தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் உயர் நீதிமன்றம் அதிரடி...!

 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் உயர் நீதிமன்றம் அதிரடி...!


தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.கடந்த மாதம் 23ம் தேதி, பள்ளிக் கல்வி ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள, முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'பள்ளி நிர்வாகம் வாயிலாக, 13 ஆயிரத்து 331 ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, பள்ளி கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. 'இதில், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சியை கட்டாயமாக்கவில்லை. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:முன்னுரிமைப்படி, குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கான விண்ணப்பங்களை, பள்ளிக் கல்வி ஆணையர் பரிசீலிக்கலாம். பட்டப்படிப்பு மட்டும் முடித்தவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்கள், விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்; மறு உத்தரவு வரும் வரை, அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும்.மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் நேரில் அல்லது 'ஆன்லைன், இ - மெயில்' வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வகையில், உரிய உத்தரவுகளை பள்ளிக் கல்வி ஆணையர் பிறப்பிக்க வேண்டும்.

அந்த விண்ணப்பங்களை, பள்ளி நிர்வாக குழு பரிசீலனைக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும்.இந்த நியமனங்கள் எல்லாம் தற்காலிக அடிப்படையிலானது; வழக்கின் முடிவைப் பொறுத்து அது அமையும். எனவே, புதிதாக திருத்தப்பட்ட சுற்றறிக்கையை, பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட வேண்டும்.கல்வி பெறும் உரிமை சட்ட வழிமுறைகளின்படி, தகுதியான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

பள்ளிக் கல்வி ஆணையர், அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு, மீண்டும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் சஞ்சய், ரவிச்சந்திரன்; அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகினர்.பள்ளிக் கல்வி ஆணையர் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார். 24 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பட்டியல் அடங்கிய அட்டவணையையும் தாக்கல் செய்தார்.

அறிக்கையை பரிசீலித்த பின், நீதிபதி கிருஷ்ணகுார் பிறப்பித்த உத்தரவு:பள்ளி கல்வி ஆணையர் தாக்கல் செய்த அட்டவணையின்படி, ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதாகவும், அதில், உரிய கல்வி தகுதி உடன், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என, 28 ஆயிரத்து 984 விண்ணப்பங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விசாரணையை, வரும் 15க்கு, நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.