பழனியில் மொட்டையடிக்கும் ஊழியர்கள் போராட்டம்!

 பழனியில் மொட்டையடிக்கும் ஊழியர்கள் போராட்டம்!


தமிழ்நாடு அரசு அறிவித்தபடி ஊக்கத்தொகையான ரூ.5ஆயிரம் வழங்காததை கண்டித்து, பழனி முருகன் கோயிலில் மொட்டை போடும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது. அதனால், கோயில்களில் மொட்டை போடும் ஊழியர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதையடுத்து, ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

பழனி கோயிலில் 330 பேர் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் பணியாற்றியதற்கான ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் இன்னும் வழங்கப்படவில்லை என்றுக் கூறி மொட்டையடிக்கும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேலும் தற்காலிக பணியாளராக பணியாற்றிவரும் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றம் செய்ய வேண்டும், பண்டிகை காலங்களில் கொடுத்துவந்த கருணை தொகையாக 1,000 ரூபாயை இந்த முறை வழங்கவில்லை. இனி வரும் காலங்களில் ஆயிரம் ரூபாய் கருணைத் தொகையை 5ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி ஊழியர்கள் பேட்ஜ் அணிந்து மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.