மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளை திறந்து விடுங்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு பணிவான வேண்டுகோள்..கே ஆர் நந்தகுமார்..

மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளை திறந்து விடுங்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு பணிவான வேண்டுகோள்..கே ஆர் நந்தகுமார்..

கொரோனாவும் கல்விக்கூடங்கள் திறப்பும்*

கல்விக்கூடம் என்பது அறிவு சார்ந்தவற்றை கற்பது மட்டும் இன்றி குழந்தையின் *உணவூட்டம், சமூகம் மற்றும் உணர்வு சார்ந்த திறமைகள், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகிய அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டது* என்று அமெரிக்காவின் குழந்தைகள் கல்விக்கழகம் *(American Academy of Paediatrics)* சொல்கிறது.

கல்வி என்பது குழந்தைகளுக்கு ஒரு *உயிர்காக்கும் உபாயம்* மட்டும் இன்றி, *வாழ்வில் பாதுகாப்பையும், பிரகாசமான எதிர்கால வாழ்க்கை* பற்றிய நம்பிக்கையையும் தரும் ஒன்றாகும்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த *கல்விக்கூடங்களை மூடவேண்டும் என்று சொல்பவர்களின் அடிப்படை கருத்துக்கள்* மூன்று தான்.

1. குழந்தைகளின் கல்வியை விட அவர்களது *உயிர் தான் மிகவும் முக்கியம்*.

2. கல்விக்கூடங்கள் *கொரோனா தொற்றை பரப்பும் கூடாரங்களாக மாறக்கூடாது*.

3. குழந்தைகளால் *வீட்டில் உடன் வசிப்பவர்களுக்கும்*, ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதித்திருக்கும் வயதானவர்களுக்கும் கொரோனாநோய் *தொற்று ஏற்படக்கூடாது*.

*குழந்தைகளும் கொரோனாவும்*

கொரோனாநோய் தொகுப்புக்களில் *(clusters)* சுட்டிக்காட்டும் முதல் நோயாளியாக *(Index case)* மிக அரிதாக குழந்தைகள் இருப்பதாகவும், அத்தொகுப்புக்களில் இருந்த வயது வந்தவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்ட பின்பே குழந்தைகளுக்கு நோய் அறிகுறிகள் வந்ததாகவும் இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. 

அதனால் *குழந்தைகள் கொரோனாநோய் பரப்பும் ஆதாரங்களாக இல்லை* என்பதையும், வயதுவந்தவர்களிடமிருந்து தான் குழந்தைகள் நோயை பெறுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

*கல்விக்கூடங்கள் நீண்டகாலம் மூடி வைத்திருப்பதன் பாதிப்புக்கள்*

கல்விக்கூடங்களின் இந்த தொடர் மூடுதலினால் குழந்தைகளின் *மனநலம் மற்றும் உடல்நலம் பாதிப்பு, தாழ்ந்த கல்விதிறன், குடும்ப வன்கொடுமைகள், உணவு பற்றாக்குறை*, போன்ற கொடுமைகளுடன் மற்றக் குழந்தைகளுடன் *பழகும் வாய்ப்பு*, குடும்பத்தை தவிர்த்த மற்ற பெரியவர்களுடன் பரஸ்பர சமுதாய பரிமாற்றல் ஏற்படும் வாய்ப்பு ஆகியவை பாதிக்கப்பட்டு, அவர்களின் *எதிர்காலம் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக* மாறி விடும்.

கல்விக்கூடங்களை தொடர்ந்து மூடிவைப்பதால் *வறிய ஏழை மக்களின் குழந்தைகளும், கல்வியறிவு குறைந்த பெற்றோர்களின் குழந்தைகளும், தாழ்த்தப்பட்ட இனமக்களின் குழந்தைகளும்* மிகவும் அதிகமான மற்றும் *திரும்பவும் மாற்ற இயலாத பாதிப்பை* அடைவார்கள் என்று பல்வேறு புள்ளிவிவர ஆய்வு குறிப்புக்கள் கூறுகின்றன.

