முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு விடுதலை...?

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு விடுதலை...?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று ராயபுரத்திலுள்ள வாக்குச்சாவடியில் திமுகவைச் சேர்ந்த ஒருவர் கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்தது.

அவரை அதிமுகவினர் பிடித்துவைத்து கொண்டனர். மேலும் ஜெயக்குமாரையும் அழைத்து வந்தனர். அங்கு வந்த அவர், திமுக தொண்டரை நோக்கி சட்டையைக் கழற்றுமாறு பணித்தார். அதற்கு அவர் மறுக்கவே ஜெயக்குமார் மிரட்டினார். இறுதியில் அவர் சட்டையைக் கழற்ற, அதனைக் கொண்டு கையை கட்டி அரை நிர்வாணமாக சாலையில் இழுத்து வந்தார் ஜெயக்குமார். இச்சம்பவத்தின் வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தில் வைரலானது.

அமைச்சராக இருந்தவர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டது கண்டனத்துக்குரியது என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து தாக்கப்பட்ட திமுக பிரமுகர் காவல் துறையில் புகார் கொடுக்க, பிப்.21ஆம் தேதி ஜெயக்குமார் அணிந்திருந்த ஆடையோடு கைது செய்யப்பட்டார். அவர் ஆடைகளை மாற்றிவிட்டு வருவதாகக் கூறியும் போலீஸார் அவரை விடவில்லை. இந்த கைது காட்சிகளும் இணையத்தில் வைரலானது. இதையடுத்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருக்கும்போதே அவர் மீது இன்று 2ஆவது வழக்கும் பதிவானது. வாக்குப்பதிவு தினத்தன்று சாலை மறியல் ஈடுபட்டதாக அந்த வழக்கு பதிவானது. இந்த வழக்கில் அவருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் முதல் வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதன் முடிவு நாளையே தெரியவரும். அதிலும் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே அவர் வெளியே வர முடியும்.