திருவொற்றியூர் சங்கர் பதவி பறிப்பு பகீர் பின்னணி.....! இது கனிமொழிக்கு விடப்பட்ட எச்சரிக்கையா...?

திருவொற்றியூர்  சங்கர் பதவி  பறிப்பு பகீர் பின்னணி.....! இது கனிமொழிக்கு விடப்பட்ட எச்சரிக்கையா...?

திமுக தலைவர் ஸ்டாலின் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தன் வசம் வைத்திருந்த அதிகாரமிக்க பதவியான திமுக இளைஞரணிச் செயலாளராக கடந்த 2019ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

பதவியேற்ற அடுத்த சில நாட்களிலேயே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம். நிர்வாகிகள் கூட்டம், உறுப்பினர்கள் சேர்க்கை என்று சுணக்கமாக இருந்த இளைஞரணியை கட்டி எழுப்பினார் உதயநிதி ஸ்டாலின்.

இதையடுத்து, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். எம்.எல்.ஏவாக அவர் இருந்தாலும் கூட கிட்டத்தட்ட அமைச்சர்களுக்கு கிடைக்கும் மரியாதையைவிட அதிகளவிலான மரியாதையே அவருக்கு கொடுக்கப்படுகிறது. அரசு விழாக்களில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அவரை அமைச்சராக்குவதற்கு பல அமைச்சர்களும் ஆதரவு கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதேபோல், கட்சியிலும் உதயநிதியை முன்னிலைப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கலைஞருக்கு வாரிசுகள் பலர் இருந்தாலும், அரசியல் வாரிசுகளாக அறியப்படுபவர்கள் ஸ்டாலினும், கனிமொழியும்தான். அழகிரி ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டு விட்ட நிலையில், ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில் ஸ்டாலினின் குடும்பத்தினர் மிகவும் கவனமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதனாலேயே அண்மைக்காலமாக கனிமொழி பல்வேறு தருணங்களில் ஓரங்கட்டப்பட்டு வருவதாக அரசல்புரசலாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் தான் கனிமொழியின் தீவிர ஆதரவாளரான திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கரின் பதவியை பிடுங்கி அதிர்ச்சி கொடுத்துள்ளது திமுக தலைமை.

அவர் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை மேற்குப் பகுதி திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கட்சி கட்டுப்பாட்டை மீறி வருவதால் திருவொற்றியூர் திமுக மேற்கு பகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் அறிவிப்பு கூறுகிறது.

திமுகவின் மீனவர் அணி செயலாளராக இருந்து வந்தார் கே.பி.பி.சாமி 2006-2011-ல் தமிழக மீன்வளத்துறை அமைச்சராகவும் கே.பி.பி. சாமி பணியாற்றினார். இதனையடுத்து, உடல்நலக்குறைவால் கே.பி.பி.சாமி உயிரிழந்தார். அடாவடி அரசியலுக்கு பெயர்போனவர். கனிமொழியின் தீவிர ஆதரவாளர். பின்னர், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கே.பி.பி. சாமியின் சகோதரரான கே.பி.சங்கருக்கு முதல்முறையாக திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் சீமானை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கடும் போட்டிகளுக்கு இடையே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் சீமானை வீழ்த்தி கே.பி.சங்கர் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, அப்பகுதியில் தொடர்ந்து ரவுடிசம், மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததாக தொடர் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இவரது செயல்பாடுகள் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த புகார்கள் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், திமுக எம்.பி. கனிமொழியின் தீவிர ஆதரவாளராக கே.பி.சங்கர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் கனிமொழி ஆதரவாளர்களுக்கும், தனக்கு சாதகமானவர்களுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

மேலோட்டமாக, சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக கே.பி.சங்கர் பதவியி இருந்து நீக்கப்பட்டதாக கூறினாலும், அவர் கனிமொழி ஆதரவாளர். கனிமொழி ஆதரவாளர்களால் ஸ்டாலின், உதயநிதியை மீறி எதுவும் கட்சியில் செய்ய முடியாது என எச்சரிக்கவே கே.பி.சங்கரின் பதவியை பறித்ததாக கூறப்படுகிறது. இந்த பகீர் பின்னணியால் அறிவாலய வட்டாரமே அலறுகிறது.