இந்தியாவின் அடுத்த பிரதமர் முதல்வர் முக ஸ்டாலின் திமுக எம்பி வில்சன் சிறப்பு பேட்டி...?!

இந்தியாவின் அடுத்த பிரதமர் முதல்வர் முக ஸ்டாலின் திமுக எம்பி வில்சன் சிறப்பு பேட்டி...?!


இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆகும் தகுதி கொண்டவராக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார் என்று திமுக எம்பி வில்சன் ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. திமுக சார்பாக தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளிப்பதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கிறது.

கிட்டத்தட்ட கடந்த 2 வருடமாக நடத்தப்பட்ட சட்ட போராட்டத்திற்கு பின் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஓபிசி இடஒதுக்கீடு வழக்கை முன்னின்று நடத்திய திமுக எம்பி வில்சனிடம் இந்த வழக்கு வெற்றி குறித்து ஒன்இந்தியா தமிழ் சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த வழக்கு வெற்றியை தொடர்ந்து திமுகவை வடஇந்தியர்கள் பலரும் இணையத்தில் பாராட்டுகிறார்களே.. முதல்வர் ஸ்டாலினை பாராட்டி டேக் எல்லாம் வைரலாகிறதே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிற்கே ஒரே சமூக நீதி தரும் தலைவராக இருக்கிறார். நான் சொல்கிறேன் என்று தவறாக எடுக்க வேண்டாம். இதற்கு முன் வடஇந்தியாவில் லாலு பிரசாத் உள்ளிட்ட பல சமூக நீதி தலைவர்கள் இருந்தனர். முன்பெல்லாம் வடஇந்தியாவில் பல தலைவர்கள் சமூக நீதி பேசினார்கள். ஆனால் இப்போது பலர் ஆக்டிவாக இல்லை. முதல்வர் ஸ்டாலின்தான் நாட்டிற்கே சமூக நீதி தலைவராக உள்ளார்.

திமுக சமூக நீதி

சமூக நீதி மட்டுமின்றி நிர்வாக ரீதியாகவும் தேசத்திற்கே சிறந்த தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். மற்ற முதல்வர்களும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்டாலின் எடுத்துக்காட்டாக இருக்கிறார். அவர் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதை தனிப்பட்ட கருத்தாக கூறுகிறேன்.

வடஇந்தியாவில் சமூக நீதி தலைவர்கள் இல்லை என்று கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு..

வடஇந்தியாவிலும் சமூக நீதி பேசும் தலைவர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் ஆக்டிவாக இல்லை. இந்தியாவில் பல கட்சிகள் இருக்கின்றன. ஆனால் எந்த கட்சி ஓபிசி மருத்துவ இடஒதுக்கீட்டிற்காக உச்ச நீதிமன்றம் சென்றது? ஓபிசிக்கு என்றே பல கட்சிகள் இருக்கின்றன.

ஆனால் அவர்கள் எல்லாம் போராடவில்லை. அவர்கள் எல்லாம் சட்ட போராட்டம் செய்யவில்லை. ஆனால் திமுக இந்த சட்ட போராட்டத்தை செய்து இருக்கிறது. நாட்டிற்கே ஓபிசி இடஒதுக்கீடு கிடைக்க அவர் வழி செய்து இருக்கிறார். நாட்டிற்கே மிகப்பெரிய சொத்துதான் முதல்வர் ஸ்டாலின்.

அவருக்கு இந்த நாட்டின் பிரதமர் ஆகும் அனைத்து தகுதிகளும் உள்ளன. ஆட்சிக்கு வந்த சில நாட்களில் அவர் தன்னை நிரூபித்துள்ளார். நாடே போற்ற கூடிய தலைவராக உருவெடுத்துள்ளார்.

வடஇந்தியாவில் முதல்வர் ஸ்டாலின் போல தலைவர் இல்லை என்று பீல் பண்றாங்க. வரும் தேர்தலில் அரசியல் களமே சமூக நீதிக்கும் சமூக நீதிக்கு எதிரானவர்களுக்கும் இடையில்தான் நடக்கும். சமூக நீதிதான் அந்த தேர்தலில் வெற்றிபெறும். இந்தியாவில் சமூக நீதியை முன்னெடுக்கும் முக்கிய தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.  என்று எம்பி வில்சன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக எம்பி வில்சனின் இந்த கருத்துக்கு பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.