ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருந்தார். இதன் மூலம் பாஜகவிடம் இருந்து ஓ பன்னீர்செல்வம் விலகி நிர்பதற்கான சமிக்கையா என்ற கேள்வி எழுகிறது. பாஜக ஓ பன்னீர்செல்வத்தை கைவிட்டுவிட்டதாக அல்லது எடப்பாடிக்கு இருக்கும் ஆதரவை பார்த்து அவர் பக்கம் பாஜக மாறிவிட்டதாக என்ற கேள்வி எழுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். 

இனி ஓ பன்னீர்செல்வம் தனி அரசியல் கட்சியை தொடங்க வேண்டியதுதான் என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஒன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு செல்லலாம். ஆனால், அந்த மனுவை மீண்டும் உச்ச நீதிமன்றம் ஏற்க வாய்ப்பு மிக மிக குறைவு. பொதுவாக கட்சி உரிமை சார்ந்த விவகாரங்களை நீதிமன்றங்கள் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்க விரும்பாது. அப்படி எடுத்தாலும், கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை, வாக்கு வங்கியை காரணம் வைத்து எடப்பாடிக்குதான் மீண்டும் சாதகமான உத்தரவு வரும்.

இரண்டாவதாக ஓபிஎஸ் பிளான் பி-யாக பாஜகவில் இணைவது. தேவர் சமூக வாக்குகளுக்காக ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் மீண்டும் இணைக்க பாஜக தொடர் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், எடப்பாடி அதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததால் பாஜகவுக்கு அந்த பிளான் கைகொடுக்கவில்லை. 

மேலும், தேர்தல் நேரங்களில் பாஜகவை இரண்டாம் பட்சமாக எடப்பாடி பழனிசாமி கருதுவதை பாஜக விரும்பவில்லை. இந்நிலையில், அதிமுகவில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ள ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள் இணைத்துக்கொண்டு தேவர் வாக்கு வங்கியை கூட்டிக்கொள்ள பாஜக நிச்சயமாக முயற்சிக்கும்.

ஓபிஎஸ் இனி தர்ம யுத்தம் நடத்தியெல்லாம் ஒரு பிரயோஜனமும் கிடையாது. அவரால் தனி கட்சி தொடங்கி நடத்த முடியாது. ஒரு கட்சியில் முதல்வராக இருந்து விட்டு இன்னொரு திராவிட கட்சியில் அவர் போய் சேரவும் முடியாது. அப்படியே சேர்ந்தாலும் அவர் உரிய முக்கியத்துவம் கிடைக்காது. அதைவிட அவரை நம்பி சென்றுள்ள தொண்டர்களுக்கு ஒன்றுமே கிடைக்காது. எனவே அவருக்கான ஒரே வாய்ப்பாக இருப்பது. பாரதிய ஜனதா கட்சிக்கு போவது தான். மோடி மனதை வைத்தால் ஏதாவது ஒரு பதவியில் ஏதோ சில நாட்கள் இருக்கலாம். 

மற்றப்படி அரசியலில் அவரால் இனி எதையும் சாதிக்க முடியாது.

 எல்லாவற்றிற்கும் ஒரு முகராசி என்று ஒன்று வேண்டும். அது இல்லாவிட்டால் எப்பேர்ப்பட்ட சப்போர்ட் இருந்தாலும் யாராலும் எதையும் சாதிக்க முடியாது. ஓபிஎஸ் இப்போது அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.  உண்மையிலேயே (ஜீரோ) O.பன்னீர்செல்வம் என்பது இப்போது அவருக்கு சரியாக பொருந்தும்.