தர்மபுரி, பாலக்கோடு வட்டார பகுதிகளைச் சேர்ந்த 204 பள்ளி வாகனங்கள் ஆய்வு.

தர்மபுரி, பாலக்கோடு வட்டார பகுதிகளைச் சேர்ந்த 204 பள்ளி வாகனங்கள் ஆய்வு. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகள் 2012, விதி 11- ன்படி ஒவ்வொரு வருடமும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்ய  மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவின் தலைவர் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் உறுப்பினர்களாக  வட்டாரப் போக்குவரத்து அலுவலர்,  துணை காவல் கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலர்/ மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை -1 ஆகியோர் உள்ளனர். 

இக்குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் பொதுவான ஓர் இடத்தில் வாகனங்களின் தகுதி குறித்து கூட்டு ஆய்வு மேற்கொள்வர்.

இந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பாலக்கோடு பகுதி அலுவலகங்களை சார்ந்த பள்ளி வாகனங்கள்  தருமபுரி சுற்றுலா மாளிகை பின்புறம் உள்ள மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார். 

மேற்படி ஆய்வில் 204 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் குறைபாடுகளுடைய 3 வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. மேலும், சிறு குறைபாடுகளுடைய 22 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவ்வாகனங்களின் குறைகளை நிவர்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஆய்விற்கு ஆஜர்படுத்த அறிவுறுத்தப்பட்டது. 

இச்சோதனையில் பள்ளி வாகனங்களில் அவசர கால வழி, பள்ளி பேருந்தில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ், தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைதளம், ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 தருமபுரி தீயணைப்புத்துறை துறை சார்பில் தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது குறித்து அனைத்து ஓட்டுநர்களுக்கு செயல்விளக்கமும், வாகனங்களில் தீப்பிடித்தால் எவ்வாறு தீயணைப்பது குறித்த செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. 

மேலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், தருமபுரி அவர்கள் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு Hand Brake பயன்படுத்துவது குறித்தும், வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் செயல்விளக்கம் செய்து அறிவுரை வழங்கினார். 

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் இம்மாத இறுதிக்குள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் வாகனம் சிறைப்பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.