ஆனால் *அரசியல்வாதிகளின் குழந்தைகளுக்கும், அரசு உயர் அதிகாரிகளின் குழந்தைகளுக்கும், பெரும் செல்வந்தர்களின் குழந்தைகளுக்கும்* ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவு. (அவர்களுக்கும் மனநோய் சம்மந்தமான பிரச்சனைகளும், ஒழுக்கம் சம்மந்தமான பிரச்சனைகளும் ஏற்படுவதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்)

ஒரு குழந்தை எவ்வளவு காலம் கல்விக்கூடத்தை விட்டு விலகி இருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படுவதுடன், அக்குழந்தை *திரும்பவும் கல்விக்கூடத்திற்கு வரும் வாய்ப்பையும் அந்த அளவுக்கு குறைக்கும்* என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

இது தவிர *பெண் குழந்தைகளுக்கு கூடுதல் பாதிப்பாக* இளம்பிராயத் திருமணம், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் அதன் அடிப்படையில் கடத்தப்படுதல் ஆகியவை அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம்.

மேலும் இதற்கு மாற்றாக புழக்கத்தில் உள்ள *இணைய வழி கல்வி முறையில்* குடும்பங்களின் பொருளாதார வசதியின் அடிப்படையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளினால் எதிர்காலத்தில், *மருத்துவம் போன்ற தொழில்முறை உயர்கல்விகளிலும், உயர்நிர்வாக பதவிகளிலும் பட்டியல் இன மற்றும் வசதி, அதிகாரம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் புறம் தள்ளப்பட்டு*, அதிகார வர்க்கத்தை சேர்ந்த குழந்தைகள், பொருளாதார வசதி மிக்க குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் ஆக்கிரமித்துக் கொள்ளும் பேராபத்து காத்திருக்கிறது.

மேலும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், இணயவழிக் கல்வி கிடைப்பதில் ஏற்படும் சிரமங்களினால் *கல்வி கற்பதில் மனச்சோர்வடைந்து, கல்விக்கூடங்களின் மீதே வெறுப்படைந்து  குழந்தைத் தொழிலாளர்களாக* மாறும் வாய்ப்பும் மிகவும் அதிகம்.

இணையவழி கல்வியினால் ஆண்ட்ராய்ட் கைபேசியை தொடர்ந்து பயன்படுத்தும் குழந்தைகள் அதற்கு அடிமையாகி *உளவியல் மற்றும் மன உணர்வு சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாவதுடன், பார்வைக் கோளாறுகளுக்கும்* உள்ளாகிறார்கள்.

பெரும்பாலான குழந்தைகள் உடற்பயிற்சி இன்றி, ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்திற்கு ஆளாகி *உடல் பருமன் நோயால்* பாதிக்கப்பட்டுள்ளதாக  புள்ளிவிவர ஆய்வுக்குறிப்புகள் கூறுகின்றன.

*பெற்றோர்களுக்கும்*, குழந்தைகள் வீட்டிலேயே கல்வி கற்கும் சூழலினால் ஏற்படும் *மன அழுத்தம்*, முதல் சந்ததி கல்வி பயிலும் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் குழந்தைகளுக்கு கல்வியில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய இயலாமையினால் ஏற்படும் *குற்ற உணர்வு*, 24 மணிநேரமும் குழந்தைகளை பராமரிக்கும் சிரமங்கள், வாழ்வாதாரத்திற்கான *பணிசுமைகள்* ஆகிய பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இந்தியாவில், இணையவழி கல்வி புகட்டுதல் என்பது *ஆசிரியர்களுக்கும்* புதுமையான, அதே சமயம் மாணவர்களின் புரிந்து கொள்ளும் தன்மையை அறிந்து கொண்டு அதற்கேற்றபடி தம் கற்பித்தலை மாற்றி உடனுக்குடன் விளக்கும் *உயிரோட்ட தன்மையற்ற* இந்த கல்விமுறை, *குற்ற உணர்வுடன் கூடிய கூடுதல் பணிச்சுமை* உள்ளதாகும்.

