மஞ்சப்பை வைத்திருந்தால் பட்டிக்காட்டானா : முதல்வர் ஸ்டாலின்

 மஞ்சப்பை வைத்திருந்தால் பட்டிக்காட்டானா : முதல்வர் ஸ்டாலின்


“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தைச் சுற்றுச்சூழல் துறை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னை கலைவானர் அரங்கில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சியைச் சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு பரப்புரையைத் தொடங்கி வைத்தார்.


அதுபோன்று பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகப் பாரம்பரிய பொருட்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.


இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், மஞ்சப்பை தான் சுற்றுச்சூழலுக்கு நல்லது. முன்பாக மஞ்சப்பை கொண்டு சென்றாலே பார்க்கிறவர்கள் வீட்டில் எதாவது விஷேசமா, பத்திரிக்கை கொண்டு வந்திருக்கிறீர்களா என்று கேட்ட காலம் உண்டு. ஆனால் பிளாஸ்டிக் பைகள் வந்தவுடன் அதுதான் நாகரிகம், மஞ்சப்பை வைத்திருந்தால் அது கேவலம் என்ற சூழல் உருவானது. மஞ்சப்பை வைத்திருந்தால் பட்டிக்காட்டான் என்று கிண்டல் செய்யக் கூடியவர்களும் உருவானார்கள்.


சினிமாவிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் கூட மஞ்சப்பையைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு வந்தால், அவர் கிராமத்துக்காரர் என அடையாளம் காட்டினார்கள். வணிக போட்டி காரணமாக விதவிதமான பிளாஸ்டிக் பை விற்பனை செய்யப்படுகின்றன. அதை வாங்குவதால் மஞ்சப்பை பயன்பாடு குறைந்துவிட்டது.



 Az

தற்போது துணிப்பைகள் பயன்பாடு தொடங்கிவிட்டது என்றாலும், அதன் பயன்பாடு மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு பயணம். வளர்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைச் சுற்றுச்சூழலுக்கும் தரவேண்டியது அவசியம்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தினால் மனிதவளத்தை மீளாத் துயரில் ஆழ்த்தும். வேளாண் அறிஞர் சுவாமிநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட போது, சுற்றுச்சூழல் பிரச்சினைதான் மானுடத்தின் பிரச்சினை என்று சொன்னேன்.

ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பைகளால், நிலம், நீர், காற்று என அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. கடல் வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் பொருட்களை உண்டு அழிந்து வருகின்றன. பிளாஸ்டிக் பைகள் எரிக்கப்படும் போது, அதிலிருந்து டயாக்சின் வேதிப் பொருள் வெளியேறி காற்று நஞ்சாகிறது. அதைச் சுவாசிக்கும் மனிதர்களுக்கு நுரையீரல் பாதிக்கிறது.

இத்தனை பாதிப்புகளை உருவாக்கக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தியாக வேண்டும். இதற்காகத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எரியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனைக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி விதிகளை மீறி பிளாஸ்டிக் பை உற்பத்தி செய்த 130 தொழிற்சாலைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.