செல்போனுக்கு வந்த ஆபாச மெசேஜ்.. மாங்காடு பள்ளி மாணவி தற்கொலையில் சிக்கிய கல்லூரி மாணவர்

 செல்போனுக்கு வந்த ஆபாச மெசேஜ்.. மாங்காடு பள்ளி மாணவி தற்கொலையில் சிக்கிய கல்லூரி மாணவர்

*பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவரை 3-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.*

மாங்காட்டில் 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி மாங்காட்டில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மேலும் உருக்கமான மூன்று கடிதங்களை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலைக்கான காரணம் பாலியல் அத்த மீறல் என்றும் தற்கொலைக்கு தூண்டிய நபர் யார் என்பது குறித்து குறிப்பிடாமல் வைத்திருந்தார். இதையடுத்து தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அந்த மாணவியின் நண்பர்கள் என 20 க்கும் மேற்பட்டோரிடம் மங்காடு போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த மாணவியின் செல்போனை கைப்பற்றி அந்த செல்போனில் அவர் யாரிடம் எல்லாம் அதிகமாகப் பேசினார் என்பது குறித்து ஆராய்ந்தனர். இதில் பள்ளி மாணவன் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 4 பேரை பிடித்து தீவிரமாக விடிய விடிய விசாரித்து வந்த நிலையில் மாங்காட்டை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்(21), என்பவருடன் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலம் மாணவிக்கு பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது .

அதன் பிறகு அதிகமாக அந்த மாணவிக்கு செல்போனில் ஆபாச தகவல்கள் அனுப்பி இருந்தது தெரியவந்தது. அந்த வலிபரிடம் விசாரணை செய்ததில், குன்றத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவியை விக்னேஷ் காதலித்து வந்ததுள்ளார்.  மாணவி டைப் ரைட்டிங் வகுப்புக்கு செல்லும்போது பழக்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது விக்னேஷ்-க்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த மாணவிக்கு ஆபாசமாக படங்கள், குறுந்தகவல்கள் எல்லாம் அனுப்பி உள்ளார். மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.  செல்போனில் இருந்த தகவல்களின் அடிப்படையில் விக்னேஷ் மீது பெண் வன்கொடுமை, போக்சோ, தற்கொலைக்கு தூண்டியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் 3-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு வேறு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா என்ற கோணத்தில் அந்த மாணவியின் செல்போனை தீவிரமாக போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அந்த மாணவி கடிதத்தில்  உறவினர்கள், ஆசிரியர்கள் யாரையும் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்ததால் உறவினர்கள் தரப்பில் இருந்து யாராவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.