சுடுகாட்டில் மீட்கப்பட்ட ஜோஸ் ஆலுக்காஸ் நகைகள்!

 சுடுகாட்டில் மீட்கப்பட்ட ஜோஸ் ஆலுக்காஸ் நகைகள்!


வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் திருடப்பட்ட நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நள்ளிரவில் வேலூர் மாவட்டம் காட்பாடி சாலையில் அமைந்துள்ள பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நகைகள் திருடுபோனது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் சம்பவம் நடந்த கடைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர் , 15 கிலோ 900 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி, மோதிரம், வளையல்கள், நெக்லஸ்கள், கம்மல்கள் மற்றும் 819.865 கிராம் எடையுள்ள வைர மோதிரங்கள், 53.758 கிராம் எடையுள்ள சிறிய வைர மோதிரங்கள், 240.358 கிராம் எடையுள்ள வைர நெக்லஸ்கள், 100.577 கிராம் எடையுள்ள பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கடையின் ஊழியர்கள் , காவலர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பெங்களூரு, கேஜிஎப்,ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு சென்று தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் சிங்கம்போன்று முகமூடி அணிந்த ஒருவர் ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் உலாவும் சிசிடிவி காட்சி வெளியானது. இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது. மேலும், பழைய குற்றவாளிகளின் கைரேகையை போலீசார் ஆராய்ந்தபோது, குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டிக்கா ராமன் என்பவரின் உடல் அமைப்பு மற்றும் கைரேகைகளுடன் ஓரளவு ஒத்துப்போனது.

இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒடுக்கத்தூர் அடுத்த உத்திர காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. சுடுகாட்டிற்கு சென்ற போலீசார், உருக்கப்பட்டு தங்கக்கட்டியாக புதைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தங்கத்தை மீட்டனர். கைது செய்யப்பட்ட டிக்காராமான் புகைப்படத்தையும் போலீசார் வெளியிட்டுளனர்.