ஓசூரில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்.
ஓசூரில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம். மாநிலத்திற்கு முன்மாதிரியான முகமாக அமையும் என ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் நம்பிக்கை.*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக அரசின் சார்பில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் சிறப்பு மெகா வேலைவாய்ப்பு முகாம் வரும் ஞாயிறன்று நடைபெற உள்ளது. 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ள இதில் மாநிலத்திற்கு முன்மாதிரியான முகாமாக அமையும் என ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வேலையில்லாத இளைஞர்கள் இல்லை என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் முகஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஓசூரில் சிறப்பு மெகா வேலைவாய்ப்பு முகாம் அரசின் சார்பில் வரும் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. ஓசூர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணைகளை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற வழங்க உள்ளார்.
இதற்காக நடைபெற்றுவரும் ஏற்பாடுகளை ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும் கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான ஒய். பிரகாஷ் மற்றும் ஓசூர் மாநகர மேயர் எஸ். ஏ. சத்யா உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பிரகாஷ்,
5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் அரசின் சார்பில் நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்படுத்திக் கொள்ளலாம். சுமார் 300க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்று அவர்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முகாமை அனைத்து தரப்பு இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன் தமிழகத்திலேயே முன்மாதிரியான முகாமாக இது அமையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓசூர் செய்தியாளர்: E V. பழனியப்பன்