கொலை வழக்கில் கடலூர் தி.மு.க. M.P. ரமேஷ் சரண்டர்! முழு பின்னணி.....

கொலை வழக்கில் கடலூர்  தி.மு.க. M.P. ரமேஷ் சரண்டர்! முழு பின்னணி.....


கொலை வழக்கில் கடலூர் மக்களவை உறுப்பினரான திமுகவை சேர்ந்த ரமேஷ் அக்டோபர் 11ஆம் தேதி காலை 10.25 மணிக்கு பண்ருட்டி ஜே எம் 1 நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கிறார்.

"எனது முந்திரி தொழிற்சாலையில் வேலை செய்த கோவிந்தராஜ் என்பவரின் மரணத்தின் அடிப்படையில் என் மீது சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதால் திமுக மீது பல்வேறு எதிர்க்கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்வது எனக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது.

எனது உயிரினும் மேலான தலைவரின் நல்லாட்சிக்கு இதனால் எந்த களங்கமும் ஏற்படக்கூடாது என்பதால் நான் நீதிமன்றத்தில் சரண் அடைந்தேன். என் மீதான குற்றச்சாட்டுகளில் ஆதாரமில்லை என்பதை நிரூபித்து குற்றம் அற்றவனாக நான் வெளியே வருவேன்" என்று தான் சரணடைந்ததன் காரணத்தை விளக்கி வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார் எம்பி ரமேஷ்.

கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில்... பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகே இன்று பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்கிறார் ரமேஷ்.

செப்டம்பர் 25ஆம் தேதி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஆணை செப்டம்பர் இருபத்தி ஆறாம் தேதி வெளியிடப்படுகிறது. வழக்கு சிபிசிஐடிக்கு சென்றதுமே திருச்செந்தூருக்கு பயணமான எம் பி ரமேஷ் அங்கே முருகனை தரிசித்து விட்டு சென்னைக்கு திரும்பினார்.

திருச்செந்தூரில் முருகனை தரிசிக்க முடிந்த எம்பி ரமேஷுக்கு... சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடியவில்லை. அரசியல் ரீதியான

நபர்களை பிடித்து முயற்சித்தும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தனது தொழிலதிபர்கள் வட்டார நண்பர்கள் மூலம் முயற்சித்தும் கூட முதல்வரை ரமேஷால் பார்க்க முடியவில்லை. தனக்கு எம்பி சீட் வாங்கி கொடுத்த உதயநிதி ஸ்டாலினையும் பார்க்க முடியவில்லை.

இதற்கிடையே கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வத்திடம் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் தொடர்பு கொண்டு "நம்ம கட்சி எம்.பி‌ மேல கொலை வழக்கு போட்டிருக்காங்க. நாம ஏதாவது செய்யணுமா அண்ணா" என்று கேட்டிருக்கிறார்கள். எம் ஆர் கே பன்னீர்செல்வம், "தலைமை இதுவரை இது பற்றி எதுவும் சொல்லவில்லை. சொன்னதும் பார்த்துக்கொள்ளலாம்" என்று அவர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே ரமேஷின் மூவ்மென்ட்கள் பற்றி உளவுத்துறை சில விஷயங்களை ஆட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்தது.

"திமுக அல்லாத வழக்கறிஞர்களிடம் ரமேஷ் எம்பி ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் பாஸ்கரிடம் ஆலோசனை பெற்றுள்ளார்.

செப்டம்பர் 19-ஆம் தேதி இரவு கோவிந்தராஜை எம் பி ரமேஷின் ஆட்கள் உயிரோடுதான் காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்திருக்கிறார்கள். காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் காடாம்புலியூர் போலீசார் அவரைத் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். அதற்குப்பிறகுதான் கோவிந்தராஜ் இறந்திருக்கிறார். எனவே கோவிந்தராஜ் மரணத்திற்கு போலீசார் தான் காரணம் என்று ரமேஷின் வழக்கறிஞர்கள் அவருக்கு பாயிண்ட் எடுத்துக் கொடுத் திருக்கிறார்கள்.

இதனடிப்படையில் ஜாமீன் பெற்றால் திமுகவை எதிர்க்கவும் ரமேஷ் தயாராகிவிட்டார். அதுமட்டுமல்ல புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் மூலமாக டெல்லியில் தனக்குப் பாதுகாப்பு கேட்டு ரமேஷ் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

ஒருவேளை பாஜக இவரை கையில் எடுத்தால் கட்சியில் இருந்து நீக்கினாலும் எம்பி பதவியை ராஜினாமா செய்யமாட்டார். அவரை வைத்து திமுகவுக்கு எதிராக பாஜக அரசியல் செய்யும்" என்று முதல்வருக்கு உளவுத்துறையினர் ரிப்போர்ட் அளித்திருந்தார்கள்.

காடாம்புலியூர் காவல் நிலையத்தில் காயங்களோடு வந்த கோவிந்தராஜுவை திருப்பி அனுப்பியது ஏன் என்ற ரமேஷ் தரப்பின் கேள்வி சட்ட ரீதியாக முக்கியத்துவம் பெறும் என்றும் உளவுத் துறை முதல்வருக்கு அனுப்பிய ரிப்போர்ட்டில் குறிப்பிட்டு இருந்தது.

இதற்குப் பிறகுதான் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை அழைத்து இந்த விவகாரம் பற்றி விவாதித்திருக்கிறார் முதல்வர். அமைச்சரிடம் சில அறிவுரைகளைச் சொல்லி அவற்றை உடனடியாக செயல்படுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர்.

இந்த சந்திப்புக்கு பிறகு ரமேஷ் எம்.பி.யை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. அதையடுத்து கடலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சிவராஜை தொடர்பு கொண்ட அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம். "எம்.பி. ரமேஷை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய வைக்க உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறியிருக்கிறார். இதையடுத்து ரமேஷ் எம்பி. கடலூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பக்கிரியை தொடர்புகொண்டு பண்ருட்டி நீதிமன்றத்தில் ரமேஷை சரண் அடைய வைக்கும் ஏற்பாடுகள் பற்றி நேற்று ஆலோசித்தார் சிவராஜ்.இந்த நிலையில் நேற்று இரவு 10மணிக்கு அரசு வழக்கறிஞர் பாஸ்கரிடம் முன் ஜாமீன் தொடர்பாக அளித்திருந்த பேப்பர்களை திரும்ப வாங்கிக் கொண்டார் எம்.பி.

இன்று அக்டோபர் 11 காலை 9.30 மணிக்கு மேல் தன் காரை எடுக்காமல் தனது தம்பியான யுவராஜின் காரில் ஏறி பண்ருட்டி ஜே.எம். 1 நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்தார் ரமேஷ் எம்பி. அங்கே திமுக வழக்கறிஞர்கள் அவர் சரணடைவதற்கான ஆவணங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

கடலூர் மாவட்ம் பண்ருட்டியில் இருக்கும் திமுக பிரமுகர் நந்த கோபால கிருஷ்ணனின் மருத்துவமனையில் இதய சிகிச்சை பெற்று வருவதாக ஆவணங்களை தாக்கல் செய்து... அதனால் சிறையிலே முதல் வகுப்பு சலுகைகளை பெறுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று ரமேஷ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ரமேஷின் சரணடைதலை ஏற்றுக்கொண்ட நீதிபதி... கடலூர் மத்திய சிறையில் அடைப்பதற்கு முன் கொரோனா சோதனை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி பரிசோதனை முடிவுகள் வரும் வரை கடலூர் கிளைச் சிறையில் இரு நாட்கள் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி.

10:25 மணிக்கு நீதி மன்றம் வந்த ரமேஷ் எம்.பி. பகல் 1.30 மணி வரை நீதிமன்றத்திலேயே இருந்தார்.

காலை உணவு அருந்தாமல் வந்து விட்டதால் களைப்பாக இருந்த ரமேஷுக்கு நீதிமன்றத்தில் ஒரு தேனீர் அளிக்கப்பட்டது. நீதிபதி உத்தரவிட்ட பிறகு பகல் ஒரு மணிக்கு மேல் கழிவறை செல்லவேண்டும் என்று ரமேஷ் கேட்டார். நீதிமன்றத்தில் உள்ள கழிவறைகள் பூட்டப் பட்டிருந்த நிலையில்... வழக்கறிஞர்கள் சங்கத்தில் கழிவறையை பயன்படுத்திக்கொள்ள அவர்கள் அனுமதித்தனர். போலீஸ் பாதுகாப்போடு அங்கே சென்று வந்த ரமேஷ்... அதன்பின் தனது உதவியாளர் மூலம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் உதவியாளர் பாலமுருகனை தொடர்பு கொண்டு... தான் சரணடைந்த விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் ரமேஷுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவருடன் 15 வருடங்கள் பேசாமல் இருந்த அவரது தங்கை நீதிமன்றத்துக்கு வந்து தன் அண்ணனைப் பார்த்து கண் கலங்கி அழுதார். இப்படி சில சென்டிமென்ட் காட்சிகள் அரங்கேறின. பிறகு போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட ரமேஷ் எம்பி, போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார்.

ஒரு சரணடைதலுக்குப் பின் இத்தனை அரசியல் காய்நகர்த்தல்கள் நடந்திருக்கின்றன.