RTE - 25% இலவச சேர்க்கை தேதி நீட்டிப்பு: மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவார்களா...?
இந்த ஆண்டிற்கான RTE இலவச சேர்க்கை இறுதி தேதி 18.05.2022 லிருந்து ஒரு வாரம் நீட்டித்து 25.05.2022 வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
இது வரவேற்கத் தகுந்த விஷயம் என்று சொன்னால் கூட இதில் நிறைய வருத்தமும் இருக்கிறது.
தமிழக அரசை பொருத்தவரை இந்த இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பது என்பது ஒரு கடமைக்காக மட்டுமே செய்து வருகிறது.
உண்மையிலேயே வசதி வாய்ப்பற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏழை குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து தரமான கல்வி பயில வேண்டும் என்கிற உயர்ந்த எண்ணம் இல்லாமல் செயல்பட்டு வருவது வேதனைக்குரிய விஷயம்.
இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில் தமிழக அரசு பல்வேறு குழப்பங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இந்த திட்டத்தின், இந்த சட்டத்தின் முழுமையான விவரங்களை தெரியாமல் அரசும், ஆட்சியாளர்களும்், அமைச்சர் பெருமக்களும் தவறான பல தகவல்களை கொடுத்து வருவதால் பொதுமக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து வருகிறார்கள்.. இதனால் பல தனியார் பள்ளிகளில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் சேருகின்ற மாணவர்களுக்கு தமிழக அரசு கல்விக்கட்டணம் மட்டும் தான் வழங்குகிறது. அதைக்கூட முறையாக, சரியாக வழங்குவதில்லை. ஒவ்வொரு பள்ளிக்கு ஒவ்வொரு விதமான கட்டணத்தை வழங்கி வருகிறது இந்த ஆண்டு அதில் கூட 25 சதவீத கட்டணத்தை ஆட்டையை போட்டு விட்டது.
இது மட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் சேர்ந்து படிக்கின்ற மாணவர்களுக்கு பாட புத்தகம், நோட்டு புத்தகம், பள்ளி சீருடை, வாகன கட்டணம் என்று பல இருக்கின்றது. இவை எல்லாவற்றையும் இலவசமாக வழங்க வேண்டும் என்று ஒரு சிலர் வலியுறுத்தி வருகின்றனர். ஏன் அமைச்சர்களே அப்படிதான் சொல்லுகிறார்கள்...
இப்போது தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்துள்ள ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கட்டணத்தை வைத்துக்கொண்டு இவற்றையெல்லாம் எப்படி வழங்க முடியும் இந்த மாணவர்களுக்கு தரமான கல்வி எப்படி வழங்க முடியும் என்பதை இவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்த ஆண்டு இந்த திட்டத்தில் ஒரு பெரிய கூத்து ஒன்று நடந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் அதிகப்படியாக வழங்கப்பட்டிருந்த இட ஒதுக்கீட்டை 75 சதவிகிதம் அளவிற்கு குறைத்து ஒரு பள்ளிக்கு 8 சீட் 15 சீட் என்று மட்டுமே வழங்கி உள்ளதால் தற்போது விண்ணப்பித்து இருக்கிற ஏராளமான மாணவர்களுக்கு எப்படி இட ஒதுக்கீடு வழங்குவது என்கிற பெரிய குழப்பம் நிலவுகிறது.
அரசு அறிவுறுத்தலின் பெயரில், அதிக அளவில் RTE இலவச ஒதுக்கீடு சேர்க்கை குறித்து பலவிதமான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, பல பள்ளிகளுக்கு அதிக அளவு மாணவர்கள் RTE Admission Application செய்துள்ளனர்.
குறைவான அளவே மாணவர்கள் சேர்க்கை ஒதுக்கீடு உள்ளதால், பல பள்ளிகளில் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்களிடம் வீனான விவாதம் செய்கின்றனர்.
எனவே அரசு சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
இந்த திட்டத்தில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவிற்கான காலத்தை மட்டும் அதிகரித்தால் போதாது அதிக அளவில் விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்குவதற்கு ஏற்ற படி ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது..