பள்ளிக்கல்வித்துறை முடிவை மாற்றக் கூடாது...! தொடர்ந்து திறம்பட செயல்பட வேண்டும்..!!

பள்ளிக்கல்வித்துறை முடிவை மாற்றக் கூடாது...! தொடர்ந்து திறம்பட செயல்பட வேண்டும்..!!

முழு ஆண்டு தேர்வு முடிந்தவுடன் பிளஸ் 1வகுப்பை தவிர மற்ற வகுப்பினருக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு எப்போது என்பது குறித்து தேதியை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

அவர் கூறுகையில் மே 5 ஆம் தேதி முதல் மே 28 ஆம் தேதி வரை பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. ஜூன் 23 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது போல் மே 6 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கிறது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 17 ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 9ஆம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு எப்போது

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2 முதல் மே 4 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறுகிறது. மே 5 ஆம் தேதி முதல் மே 13 ஆம்தேதி வரை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் வரும் மே 30 ஆம் தேதி வெளியாகிறது. மாணவர்கள் அச்சப்படாமல் தேர்வை எழுத வேண்டும்.

 எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதை அறிந்து அதற்கேற்ப துறைகளை தேர்வு செய்து பயில வேண்டும்.

எப்போதும் பெற்றோர் விருப்பதற்காக படிக்கக் கூடாது. மாணவர்கள் எழுதும் பதில்களுக்கு ஏற்ப மதிப்பெண்களை வழங்குவது எங்கள் கடமை. அதனை கண்டிப்பாக நாங்கள் செய்வோம். உங்களுடைய திறமையை நமது பள்ளிகளில் காண்பிக்க வேண்டும். உங்களை நம்பி வரும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும்.

பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் 100 சதவீத செயல்பாட்டை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றார்.

 பிளஸ் 1 வகுப்பு தவிர அனைத்து மாணவர்களுக்கும் கடைசி வேலைநாள் மே மாதம் 13 ஆம் தேதி ஆகும். 2022 -2023 ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13 ஆம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 24 ஆம் தேதி தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அனைத்து தரப்பு மக்களும் பெற்றோர்களும் மாணவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

பள்ளிக்கல்வித்துறை இப்போதுதான் உருப்படியான ஒரு முடிவை அறிவித்துள்ளது.  இந்த முடிவில் இருந்து மாறாமல் இப்போது அறிவித்துள்ள கால அட்டவணைப்படி பள்ளிகள் செயல்பட்டால் தமிழகத்தின் கல்வித்தரம் மேலும் உயரும். 

மற்றவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு திட்டத்தை மாற்றினால் படு பாதாளத்திற்கு தள்ளப்படுவோம் என்பது பள்ளிக்கல்வித்துறை உணர்ந்தால் நாட்டுக்கு நலம் பயக்கும்.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் நந்தகுமார் கூறும்போது எங்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த அனுமதித்த தமிழக அரசுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மே மாதம் 13ம் தேதி வரை பள்ளிகள் நடத்துவதற்கு அனுமதி அளித்ததற்கும் அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 13-இல் துவங்கும் என அறிவித்ததற்கும் வரவேற்ப்பை தெரிவிக்கிறோம்.

கட்டணம் கேட்டு மாணவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது.கட்டணம் செலுத்தவில்லை என்று மாணவர்களை வெளியே நிறுத்த கூடாது.இப்படி நடப்பது தெரிந்தால் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

20 மாதங்கள் கழித்து பள்ளிகள்  திறந்திருக்கும் இந்த நிலையில் கட்டணம் கேட்கக்கூடாது என்று  சொன்னாள் நாங்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு, வாகனங்களை ஓட்டுவதற்கு யாரிடம் பணத்தை வாங்குவது?

கொரோனா காலத்தில் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் கடுமையான பண கஷ்டத்தில் தள்ளாடிக் கொண்டிருந்த சமயத்தில் அரசு எங்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை இந்த நிலையில் இப்போது அரசு  இதுபோன்று அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது என்று கூறியுள்ளார்.