தேன்கனிக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல் வாகன ஒட்டிகள் தவிப்பு

 தேன்கனிக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல் வாகன ஒட்டிகள் தவிப்பு

தேன்கனிக்கோட்டை, அக். 27–

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நகரில் பஞ்சப்பள்ளி மற்றும் அஞ்செட்டி சாலை பிரியும் இடத்தில் வனத்துறை சோதனைச்சாவடி உள்ளது. அஞ்செட்டி சாலை வழியாக தான் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு செல்ல முடியும். அதனால் இவ்வழியாக தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சோதனைச்சாவடி அருகே உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டது.

அதை சரி செய்வதாக கூறி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேற்று காலை தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி சாலையில் குறுக்கே ஜேசிபி வாகனத்தை நிறுத்தி குழாயை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சரியான தகவல் இல்லாமல் சீரமைப்பு பணியை மேற்கொண்டதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் பரிதவித்தனர். ஆம்புலன்ஸ் வாகனம் கூட சிக்கி கொண்டது.

தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை போலீசார் உரிய தகவல் தெரிவிக்காமல் சாலையில் ஜேசிபி வாகனத்தை நிறுத்தி பணியை மேற்கொண்டால் எப்படி என கேட்டு வாகன போக்குவரத்து இல்லாத நேரத்தில் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தினர். அதனால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதிகாரிகளின் மெத்தனபோக்கால் காலை 10:45 மணி முதல் மதியம் 12:15 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் கேள்வி கேட்டதற்கு அதிகாரிகள் அப்படி தான் பணியை செய்வோம் என அதிகார தோரணையில் கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

B.s.  Prakash