தமிழகம் வரும் மோடி: விருதுநகரை விரும்பும் பின்னணி!
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க வரும் 2022 ஜனவரி மாதம் 12 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்துக்கு ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுவதற்கான அனுமதியையும் நிதியுதவியையும் மத்திய அரசு வழங்கியது. அந்த வேலைகள் விரைவாக முடிக்கப்பட்டதன் விளைவாக இந்தக் கல்லூரிகளில் 1,450 இடங்களைச் சேர்ப்பதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதால் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட இருக்கின்றன.
திமுக ஆட்சி அமைத்ததும் பிரதமர் மோடியின் முதல் தமிழக பயணம் இதுவாகும். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மோடி தமிழகம் வந்த நிலையில், ‘கோ பேக் மோடி’ என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்நிலையில் இன்று தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஸ்டாலின் பிரதமர் மோடியோடு ஒரே மேடையில் மருத்துவக் கல்லூரி தொடக்க நிகழ்வில் பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஒன்றிய அரசு 60 சதவிகிதம் தமிழக அரசு 40 சதவிகிதம் என்ற அடிப்படையில் இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான செலவைப் பகிர்ந்துகொண்டுள்ளன.
11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவை எங்கே வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் பிரதமருக்கு சில இடங்கள் தேர்வு செய்து அனுப்பப்பட்டன. கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மதுரை, அரியலூர் உள்ளிட்ட இடங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஆனால் பிரதமர் அலுவலகமோ விருதுநகரில் இந்த விழாவை வைத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசிடம் தெரிவித்திருப்பதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து விசாரித்தபோது, “தமிழகத்தில் இது அரசு விழாவாக நடந்தாலும் அதில் சில அரசியல் பின்னணிகளும் இருக்கின்றன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமைக்கப்படாத நிலையில், புதிதாக துவக்கப்பட இருக்கும் 11 மருத்துவக் கல்லூரிகளில் எதுவும் மதுரையில் அமையாத நிலையில் நிகழ்ச்சியை மதுரையில் நடத்துவது பொருத்தமானதாக இருக்காது என்று பிரதமர் அலுவலகம் கருதியிருக்கிறது. அதேநேரம் கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், அரியலூர் என வட தமிழகத்தில் பிரதமரின் விழாவை வைப்பதை விட...புதிய மருத்துவக் கல்லூரி அமைய இருக்கும் விருதுநகரில் விழாவை வைக்கலாம் என்று பாஜக தலைமை பரிந்துரை செய்திருக்கிறது.
விருதுநகர் நேரு குடும்பத்துக்கு மாற்றாக காங்கிரஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த மண். மேலும் தேவேந்திர குல வேளாளர்கள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் அடர்த்தியாக இருக்கும் மாவட்டம். இந்த இரு காரணங்களை வைத்து விருதுநகரில் பிரதமர் கலந்துகொள்ளும் விழாவை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்”என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.
விருதுநகருக்கு வரும் பிரதமர் மோடி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்யவும், ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொள்ளவும் திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன.