பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க குழு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
'பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் சட்டப்படி, பள்ளிகளில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக உள் புகார் குழுவை அமைக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை, கே.கே.நகர் வெரோனிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு:
ஒரு அரசு பள்ளியில், மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்தார். அம்மாணவி தற்கொலைக்கு முயற்சித்தார். தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு தண்டனை கிடைத்தாலும், குற்றங்கள் அதிகரிக்கின்றன. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மட்டுமன்றி, அதே பள்ளியில் படிக்கும் இதர குழந்தைகளுக்கு அச்ச உணர்வு ஏற்படுகிறது.
பள்ளி மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசகர், உதவியாளர்களுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு விழிப்புணர்வு, ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என, 2012ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இத்திட்டம் பெயரளவில் செயல்படுத்தப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு: 'பாலியல் துன்புறுத்தல் புகார்களை தெரிவிக்க அவரச உதவிக்கான இலவச எண், 14417 அனைத்து பள்ளி பாடப் புத்தகங்களிலும் அச்சிடப்படும். இதிலிருந்து வரும் அழைப்புகளை கையாள குழு அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது.
அதே நேரம் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்படாததில், இந்நீதிமன்றம் தன் பார்வையை செலுத்தாமல் இருக்க முடியாது. பாலியல் குற்றங்களிலிருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியம். மனுவை அரசு பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நடமாடும் ஆலோசனை மையங்கள் சரியாக செயல்படவில்லை எனில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, அவர்களின் கண்ணியம் மற்றும் ஆளுமையின் மீதான தாக்குதலாகும். அது குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை தடுக்கிறது. பள்ளிகளில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான கொள்கைகள், சட்டங்களை திறம்பட செயல்படுத்த தமிழக அரசுக்கு இந்நீதிமன்றம் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது.
மாநில குழந்தைகள் பாதுகாப்பு கமிஷனுடன் பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்
பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் சட்டப்படி, பள்ளிகளில் உள் புகார் குழு அமைக்க வேண்டும்
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கொள்கையை பள்ளிகள் உருவாக்கலாம். அதன் நகல்களை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வினியோகிக்க வேண்டும்
புகார் செய்ய மற்றும் அதற்கு தீர்வு காணும் வழிமுறை குறித்து ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
பாலியல் துன்புறுத்தலை தடுக்க பள்ளிகளில் அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதை ஒருங்கிணைத்து, கண்காணிக்க மாநில குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன், பள்ளிக் கல்வித் துறையின் பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழுவை உருவாக்க வேண்டும். நடமாடும் ஆலோசனை மையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு மனுவை பைசல் செய்தனர்.