ஆசிரியரை தாக்க முயன்ற மாணவன் தற்காலிக நீக்கம்...!?

ஆசிரியரை தாக்க முயன்ற மாணவன் தற்காலிக நீக்கம்...!?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தாவரவியல் ஆசிரியராக பணிபுரிபவர் சஞ்ஜெய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இருந்து பணிமாறுதல் பெற்று மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி காலை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாரி என்ற மாணவன், பொது தேர்வு நெருங்கி வரும் நிலையில் தாவரவியல் ஆசிரியர் செய்முறை தேர்விற்காக கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்தை சமர்பிக்கும் படி கூறியுள்ளார். அப்பொழுது மாரி என்ற மாணவன் ஆசிரியர் முன்னரே வகுப்பறையில் பாய் போட்டு படுத்துள்ளான், இதனை ஆசிரியர் கண்டித்தபோது, ஆசிரியரை தகாத வார்த்தைகளில் பேசி, தாக்க முயன்றுள்ளான்.

இதனை சக மாணவர்களான யோனோ, செல்வகுமார் ஆகியோர் செல்போனில் அதனை பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை முதல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது,

இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் பழனி பள்ளி தலைமையாசிரியர் வேலன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அந்த மாணவன் அதிக அளவு ஆபாசமாக பேசியதும், ஆசிரியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஈடுப்பட்டது உறுதியானது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மாரி, செல்வகுமார், யோனோ ஆகிய மூன்று மாணவர்களை பள்ளியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய கோட்டாச்சியர் கல்வித்துறைக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சமூகத்தில் ஒழுக்கமாக வளர வேண்டும் என கோட்டாட்சியர் அறிவுரை வழங்கினார். இச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார். இன்று காலை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பள்ளி தலைமையாசிரியர் வேலன், மூன்று மாணவர்களை தற்காலிகமாகப் பள்ளிக்கு வர அனுமதியில்லை என உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாணவனே தற்காலிக நீக்கம் செய்தது தவறு. இதுபோன்ற தீய ஒழுக்கம் உள்ள மாணவர்களை இனி எந்த காலத்திலும் பள்ளிக்குள் வர விடக்கூடாது.  இப்படிப்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வந்தால் நல்ல மாணவர்களும் கெட்டுப் போய்விடுவார்கள்.  எனவே இதுபோன்ற  மாணவர்களை சிறையில் அடைத்து சீர்த்திருத்தம் செய்வதுதான் நல்லது என்கிறார்கள் பொதுமக்கள்.