*கல்விக்கூடங்களை மூடுவதால் கொரோனா குறைந்துவிடும்* என்று அரசு அதிகாரிகள் நினைப்பது என்பது, இலங்கையில் LTTE பிரச்சனையின் போது SV.சேகர் ஒரு நாடகத்தில், *“LKG, UKG க்கு லீவு விட்டு விட்டால் இலங்கை பயந்துடும்”* என்று சொல்வது போல உள்ளது.

*எவ்வளவு காலம் அவற்றை மூடி வைக்கப்போகிறோம்?* 

தற்போதைய சூழலில் கொரோனா கொள்ளைநோயானது *நம் கட்டுப்பாட்டை மீறிய அபரிதமான ஒரு கொள்ளைநோயாக இல்லை*.

*கொரோனாநோய் கட்டுப்பாடுகளை சரியான முறையில் செயல்படுத்தும்* கல்விக்கூடங்களில் கொரோனா தொற்று பாதித்த குழந்தைகளால் கல்விக்கூடங்களில் அந்த *நோய்தொற்று பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு* என்று உலக அளவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

அதனால், இங்கிலாந்து, பெல்ஜியம், தென்னாப்ரிக்கா, பல்வேறு ஆப்ரிக்க நாடுகள், தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற *பல நாடுகள் கல்விக்கூடங்களை திறந்துள்ளதாக* தெரிய வருகிறது.

எனவே, தற்போதைய கொரோனாவின் தாக்கம் சிறிது குறைவாக இருக்கும் சூழலிலும் *கொரோனாவை காட்டி பயமுறுத்தி, கல்விக்கூடங்களை திறக்காமல் இருப்பதனால்* எதிர்காலத்தில் உண்மையிலேயே மிகக்கொடூரமான ஒரு மாறுபட்ட கொரோனா வைரஸால் சமுதாயம் பாதிக்கப்படுமானால் மக்களிடையே தொடர்ந்து ஏற்பட்டு இருக்கும் அலட்ச்சியப்போக்கு எதிர்காலத்திலும் தொடர்ந்து, புலி வராமல் இருக்கும் போதே *‘புலி வருது, புலி வருது’* என்று கத்தி அருகில் இருந்த மக்களை ஏமாற்றிய சிறுவனை, உண்மையில் புலி வந்து அந்த சிறுவன் கத்திய போதும் அருகில் இருந்த மக்கள், அவன் கத்தியது பொய் என்று கருதி அலட்சியம் செய்த கதையாக முடியும் வாய்ப்பு உள்ளது.

கல்விக்கூடங்களை திறப்பதற்கு *அறிவியல் தான் உந்துவிசையாக இருக்க வேண்டுமே தவிர அரசியலோ நிர்வாக காரணமோ அல்ல* என்றும் நோய்தொற்று பாதிப்பை பொருத்தவரை, *குழந்தைகள் கல்விக்கூடங்களுக்கு வெளியில் இருப்பதை விட கல்விக்கூடங்களில் மிகவும் பாதுகாப்பாக* இருப்பார்கள் என்பதும் பெரும்பாலான வல்லுனர்களின் கருத்தாகும்.

