ஏத்தர் எனர்ஜி ஓசூர் தொழிற்சாலை.... ஸ்கூட்டரின் உற்பத்தியில் புதிய மைல்கல்...

ஏத்தர் எனர்ஜி ஓசூர் தொழிற்சாலை.... ஸ்கூட்டரின் உற்பத்தியில் புதிய மைல்கல்...!


ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தொழிற்சாலை ஓசூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு மிகவும் பிரபலமான 450எக்ஸ் (Ather 450X) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. ஓசூர் தொழிற்சாலையில் 25 ஆயிரம் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்துள்ளதாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டு காலம் கடந்துள்ள நிலையில் ஓசூர் தொழிற்சாலையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது 25 ஆயிரமாவது 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்து அசத்தியுள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 25 ஆயிரமாவது யூனிட் கடந்த மார்ச் 4ம் தேதி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டைலான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு வசதிகளையும் பெற்றுள்ளது. ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 2.9 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் மோட்டார் 8 பிஹெச்பி பவரையும், 26 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பழைய ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும், ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பவர் மற்றும் டார்க் அவுட்புட் குறிப்பிடத்தக்க வகையில் அதிகம் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஈக்கோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் வார்ப் என ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மொத்தம் 4 ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வார்ப் ரைடிங் மோடில்தான் ரைடர் முழுமையாக 26 என்எம் டார்க் அவுட்புட்டையும் பயன்படுத்த முடியும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் 3.3 வினாடிகளில் எட்டி விடும்.

அதே சமயம் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் 6.5 வினாடிகளை மட்டுமே எடுத்து கொள்ளும். ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 85 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஈக்கோ மோடில் கிடைக்கும் ரேஞ்ச் ஆகும்.

ஆனால் ரைடு மற்றும் வார்ப் மோடுகளில் ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் குறைந்து விடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பேட்டரி ஒரு முறை முழுமையாக நிரப்பினால், ரைடு மோடில் 75 கிலோ மீட்டர்கள் மட்டுமே ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணிக்கும். அதே சமயம் வார்ப் மோடில் 50 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு மட்டுமே செல்ல முடியும். அதன்பிறகு மீண்டும் பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும்.

வரும் காலங்களில் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பொதுவாக அனைத்து வகையான எலெக்ட்ரிக் வாகனங்களுமே இங்கு பிரபலமடைந்து வருகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களில் குறிப்பாக எடுத்து கொண்டால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே சிறிய நிறுவனங்களும், பல்வேறு பெரிய நிறுவனங்களும் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் களமிறங்கியுள்ளன. ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை, பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப், ஓலா எஸ்1 ப்ரோ உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் போட்டியிட்டு வருகிறது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரீமியமான தேர்வாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் அதிகளவில் இதனை விரும்புகின்றனர். முன்பெல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களை பார்ப்பதே அரிதான ஒரு விஷயமாக இருந்த நிலையில், தற்போது ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சாலைகளில் அதிகமாக காண முடிகிறது.

ஓசூர் செய்தியாளர்;  E.V. பழனியப்பன்