வேப்பனப்பள்ளி BJP பிரமுகரின் லஞ்ச வேட்டை...! மாநில தலைமை நடவடிக்கை எடுக்குமா....?

வேப்பனப்பள்ளி BJP பிரமுகரின் லஞ்ச வேட்டை...! மாநில தலைமை நடவடிக்கை எடுக்குமா....?


 தமிழகத்தில் பாஜக வளரவே முடியாது காலூன்ற முடியாது என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கூறி  வந்த நிலையில் இன்றைக்கு அவர்களே அச்சப்படும் அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை பாஜக பெற்று வருகிறது.

அதுவும் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் எதிர்க்கட்சி பாஜகதான் என்று சொல்லும் அளவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமே ஆங்காங்கு இருக்கின்ற கட்சியின் செயல் வீரர்கள் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் வகையில் இது தொடர்பான முகாம்களை நடத்தி மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு சேரும் வகையில் வழி காட்டி வருகின்றனர்.

இது ஒருபுறம் என்றால் இன்னொரு புறத்தில் இதை வைத்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கூட்டமும் தங்களது கைவரிசையை காட்டி வருகிறது. அதுவும் சொந்த கட்சியை  சார்ந்தவர்களே சொந்த கட்சி சொந்தங்களை ஏமாற்றி வருவது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினராக இருக்கின்ற சீனப்ப கவுடு என்பவர் இந்த பகுதியில் உள்ள மக்களிடம் மோடியின் திட்டங்களை பெற்று தருகிறேன் என்று கூறி பல ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு எவ்வித வேலையும் செய்து கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.

பொதுமக்களிடம் இருந்து மட்டுமல்ல சொந்த கட்சிக்காரர்கள்  இடமே பத்தாயிரம், இருபதாயிரம் என்று பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எந்தக் காரியமும் செய்து கொடுக்காமல் அல்வா கொடுத்து வருகிறார்.

இவரின் இந்த செயலால் கட்சியின் செல்வாக்கு இந்த பகுதியில் வெகுவாக குறைந்து வருகிறது.  இது தொடர்பாக கட்சியின் பெண் பிரமுகர் ஒருவர் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மத்திய அரசின் நீர்வள ஆதார திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் போர்வெல் கிணறுகளுக்கு 50,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தை பெற்றுத் தருவதற்கு ரூபாய் 20,000 வரை இவர் அனைவரிடமும் லஞ்சமாக பெற்று வருகிறார்.  அப்படி பணம் கொடுத்தும் யாருக்கும் எந்தக் காரியமும் செய்யாமல் ஏமாற்றி வருவது சொந்த கட்சியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பிரமுகர் ஒருவர் துணையாக இருப்பதால் அவர் கொடுக்கும் தைரியத்தில்தான் இவர் இதையெல்லாம் செய்து வருகிறார் என்று சொந்த கட்சியை சேர்ந்தவர்களே குற்றம் சுமத்துகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி பாஜகவின் செல்வாக்கு மிகுந்த தொகுதியாக வளர்ந்துள்ளது.  அடுத்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்து  நின்றால் கூட வெற்றி பெறும் அளவிற்கு மக்கள் செல்வாக்கு பெற்றுள்ளது  இதற்கு சூளகிரியில் அண்ணாமலை பங்கேற்றபோது கூட்டமே சாட்சி.

இந்தநிலையில் வேப்பனப்பள்ளி இருக்கும் மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனப்ப கவுடு செய்து வரும் இதுபோன்ற செயல்களால் கட்சியின் வளர்ச்சியும் செல்வாக்கும் பாதிக்கும் நிலை உள்ளது. மாநில தலைமை இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் ஒழிய எந்த பகுதியில் கட்சியை காப்பாற்ற முடியாது.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி