திசைமாறுகிறதா இல்லம் தேடிக் கல்வி ? தீர்வுகள் என்னென்ன?
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்களுக்குக் கற்றல் பாதிப்பு, இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவும், பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காகவும், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இத்திட்டம் பேசுபொருளாகியுள்ளது.
நோக்கம் சரியாக உள்ளதாகவும், ஆனால், நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் இதில் இடம் பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் என்னென்ன, அவற்றை எப்படிக் களையலாம் என்பது குறித்து எழுத்தாளர், ஆசிரியர் சிகரம் சதிஷிடம் பேசினோம்.
அவர் சிக்கல்களைக் கூறியதுடன் தீர்வுகளையும் முன்வைத்துப் பேசினார்.
''உலகையே முடக்கிவைத்த கொரோனா என்னும் பெருந்தொற்றுக் காலத்தில் பொருளாதாரம், சுகாதாரம் இவற்றோடு பெரிதும் பாதிக்கப்பட்டது கல்வி. வருங்காலத் தலைமுறையை வளப்படுத்தும் கல்வியை எப்படியேனும் மாணவச் செல்வங்களுக்கு வழங்கிவிட வேண்டும் என்னும் நோக்கில் ஒவ்வொரு நாடும் பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வந்த சூழலில் எல்லோரும் இணையத்தைத் தேடிக்கொண்டிருந்த சூழலில் இந்தியாவில் தமிழக அரசு இல்லம் தேடிக் கல்வி என்னும் ஒரு முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் நேரடியாகத் தொடங்கி வைத்த திட்டமாக இத்திட்டம் இருப்பதால், இதற்கென தனி IAS அதிகாரி ஒருவரை நியமித்து, அதன்மூலம் இப்பணிகளைத் துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றது பள்ளிக் கல்வித்துறை. எந்தவொரு அரசின் திட்டமாக இருந்தாலும் முதலில் சோதனையாக சில மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு அதன் நிறை குறைகளைக் களைந்து பிறகு அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.
ஆனால் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் சோதனையாக 12 மாவட்டங்களில் செயல்பட ஆரம்பித்த இத்திட்டம் அடுத்த மாதத்திலேயே, அதன் நிறை குறைகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்பாகவே, அனைத்து மாவட்டங்களிலும் கட்டாயமாக ஆரம்பிக்கப்பட்ட போதே இத்திட்டம் திசை மாறி போகக்கூடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடுதான் இன்னும் தமிழகம் முழுவதும் மையங்கள் ஆரம்பிக்க இயலாத சூழல் நிலவுகிறது.
இத்திட்டம் தொடங்கப்பட்டு 6 மாதங்களைக் கடந்துவிட்ட போதிலும்,01.04.22 நாளது தேதிவரை இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு இதுவரை வராத மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 11 லட்சத்திற்கு மேலாக உள்ளது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரையில் 33% குழந்தைகள் மட்டுமே இதுவரை இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு வந்துள்ளனர். பள்ளிக்கு தவறாமல் வந்துவிடுகின்ற குழந்தைகள் வீட்டிற்கு அருகிலேயே செயல்படும் இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு ஏன் வர மறுக்கின்றார்கள்?
பள்ளிக்கு வர வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கு இது நடத்தப்படவில்லை. ஏற்கெனவே பள்ளிகளில் தொடர்ந்து படித்து வரக்கூடிய குழந்தைகளுக்கே இவ்வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
காலை 9 மணிக்கு பள்ளிக்கு வரும் குழந்தைகள் மாலை 4.30 வரை பள்ளியிலிருந்து விட்டு, மீண்டும் 5 மணியிலிருந்து 7 மணிவரை இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளிலும் இருக்கின்றனர். பள்ளி செயல்படாமல் இருந்த காலகட்டத்தில் வகுப்புகள் நடைபெற்றது மிகத் தேவையான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் இல்லம் தேடிக் கல்வியும் ஒரு மாற்று முறைப் பள்ளியைப் போல செயல்படத் தொடங்கியிருப்பதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.