அதனால் ஒரு கொள்ளைநோய் தாக்கத்தை முன்னிட்டு அனைத்து கட்டிடங்களும் மூடப்பட வேண்டும் என்ற நிலை ஏற்படுமானால் *கல்விக்கூடம் தான் கடைசியாக மூடப்பட வேண்டும்*, மேலும் கொள்ளைநோய் தாக்கம் குறைந்தவுடன் *கல்விக்கூடம் தான் முதலில் திறக்கப்பட வேண்டும்* என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

*1. உலக வங்கியின் உலகளாவிய கல்வி இயக்குனர் (World Bank’s Global Education Director) கருத்து*

2020இல் திடீரென வந்த கொரோனாநோயை கட்டுப்படுத்த *திக்குதிசை தெரியாமல் நாம் இருந்த போது, கல்விக்கூடங்களை மூடுவதுதான் சிறந்த வழி* என்று முடிவு செய்தோம். தற்போது இரண்டு வருடங்கள் கடந்து விட்டன, பல அலைகளை சந்தித்து விட்டோம். 

இந்த நோயின் பல்வேறு *சமுதாய பரவல்களுக்கும் கல்விக்கூடங்களுக்கும் சம்மந்தமில்லை* என்பதை உணர்ந்து விட்டோம், மேலும் *குழந்தைகளிடையே தீவிர நோய் பாதிப்பு மிகவும் குறைவு* என்பதையும் அறிந்து கொண்டுள்ளோம்.

எதிர்காலத்தில் புதிய உருமாறிய கொரோனா வருமா இல்லையா என்பது நிச்சயமற்ற ஒன்று. அதனால் தற்போது நிலவும் பல்வேறு காரங்களினால், கொரோனா கொள்ளை நோய்க்காக *கல்விக்கூடங்களை தொடர்ந்து மூடி வைத்திருப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை*, மேலும் கொரோனாவின் புதிய அலைகள் வந்தாலும் கல்விக்கூடங்களை மூடுவது என்பது கடைசி செயலாகவே இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

மேலும் அவர், *மாணாக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கும் வரை கல்விக்கூடங்களை மூடி வைக்கும் கொள்கையானது அறிவியலுக்கு புறம்பானது* என்றும், பல்பொருள் வர்த்தக மையங்களும், மதுபானக்கடைகளும், உணவுவிடுதிகளும் திறந்திருக்கும் போது கல்விக்கூடங்களை மூடி வைத்திருப்பது *அறிவற்றதொரு பொருத்தமில்லாத செயல்* என்றும் கூறுகிறார்.

கல்விக்கூடங்களை மூடிவைத்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு முன்பு கணித்ததைவிட மிகமிக அதிகம் என்றும் அவர் கூறுகிறார்.

*2. UNICEF நிர்வாக இயக்குனர் கருத்து*

கல்விக்கூடங்களின் கதவுகளை மூடி நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் *உண்மையை மறைக்க நினைப்பது பேராபத்தை விளைவிக்கும் செயல்*, அதனால் கல்விக்கூடங்களை திறப்பதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

*3. முதல்வர் (Dean, Brown University of School of Public Health) கருத்து*

உலகளாவிய கொள்ளைநோய் ஆரம்பித்த போது நமக்கு கொரோனா வைரஸை பற்றியோ, அது எப்படி பரவும் என்பது பற்றியோ, அதன் ஆபத்து எவ்வளவு என்பது பற்றியோ தெரியாது என்பதால் *அந்த நோய் மிகப்பெரிய நாசவிளைவை ஏற்படுத்தக் கூடாது என்பதால் சமூக செயல்பாடுகள் அனைத்தையும் மூடும்* கொள்கை முடிவை எடுத்தோம்.

ஆனால் தற்போது மேற்கண்ட விவரங்களை புரிந்து கொண்டுள்ளது மட்டும் இன்றி இந்த சூழலில் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது என்பதைப் பற்றியும், நோய் பரவும் சூழலில் எப்படியெல்லாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் *அறிவியல் பூர்வமாக தெரிந்து வைத்துள்ளோம்*. அதனால், *கல்விக்கூடங்களை மூடி வைப்பதை மேலும் தொடர்வது இந்திய அரசின் பரபரப்பானதொரு கொள்கை முடிவையே* காட்டுகிறது என்கிறார்.

*4. உலகநாடுகள் சுகாதார நிறுவனம் (WHO)*

தன் *இணயதளத்தில்* கல்விகூடங்கள் சம்மந்தமாக கீழ்கண்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.

