ஊராட்சி மன்ற தலைவரை "டம்மி"யாக வைத்திருக்கும் கணவர்: கூத்தாண்டக்குப்பம் ஊராட்சியில் நடக்கும் கொடுமை..
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ளது கூத்தாண்டகுப்பம் ஊராட்சி. இந்த கூத்தாண்டகுப்பம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஜெயலட்சுமி.இவரது கணவர் குரங்காட்டி வட்டத்தை சேர்ந்த சுரேஷ். கடந்த ஆண்டு 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்தான் ஜெயலட்சுமி.இவரது கணவர் சுரேஷின் பூர்வீகம் கூத்தாண்டகுப்பமாக இருந்தாலும் , 15 ஆண்டுகளுக்கு முன்பு கேத்தாண்டப்பட்டி ரெயில்வே பாதையில் இரும்பு பொருட்கள் திருடியது சம்மந்தமாக அப்போது ஜோலார்பேட்டை இரயில்வே போலீசார் சிலரை தேடி வந்தனர். அப்போது இந்த ஊரை விட்டு ஓடி போனவர்தான் சுரேஷ்.
சென்னை புறநகர் பகுதியில் மணல், மண் மற்றும் கனிமவள பொருட்களை களவாடி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.இந்த
ஊராட்சி மன்ற தேர்தலின்போது வாக்குகள் சேகரிக்க மட்டுமே வீதி வீதியாக கணவர் சுரேஷ் உடன் வலம் வந்தார் ஜெயலட்சுமி. அதன் பின்னர் அவ்வளவாக எந்த அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை ஜெயலட்சுமி.
இந்நிலையில் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பணிகளை பார்வையிடுவது , அரசு அலுவலகங்கள் சென்று ஊராட்சி மன்றத்தின் சார்பில் கோரிக்கை வைப்பது , ஊராட்சி மன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று சுரேஷ் தான்தோன்றித்தனமாக நடந்து வருகிறார். ஊராட்சி மன்ற நிகழ்ச்சிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவரான அவரது மனைவி ஜெயலட்சுமியை அழைத்து செல்வதில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர் இந்த ஊராட்சியின் பொதுமக்கள். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் சுரேஷின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் "அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வருவாய்த் துறையினர் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை" என குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
கூத்தாண்ட குப்பம் பெருமாள் கோயில் வட்டம் பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கருக்கும் மேற்பட்ட வருவாய் துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் அரசு அனுமதியின்றி மண்ணை சுரண்டி எடுத்து பல்வேறு பணிகளுக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது இதுதொடர்பாக வருவாய்த் துறையினருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் கூத்தாண்டகுப்பம் சுரேஷ் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், கூத்தாண்டகுப்பம் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டம், பள்ளி மேலாண்மை குழு கூட்டம், வீடு தேடி கல்வி கூட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமிக்கு பதிலாக இவரே ஊராட்சி மன்றத் தலைவர் போல் செயல்பட்டு வருவதாகவும், 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு பணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கனிம வளங்களை சுரண்டி கொள்ளை அடித்தும் , ஊராட்சி மன்ற தலைவர் பெண் என்பதால் பெண்ணின் சுதந்திரத்தை உரிமையை பறிக்கும் வகையில் செயல்படும் இவர் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்ற உன்னத நோக்கோடு , உள்ளாட்சி பொறுப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை , செயல்படாமல் வைத்துக் கொண்டு தானே ஊராட்சி மன்ற தலைவராக வலம் வரும் கூத்தாண்டகுப்பம் சுரேஷ் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் " என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- தீரன் வீரபத்ரன்