காலை முழுதும் படிப்பு பின்பு மாலை முழுதும் விளையாட்டு என்னும் உளவியல் சிந்தனை இங்கு பாதிக்கப்படுவதாக இருக்கின்றது. எனவே நடத்தப்படுகின்ற நேரத்தை அல்லது நாட்களில் ஏதேனும் மாற்றங்களைக் கொண்டுவர அரசு பரிசீலிக்க வேண்டும். புள்ளி விவரங்கள் அடிப்படையில் திட்டத்தைச் செயல்படுத்துவதை நிறுத்திவிட்டு, பள்ளி விவரங்களின் அடிப்படையில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
இல்லம் தேடிக் கல்வி மையங்களிலும் ஆன்லைனில் வருகைப்பதிவு, EMIS அம்சங்கள் அங்கும் ஏன்? எனும் கேள்வியை எழுப்புகின்றது. வழக்கமான பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து 25% தொகையை இல்லம்தேடிக் கல்வி மையங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்னும் உத்தரவும் தவறான ஒன்றாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவாக இருக்கின்ற சூழலில், முறைசார் கல்விக்கென வழங்கப்பட்ட நிதியிலிருந்து 25% இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு என ஏன் ஒதுக்க வேண்டும் என்பது ஆசிரியர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
அத்தோடு மட்டுமல்லாமல், மிகக்குறைந்த காலகட்ட அளவில் இயங்கும் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களை, நீண்டகாலம் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழுவில் இணைக்க வேண்டும் என்னும் பள்ளிக் கல்வித்துறையின் செயல் முறைகளும் தவறான வழிகாட்டலாகவே தோன்றுகின்றது. பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைச் சரிசெய்ய ஏற்படுத்தப்பட்ட இல்லம் தேடிக் கல்வி மையங்களின் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், வழிகாட்டவும் பெரும்பாலும் தனியார் அமைப்புகள் (CSO )மற்றும் அறக்கொடை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை நியமித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பள்ளிக்கு வராதவர்களுக்கோ, அல்லது வர வாய்ப்பில்லாதவர்களுக்கோ கல்வி வழங்கப்படவில்லை. ஏற்கெனவே முறையான கல்வியை பள்ளிகளில் தொடர்ந்து பயின்றுவரக்கூடிய நபர்களுக்கு மட்டுமே, இல்லம் தேடிக் கல்வியில் சேர்க்கை வழங்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. எனவே நேரடிக் கற்பித்தல் அனுபவம் கொண்டவர்களை மட்டுமே, இத்திட்டத்தின் பொறுப்பாளர்களாக நியமித்திருக்க வேண்டும்.
ஏன் மண்டலங்களுக்கு ஓர் இணை இயக்குநரை நியமித்து, இதனை மேற்பார்வை செய்யக்கூடாது. இவ்வாறு நிகழும் பட்சத்தில் கற்றலின் நோக்கம் அறிந்தவர்களால் இந்த ஆய்வு நடைபெறும்பொழுது, இத்திட்டத்தின் நோக்கம் எளிதில் நிறைவேறும். ஆனால் அகரம் பவுண்டேசன், எய்டு இந்தியா, அறிவியல் இயக்கம், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் போன்ற சமூகப்பணி அமைப்புகளைச் சார்ந்த நபர்களை 100% மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கும்பொழுது, முற்றிலும் அரசினுடைய திட்டமான இல்லம் தேடிக் கல்விக்குப் பொறுப்பாளர்களாக சமூகப்பணி அமைப்புகளான (civil society Organisation) போன்ற தனியார் அமைப்புகளை நியமிப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது எனப் புரியாத புதிராக இருக்கின்றது.
புதிய தேசியக் கல்விக் கொள்கையில் தனியார்களை அனுமதிக்கும் உட்கூறுகளை மேற்கோள் காட்டி, அவற்றை வலுவாக எதிர்க்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்தில் தனியார்களை எவ்வாறு அதிகாரிகள் அனுமதிக்கின்றனர் என்பது கல்வியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெருத்த கேள்வியை எழுப்பி இருக்கின்றது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கு திட்ட அலுவலராக நியமிக்கப்பட்ட இளம்பகவத் IAS இத்திட்டத்தின் முழு வெற்றிக்காக மிகக் கடுமையாக உழைக்கின்றார். ஆனால் இன்னும் அதற்கான இலக்கை நோக்கிச் செல்வதில் நிறைய இடர்ப்பாடுகளைக் கடக்க வேண்டி இருக்கின்றது. அதே நேரத்தில் கள நிலவரத்தை அறிந்த அலுவலர்களோ, ஆசிரியர்களோ இத்திட்டத்தில் இணைக்கப்படாதவரை இந்த இடர்ப்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். இத்திட்டத்தில் மாவட்ட நிர்வாகங்களுக்கு இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் இத்திட்டம் மிக விரைவில் இலக்கை அடையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.