மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை - இது ஸ்டாலினுக்கு தேவையில்லாத வேலை....?!
அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஊரகப் பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்கள் 25,354 பேரை திமுக அரசு 1989-ம் ஆண்டில் மக்கள் நலப்பணியாளர்களாக நியமித்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும். விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளராக சேரலாம்.
25,354 மக்கள் நலப்பணியாளர்கள் கலைஞர் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்களை நீக்கி விட்டனர்.
"மாநிலத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் உள்ள வேலை உறுதித்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பணிக்கு விருப்பம் தெரிவிக்க கூடிய முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த பணி வழங்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கென ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பு ஊதியம் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் ஏற்கனவே கிராம ஊராட்சி பணிகளில் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கிராம ஊராட்சி பணிகளை கூடுதலாக கவனித்து கொள்ள வாய்ப்பளித்து அதற்கென மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து மாதம் ரூ.2500 வழங்கி ஒட்டுமொத்த மதிப்பு ஊதியமாக ரூ.7500 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நலப்பணியாளர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண திமுக அரசு பேச்சுவார்த்தை நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அதிமுக ஆட்சிக்கு வருகின்ற போது இவர்களை பணியில் விட்டு எடுப்பதும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருகின்ற போது இவர்களை பணி அமர்த்தும் என்று சிறுபிள்ளைத்தனமாக ஆட்சியாளர்களின் போக்கு சென்று கொண்டுள்ளது.
கடந்த காலங்களில் இவர்கள் என்ன மக்கள் நல பணி செய்தார்கள் என்பது அனைவருக்கும் கண்கூடாக நன்றாகவே தெரியும். அதனால் தான் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது இவர்களை பணியை விட்டு தூக்கியபோது யாரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இப்போது மீண்டும் இவர்களுக்கு வேலை என்பது வேடிக்கையாக இருக்கிறது. ஊராட்சிகளில் இப்போது பணியாற்றுகின்ற ஊராட்சிமன்ற செயலர்களுக்கே ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு செய்வதற்கே வேலை இல்லை என்கிற கேள்வி
எழுந்துள்ளது. இருக்கிற வேலைகளை இவர்களை வைத்து செய்து கொள்ளலாம். தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில் இவர்களுக்கு வேலை கொடுத்தே ஆக வேண்டுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.