6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததின் பேரில், ஜனவரி 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகளில்  6, 7, 8ம் வகுப்புகளில் படித்து  வரும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு அடுத்த வகுப்புக்கு மாற்றப்படுவார்கள். இந்நிலையில், ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வருவதில் ஒன்றிய அரசு  முனைப்புக் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் நடுநிலைப் பள்ளிகளில் 6,7,8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த வேண்டும் என்பது ஒரு அம்சமாக புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, தமிழகத்தில் தற்போது மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து ஜனவரி 5ம் தேதி முதல் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதற்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளது. மொழிப்பாடங்கள் மதியம் 2 மணிக்கு தொடங்கி மதியம் 3.15 வரை நடக்கும். மற்ற பாடங்கள் மதியம் 2 மணிக்கு தொடங்கி மதியம் 3 வரை நடக்கும்.