அவசரப்பட்டு போயிட்டா ஆபத்தாய் போய்விடும்...! ராஜகண்ணப்பன் ஐ ஆறுதல் படுத்திய மு.க. ஸ்டாலின்...!!
போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதிப் பெயரைக் கூறி திட்டினார் என்று எழுந்த சர்ச்சையை அடுத்து, அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். பாதிக்கப்பட்டவர் தரப்பு வீடியோ விவகாரம் பூதாகரமாக வெடித்ததில் கோபமடைந்துள்ளார் முதல்வர். இது மட்டுமின்றி, தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் கொள்முதல் தொடர்பாகவும், முதல்வரின் காதுக்குச் சென்றுள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் முதல்வர் அவரின் துறையை மாற்றியதாகச் சொல்லப்பட்டது. இதனால் ராஜகண்ணப்பன் தரப்பு கடும் அதிருப்தி அடைந்ததாகத் தெரிகிறது. என்ன நடந்தது என்பதை முதல்வரிடம் விளக்க ராஜகண்ணப்பன் டெல்லி அறிவாலயம் திறப்பு விழாவுக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு முதல்வரை சந்தித்துப் பேசும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
மிகுந்த வருத்தத்திலிருந்த ராஜகண்ணப்பன், சபரீசனுக்கு போன் செய்து பேசியுள்ளார், `என் தரப்பு நியாயம் என்னன்னு கூட கூப்பிட்டு கேக்கலை' எனத் தனது சோகத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார். பதிலுக்கு `நீங்க கவலைப்படாதீங்க மாமாகிட்ட நான் பேசுறேன்' என்று ஆறுதல் வார்த்தைகளால் ராஜகண்ணப்பனை ஆசுவாசப் படுத்தியுள்ளார் சபரீசன். இந்த நிலையில்தான் வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவிகித சிறப்பு ஒதுக்கீடு தொடர்பாகச் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பேசியிருந்தார். இந்த அறிவிப்புக்கு அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் பா.ம.க சார்பில் முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது ராஜகண்ணப்பனும் உடனிருந்தார்.
அப்போது ராஜகண்ணப்பனிடம் பேசிய முதல்வர், `விடுங்க சில நேரங்களில் இப்படிக் கல்லடி படத்தான் செய்யும்' என்று ராஜகண்ணப்பனை ஆறுதல் படுத்தியுள்ளார். முதல்வரின் இந்த செயலுக்கு சபரீசன் பேசிய சமாதானம் தான் காரணம் என்கிறது விவரமறிந்த வட்டாரம
`தி.மு.க-வில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ராஜகண்ணப்பன் தனக்கு அமைச்சர் பதவி வழங்காத விரக்தியில், கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தார். மேலும், 2009-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் சிவகங்கை தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அதேபோல, துறை மாற்றப்பட்ட சோகத்தில் அவர் அவசர முடிவு எதுவும் எடுத்துவிடக்கூடாது' என்று முதல்வரிடம் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தான் ராஜகண்ணப்பனை ஆறுதல் படுத்தியுள்ளார் முதல்வர் என்கிறார்கள்.