233 தடவையாக வேட்பு மனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்....!

233 தடவையாக  வேட்பு மனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்....!

 நடக்க போகும் இடைத்தேர்தலில், தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாகி உள்ளன.. இன்றைய தினம் வேட்புமனு தாக்கலும் தொடங்கி உள்ள நிலையில், தேர்தல் மன்னன் பத்மராஜனும் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் கே.பத்மராஜன்... இவர் சொந்தமாக ஒரு பஞ்சர் கடை வைத்து நடத்தி வந்தார்.. பிறகு படிப்படியாக உழைத்து முன்னேறி, சிறிய டயர் தொழிற்சாலையை நிறுவியுள்ளார்.

பிசினஸ் ஒருபக்கம் இருந்தாலும், தேர்தலில் போட்டியிடும் ஆசை பத்மராஜனுக்குள் எட்டிப்பார்த்துவிட்டது.. கடந்த 1988-ம் ஆண்டில் இருந்தே இந்த ஆசை துளிர்த்துள்ளது.

ஆனால், அவரது தேர்தலில் போட்டியிடும் ஆசை துளிர்த்த' நிலையில்தான் உள்ளதே தவிர, இதுவரை வளர்ந்தபாடு இல்லை.. 1988-ல்தான் முதல்முதலாக வேட்புமனுவை தாக்கல் செய்ய ஆரம்பித்தார்.. அதிலும் எந்த தேர்தலையும் விட்டுவைக்க மாட்டார்.. உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, நகராட்சி, சட்டப் பேரவை, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களவை தேர்தல், குடியரசுத் தலைவர், ஏன் இடைத்தேர்தல் வரை பத்மராஜனின் வேட்பு மனு இல்லாமல் நகர்ந்தது இல்லை.. எனினும் ஒன்றில்கூட அவர் இதுவரை வெற்றி பெற்றதில்லை... அதற்காக கவலைப்பட்டதும் இல்லை. கஷ்டப்பட்டதும் இல்லை.

தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்... இவரது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் பார்த்து பலபேர் வியந்து போயுள்ளனர். இப்போது 65 வயதாகிறது.. 1988ம் ஆண்டு முதல் 35 ஆண்டுகளாக, வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார். அதுவும் தன்னுடைய தோல்வியை அறிந்தே இந்த வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்.. 

அரசியலில்தான் முத்திரை பதிக்கவில்லையே தவிர, பத்மராஜன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுவிட்டார்.. வேட்புமனு தாக்கலுக்காகவே லிம்கா, கின்னஸ் புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளார்... அதனால்தான் தேர்தல் மன்னன் பத்மராஜன் என்று இவரை பலரும் அழைக்கிறார்கள்.

இவருடைய ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், தோற்க போவது 200 சதவீதம் உறுதி என்று தெரிந்தும்கூட, மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.. அதேபோல, பலமுறை சிக்கலையும் சந்தித்துள்ளார்.. 

221வது முறையாக கடந்த புதுச்சேரி தேர்தலில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார் பத்மராஜன்.. பொதுவாக, சுயேச்சை வேட்பாளராக 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும்... ஆனால், ஒருத்தரும் இவருக்காக முன்வரவில்லை.. முன்மொழிந்து கையெழுத்தும் போடவில்லை..

அதனால் அவரது வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு அதிகம் என்பதால், பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் தொகை செலுத்திய நிகழ்வும் அப்போது நடந்தது. 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே முதல் நபராக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துவிட்டார் பத்மராஜன்..

 இதுகுறித்து, பத்மராஜன் சொல்லும்போது, இதுவரை 32 எம்பி தேர்தல், 6 ஜனாதிபதி தேர்தல்கள், 6 துணை ஜனாதிபதி தேர்தல்கள், 72 சட்டமன்ற தேர்தல்கள், கர்நாடகாவில் 3 தேர்தல்கள், கவுன்சிலர் தேர்தல்கள் பஞ்சாயத்து யூனியன் தேர்தல்கள், பஞ்சாயத்து தலைவர் தேர்தல், வார்டு உறுப்பினர் தேர்தல், கூட்டுறவு தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளேன்.

முதலில் விழிப்புணர்வுக்காக தேர்தலில் போட்டியிட்டேன். பிறகு தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் என்னுடைய நண்பர்கள் உறவினர்கள் கிண்டலடித்தனர்.. அந்த கிண்டலைதான், கின்னஸ் சாதனையாக மாற்றினேன்.. 

இந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன் இதற்காக 233 தடவையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன்' என்றார்.. தொடர்ந்து பேசும்போது, அத்துடன் தன்னுடைய விடாமுயற்சி பற்றியும், தோல்விகள் குறித்தும் விரிவாக கூறியிருந்தார் பத்மராஜன்.

எப்போதுமே பத்மராஜன் செய்தியாளர்களிடம் பேட்டி தரும்போதெல்லாம் சொல்வது இந்த ஒரு விஷயத்தைதான். ''வெற்றி என்பது ஒரே நாளில் முடிந்துவிடும்.. ஆனால் தோல்வியடைவேன் என்று தெரிந்துதான் வேட்புமனு தாக்கல் செய்கிறேன்... வாழ்வில் தோல்வியும் முக்கியம்தானே? தோல்விகள்தான் நம்மை வழி நடத்தக்கூடியவை.. தொடர்ந்து போட்டியிட்டு அதையே சாதனையாகவும் மாற்றியுள்ளேன். இதுவரை 50 லட்சம் வரை வைப்புத் தொகைக்காக செலவிட்டுள்ளேன்' என்று பூரித்து சொல்கிறார் விடாமுயற்சி ஹீரோ பத்மராஜன்.

பலமுறை வெற்றி பெற்று பதவி சுகம், சொத்து பத்து சேர்த்தவர்கள் கூட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இவ்வளவு பணத்தை கொட்டியிருக்க மாட்டார்கள். இதுவரை 50 லட்சம் வரை டெபாசிட் தொகை மட்டும் செலுத்தி தேர்தல் ஆணையத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பத்ம ராஜனுக்கு தேர்தல் மன்னன் என்கிற பட்டத்தை தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. இது கூட ஒரு பைத்தியக்காரத்தனம்.