*கல்விக்கூட அமைப்புக்களில் கொரோனா தொற்று பரவுதல்* என்பது மிகவும் குறைவு.

கல்விக்கூடங்களை திறப்பதால் *சமுதாயத்தில் கொரோனா தொற்று பரவும் தாக்கம் மிகக் குறைவு*

கல்விக்கூடங்கள் மூடியிருப்பதை தொடர்வது *குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், முழுமையான வளர்ச்சி, குடும்ப வருமானம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கே எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்* செயலாகும்.

*முடிவான கருத்து*

கல்விக்கூடங்களின் தொடர் மூடுதலினால் குழந்தைகளின் வாழ்வில் ஏற்பட்டுள்ள இந்த *தடங்கல்கள் சரியாகுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்*.

இதுவரை இந்த வைரஸ் நம் *வருங்கால சந்ததிக்கு ஏற்படுத்திய நாச விளைவை தொடரவிடக் கூடாது*.

ஒவ்வொரு *பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும்* கல்வியை பிரதானமாகக் நினைத்து மிக அதிமான *முதலீடுகள்* செய்திருக்கிறார்கள்.

தற்போது நிலவும் கொரோனா கொள்ளைநோய் நிலவரப்படி உடனடி எதிர்காலத்தில் கொரோனாநோய் தாக்கம் *சமுதாயத்தில் இருந்து முழுவதும் நீக்கப்படும் வாய்ப்பு இல்லை* என்று உறுதியாக சொல்லலாம்.

சுருக்கமாக சொல்லப்போனால் கல்விக்கூடங்களை தொடர்ந்து வருடக் கணக்கில் மூடி வைத்திருப்பது என்பது *மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தும் செயலுக்கு* ஒப்பான ஒன்றாகும்.

அதனால் கல்விக்கூடங்களை திறப்பதில் நமது அரசாங்கம் ஒரு *கணிக்கப்பட்ட அபாய முடிவை (calculated risk)* துணிவுடன் எடுக்க வேண்டியது *காலத்தின் கட்டாயம்* மட்டும் இன்றி சரியான தருணமும் ஆகும்.

கல்விக்கூடத்தின் *நேரடி கல்விக்கு தோதான மாற்று வழி இல்லை* என்பதை உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்கள் உணர்ந்துள்ளார்கள்.

அதனால், கல்விக்கூடங்கள் கொரோனாநோய்க்கு பாதுகாப்பானதா என்ற கேள்வியை விட *குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிட்டு நேரடி கல்வி அத்தியாவசியமானது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய தருணத்தில்* அனைவரும் இருக்கிறோம்.

கொரோனா வைரஸின் தாக்கத்தை விட கொள்கை முடிவுகளை எடுக்கும் நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசியல் அமைப்புக்களின் தலைவர்கள் மத்தியில் நிலவி வரும் *கொரோனா பற்றிய பய உணர்வுதான் கல்விக்கூடங்களை திறப்பதற்கும், மூடி வைத்திருப்பதற்கும் இடையே உள்ள தடையாக* உள்ளதாக பல்வேறு கல்வியாளர்களும் வல்லுனர்களும் கருதுகிறார்கள். 

குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பது முக்கியமானதுதான் ஆனால் அதற்காக அவர்களை *அளவுக்கு மீறிய பாதுகாப்புடன் குமிழிக்குள் வளர்ப்பது* என்பது அவர்களின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் *நாசமாக்கும் செயல்* என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் உணர்ந்து *கல்விகூடங்கள் திறப்பது பற்றியும், தேர்வுகள் நடத்துவது பற்றியும் விரைவில் நல்ல முடிவு* எடுப்பது *மக்களுக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகவும் நன்மையாக* இருக்கும்.

 கே. ஆர்.நந்தகுமார். மாநில பொதுச் செயலாளர். தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.