அனைத்து வாகனங்களுக்கும் பிட்னஸ் டெஸ்ட் கட்டாயம்

அனைத்து வாகனங்களுக்கும் பிட்னஸ் டெஸ்ட் கட்டாயம் 

சாலைகளில் விபத்துகளை தடுக்கவும், அதிக புகை தள்ளும் பழைய வாகனங்களை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சில வாகனங்களில் இருந்து அதிகப்படியான புகை தள்ளப்படுவதால் சுற்றுச்சூழல் மிகுந்த பாதிப்பு அடைகிறது. இத்தகைய சூழலில், ஆட்டோமேடட் சிஸ்டம் மூலமாக வாகனங்களின் பிட்னஸ் தகுதியை சோதித்து பார்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு வாகனம் இயங்குவதற்கு தகுதியான நிலையில் இருக்கிறதா என்பதை இயந்திரங்களின் உதவியுடன் ஆய்வு செய்வதே ஆட்டோமேடட் டெஸ்டிங் சிஸ்டம் ஆகும். அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையின் படி, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக பாசஞ்சர் வாகனங்களுக்கு ஏடிஎஸ் முறையில் பிட்னஸ் டெஸ்ட் எடுப்பது கட்டாயம் ஆகும்.

நடுத்தர ரக சரக்கு வாகனங்கள், நடுத்தர ரக பாசஞ்சர் வாகனங்கள் மற்றும் இலகு ரக மோட்டார் வாகனங்களுக்கு இந்த கட்டாய பிட்னஸ் டெஸ்ட் என்பது 2024ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் கட்டாயம் ஆகும். அதேசமயம், ஒருமுறை பிட்னஸ் சான்றிதழ் வாங்கிவிட்டால் மட்டும் போதாது. அது செல்லுபடியாகும் காலம் குறித்தும் வரையறை செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக பயன்பாட்டில் இருக்கும் வாகனம் வாங்கி 8 ஆண்டுகளுக்கு உள்ளாக இருந்தால், பிட்னஸ் சான்றிதழ் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். அதுவே, வர்த்தக வாகனங்களை வாங்கி 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால் பிட்னஸ் சான்றிதழ் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும்.

இதேபோல, தனியார் வாகனங்களுக்கு, அவர்களது வாகனப் பதிவின் ஆயுட் காலமான 15 ஆண்டுகள் கழித்து வரும்போது கட்டாய பிட்னஸ் டெஸ்ட் எடுக்க வேண்டும். இந்த சான்றிதழை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஏடிஎஸ் சோதனை மையத்தை தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் அல்லது மாநில அரசு என யார் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு இதற்கு முன்பு வெளியிட்டிருந்த வரைவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேசமயம் இந்த டெஸ்டிங் நிலையம் அமைப்பவர்களுக்கு, டெஸ்ட் செய்வதற்கு மட்டுமே அனுமதி உண்டு. வாகனங்களை அங்கு பழுது பார்க்கவோ, வாகனங்களை வாங்கி, விற்கவோ அல்லது உற்பத்தி பணிகளுக்கோ அல்லது ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை செய்யவோ அனுமதி கிடையாது.