தமிழகத்திலேயே அதிக முதலீடுகளை ஈர்க்கும் மாநகரமாக மாறிவரும் ஓசூர்...!

தமிழகத்திலேயே அதிக முதலீடுகளை ஈர்க்கும் மாநகரமாக மாறிவரும் ஓசூர்...!

சென்னை, கோவையை போல் ஓசூரும் பெரிய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதன்மூலம் சென்னை, கோவையைே பால் தமிழகத்தின் தொழில் புரட்சிக்கு ஓசூர் பெரும் பங்கு வகித்து வருகிறது.

தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஓசூர், 50 ஆண்டுகளுக்கு முன்பு 1973ம் ஆண்டில் குறைந்த மக்கள்தொகையுடன் மலைப்பாங்கான நிலப்பரப்பு கொண்ட பகுதியாக இருந்தது.தற்போது சென்னை, கோவைக்கு போட்டியாக ஓசூர் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதனால் தமிழகத்தின் தொழில் புரட்சிக்கு ஓசூர் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதற்கு தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தின் (SIPCOT) சிப்காட் இங்கு அமைந்துள்ளது தான் காரணமாகும். சிப்காட் அமைந்தது முதல் சென்னை, கோவையுடன் சேர்ந்து முதலீடுகள் குவியும் இடமாக ஓசூரும் மாற்றமடைய துவங்கியது. தற்போது ஒரு நகர்ப்புற காஸ்மோபாலிட்டன் நகரமாக ஓசூர் உருவாகி உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக மிகப்பெரிய முதலீடுகளை ஓசூர் தன்வசப்படுத்தி உள்ளது.

2 பெரிய நிறுவனங்கள்

குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் உத்தனபள்ளியில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன முதலீட்டையும், போச்சம்பள்ளியில் ஓலா நிறுவனத்தின் ரூ.2500 கோடி மதிப்பிலான மின்வாகன ஆலையையும் ஈர்த்ததை கூறலாம். இந்த முதலீடுகள் ஓசூரின் புதிய தொழில் புரட்சியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

இங்கு முதலில் டிவிஎஸ் மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் மற்றும் டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன. இப்போது பார்மா, எலக்ட்ரானிக்ஸ், உணவு பதப்படுத்துதல், ஆடைகள், கிரானைட்கள், தளவாடங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மத்திய அரசின் நடவடிக்கையால் ஓசூரின் டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் சிம்பிள் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்திக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள துவங்கியுள்ளன. எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் உதிரிபாகங்களுக்கான நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது.

காரணம் என்ன

பெங்களூருவுக்கு அருகே உரிய நெடுஞ்சாலை வசதியுடன் இருப்பதோடு, தொழிற்சாலைகளுக்கான காலநிலை ஓசூரில் இருப்பது தான் இதற்கான பிரதான காரணமாக கூறப்படுகிறது. இதுபற்றி ஓசூர் சிறு, குறு தொழில்கள் சங்க தலைவர் வேல்முருகன் கூறுகையில், ‛‛பெங்களூருவின் கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர் பிரச்சனை இங்கு இல்லை. இது தொழில் செய்ய ஏற்ற இடமாக உள்ளது. ஓசூரில் நிலவிய தொழிலாளர் பிரச்சனை 1990 காலக்கட்டத்திலேயே முடிவுக்கு வந்தது. தொழிற்சாலை, தொழிலாளர்கள் இடையேயான உறவு முதிர்ச்சியடைந்துள்ளது. மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடனான உறவு பெரிய பிளஸ் பாயிண்டாக இங்கு உள்ளது'' என்றார்.

விரிவாக்கம்

ஓசூர் தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜகோபாலன் கூறுகையில், ‛‛ஓசூரில் தொழில் செய்ய ஏற்ற காலநிலை உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளின் கூட்டு பங்களிப்பும் முக்கிய காரணமாக உள்ளது'' என்றார்.
கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கூறுகையில், ‛‛சிப்காட் 3 மற்றும் 4வது பிரிவுக்கு 2,23 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 1,400 ஏக்கரை நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது'' என்றார்.

வேலைவாய்ப்பு

மேலும் தொடர்ந்து அதிகரித்து வரும் தொழிற்சாலைகளில் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. டாடா எலக்டரானிக்ஸ் நிறுவனம் சார்பில் கூறுகையில், ‛‛ ஏஜென்டுகள் இன்றியும், யாருடைய வற்புறுத்தல் இன்றியும் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றன'' என்றன. இதற்கிடையே சில நிறுவனங்கள் ‛ஸ்கீம்' வேலைவாய்ப்பு முறை விரைவில் அமலாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பெண்களுக்கு 2 முதல் 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படைகளில் பணி புரிய முடியும். இது எப்படி செயல்பட உள்ளது என்பது அமலான பிறகே தெரியும்.

ஓசூர் செய்தியாளர்:E.V. பழனியப்பன்