ஓசூரில் இருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் போகலாம்....!
தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவிற்கு செல்லும் மக்களின் முக்கிய தலைவலியே இந்த ட்ராபிக் தான். ஓசூர் வழியாக சாலையில் சென்றால் 3 முதல் 5 வரை வண்டியை உருட்டிக்கொண்டு போனால் தான் பெங்களூருவை அடையமுடியும். பெங்களுருவில் இருந்து விமானம் ஏறவேண்டும் என்றால் கூடுதலாக 5 மணிநேரம் முன்னரே புறப்பட வேண்டும். இந்த ட்ராபிக் இல்லாமல் ஹெலிகாப்டர் மூலம் 20 நிமிடங்களில் போக முடியும் என்றால் மகிழ்ச்சி தானே?
A BLADE India என்ற நிறுவனம் தான் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்த இன்ட்ரா-சிட்டி ஹெலிகாப்டர் சேவை IT மையமான ஓசூரில் இருந்து பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் வரும் பயணிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
BLADE India, AIRBUS மற்றும் Eve Air Mobility போன்ற நிறுவனங்களுடன் இணைந்து, மிகவும் நெரிசலான அல்லது அணுக முடியாத தரைவழிப் பாதைகளுக்குச் குறைந்த செலவிலான விமானப் போக்குவரத்து மாற்றுகளை உருவாக்கி வருகிறது.
2019 நவம்பரில் BLADE India மகாராஷ்டிரா- மும்பை, புனே மற்றும் ஷீரடி இடையே முதல் ஹெலிகாப்டர் சேவைகளை தொடங்கியது. பின்னர், ஹெலிகாப்டர் விமானங்களை கர்நாடகா மாநிலத்தில் கூர்க், ஹம்பி மற்றும் கபினி மற்றும் கோவாவிற்கு விரிவுபடுத்தியது. பின்னர் தற்போது பெங்களூருவிற்கு வந்துள்ளது.
பெங்களுருவில், முதல் கட்டமாக தற்போது காலையில் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து, தெற்கு நோக்கி ஓசூர் நகரத்திற்கும் மாலையில் ஓசூரில் இருந்து விமான நிலையத்திற்கும் சேவைகள் தொடங்கப்படுகிறது. சாலையில் 3 மணிநேரம் பயணிக்க வேண்டிய தூரத்தை இந்த ஹெலிகாப்டர் சேவையின் மூலம், 20 நிமிடங்களுக்குள் சென்றடையலாம்.
அதிகப்படியான வணிகப் பயணத்தில் ஈடுபடும் ஒருவருக்கு, இது ஒரு சிறந்த விருப்பமாகும். அவர்கள் பயணத்தில் பல மணிநேரங்களை இது மிச்சப்படுத்தும்.மேலும் கம்மி பட்ஜெட்டில் ஹெலிகாப்டரில் பயணிக்க விரும்பும் மக்களுக்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.