2021 அக்டோபர் 17 அன்று அரை நூற்றாண்டை தொடும் #அஇஅதிமுக என்ற ஆலமரம் வளர விதை ஊன்றிய நாள் இன்று...

 2021 அக்டோபர் 17 அன்று அரை நூற்றாண்டை தொடும் #அஇஅதிமுக என்ற ஆலமரம் வளர விதை ஊன்றிய நாள் இன்று... 


1972 அக்டோபர் 8-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தான் #புரட்சித்தலைவர் முதன்முறையாக "திமுக தலைவர்கள் ஊழல் புரிந்துவிட்டார்கள்" என்று  குற்றசாட்டு வைத்தார்.

“அண்ணாவின் மறைவுக்குப்பிறகு கட்சியின் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரிய அளவு சொத்து சேர்த்துவிட்டனர். திமுக மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.நடந்துபோய்க்கொண்டிருந்தவர்கள் சொகுசு கார்களில் செல்வதற்கான காரணத்தை மக்கள் கேட்கின்றனர். அமைச்சர்களின் மனைவி மக்கள் மற்றும் உறவினர்களின் சொத்துவிபரங்களை மக்கள் அறிய விரும்புகின்றனர். இதுபற்றி நான் செயற்குழுவில் பேசுவேன்” என கொதிப்பாக பேசினார் #மக்கள்திலகம்.. 

இது திமுக தலைவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. மதுரையில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த திரு.கருணாநிதிக்கு தகவல்போனது. 

அன்றிரவு சென்னை லாயிட்ஸ் சாலையில் #பாரத் பட்டம் பெற்றதற்காக புரட்சித்தலைவருக்கு  நடந்தபாராட்டு விழாவில் பேசிய மக்கள்திலகம்..

"எம்.ஜி.ஆர் என்றால் திமுக… திமுக என்றால் எம்.ஜி.ஆர் என்றேன்.  உடனே ஒருவர் நாங்கள் எல்லாம் திமுக இல்லையா? என்கிறார்.  உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கு உரிமை இருக்கிறது. உனக்கு துணிவிருந்தால் நீயும் சொல். உனக்கு துணிவில்லாததால் என்னை கோழையாக்காதே” என்று தொடர்ந்து 45 நிமிடங்கள் திமுகவையும் கருணாநிதியையும் வறுத்தெடுத்தார்.

மதுரையிலிருந்து கருணாநிதிக்கு உளவுத்துறை மூலம் இந்த தகவல் கொண்டு சேர்க்கப்பட்டது. அவசர அவசரமாக செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு போனது. முதல்நாள் இரவே சென்னைக்கு செயற்குழு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு சில விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.


மொத்தமுள்ள 31 உறுப்பினர்களில் எம்.ஜி.ஆர்., மதியழகன், நெடுஞ்செழியன் இன்னும் இருவர் தவிர்த்து 26 பேர், ‘கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக வெளியிடங்களில் பேசிவரும் எம்.ஜி.ஆர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி’ அவர்களால் கையெழுத்திடப்பட்ட வேண்டுகோள் கடிதம் முதல்வர் கருணாநிதி கையில் வந்தது.

எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருப்பதாக பத்திரிகைகளுக்கு திமுக பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் மூலம் செய்தி சொல்லப்பட்டது. 

'நேற்று இன்று நாளை' படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இந்த தகவல் சென்றது.

சட்டமுறைப்படி விளக்கம் கேட்கும் நோட்டீசு அனுப்பப்படாமல் திமுகவின் தன்னிச்சையான இந்த முடிவு எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியளித்தது.

கொஞ்சநேரத்தில் எம்.ஜி.ஆர் இருந்த படப்பிடிப்புத் தளம் பத்திரிகையாளர்களால் சூழப்பட, படப்பிடிப்பு முடிந்ததும் அவர்களை சந்தித்தார் எம்.ஜி.ஆர். 

"அண்ணா வளர்த்த கட்சியை சர்வாதிகாரம் சூழ்ந்துவிட்டது. அதன்பிடியிலிருந்து கட்சியை திமுகவினர்தான் காக்கவேண்டும்"  -என ரத்தின சுருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் எம்.ஜி.ஆர். 

எம்.ஜி.ஆரை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிருப்தி அலைகளை கருணாநிதிக்கு எதிராக ஏற்படுத்தியிருந்தது.

வெறும் வாதப்பிரதிவாதங்களாக பேசப்பட்டு வந்த எம்.ஜி.ஆர் விவகாரம் உடுமலைப்பேட்டையில் இசுலாமிய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதற்குப்பின் விபரீதமாகிப்போனது.

எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் திமுகவினரும் மோதிக்கொள்ளும் நிலை உருவானது.

தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குகளும் அதைதொடர்ந்து கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

திமுகவில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பை உணர்ந்த சில முக்கியத் தலைவர்கள் எம்.ஜி.ஆர் கருணாநிதி இடையே எழுந்த பிளவை சரிசெய்ய முயன்றனர்.

எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் சந்தித்துப் பேசினால் நிலைமை சரியாகிவிடும் என்று கூறிய அவர்கள் அதற்கான முயற்சிகளிலும் இறங்கினர்.

ஆனால் கருணாநிதியின் தீவிர ஆதரவாளர்களான திமுகவினர், மற்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இவர்களுக்கிடையே நடந்த மோதல்கள் இதற்கு முட்டுக்கட்டைப் போட்டது.

'சட்ட நெறிமுறைகளுக்கு மாறாக தன் மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால் தன்னால் வருத்தம் தெரிவிக்கமுடியாது' என உறுதியாக நின்றார் எம்.ஜி.ஆர். 

திட்டமிட்டபடி திமுக செயற்குழு கூடியது. “கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்ட எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டும் அவர் பயன்படுத்திக்கொள்ளாததால் கழக சட்டவிதி 31-ன்படி பொதுச் செயலாளர் அவர்மீது எடுத்த நடவடிக்கையை செயற்குழு ஏற்றுக்கொண்டு பொதுக்குழுவின் முடிவுக்கு இதை பரிந்துரைப்பதாக” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிலைமை இன்னும் தீவிரமானது. செயற்குழுவில் இருந்த பெண் உறுப்பினர் ஒருவர் எம்.ஜி.ஆர் கடந்த காலத்தில் திமுகவுக்கு பயன்பட்ட விதத்தை சுட்டிக்காட்டி 'எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுப்பது ஆயிரம் வோல்ட் மின்சாரத்தில் கைவைப்பதற்கு சமம்' என கண்ணீர்விட்டபடி கூறினார்.

ஆனால் எம்.ஜி.ஆர் கருணாநிதி இருதரப்பிலும் எந்தவித நெகிழ்வு தன்மையும் உருவாகாததால்  நிலைமை கைமீறிப்போயிருந்தது.

அண்ணாவுக்குப்பின் திமுகவுடன் அனுசரனையை கடைபிடித்துவந்த பெரியார் மற்றும் மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள் எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.

இரண்டு தலைவர்களிடமும் தனக்கு ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளையும் துயரங்களையும் பட்டியலிட்டு தன் நிலையை எடுத்துச்சொன்னார் எம்.ஜி.ஆர். 

இதற்கிடையே திமுகவினர் எம்.ஜி.ஆர் மன்ற உறுப்பினர்களுக்கிடையே தமிழகம் முழுக்க மோதல் ஏற்பட்டு ரத்தக்களறியாகிக்கொண்டிருந்தது.

இந்த பரபரப்புக்கிடையில் பொதுக்குழு கூடியது. 277 பேர் எம்.ஜி.ஆர் நீக்கப்படுவதை ஆதரித்து வாக்களித்ததன் அடிப்படையில் அவர் 'கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்' என அறிவித்தது திமுக தலைமை.

தமிழகம் முழுவதும் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதலுக்குள்ளானார்கள். 

பால்ய வயதில் நண்பர்களாகி தொழிற்முறையில் சகோதரர்களாக பழகி ஒருவருக்கொருவர் தொழில்ரீதியாக வளர்ச்சிபெற உதவிக்கொண்ட இரு ஆளுமைகள் எதிர்எதிர்அணியாக அரசியல் களத்தில் நின்றது அரசியல் களத்தில் ஆச்சர்யமும் அதிர்ச்சியாகவும் பேசப்பட்டது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தகவல் வந்தபோது எம்.ஜி.ஆர் இதயவீணை படப்பிடிப்பில் இருந்தார். கட்சியின் கொடியை தன் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்க்கு வைத்த, திரைப்படங்களில் திமுகவையும் அதன் தலைவரையும் எப்படியாவது சென்சாரின் கழுகுக்கண்களை மறைத்து மக்களிடம் கொண்டுசேர்த்த எம்.ஜி.ஆர் கருவேப்பிலைபோல் தான் துாக்கியெறியப்பட்டதை தாங்கிக்கொண்டார்.

ஆனால் அவரது ஆதரவாளர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. ஆளும்கட்சியாக இருந்தும் திமுகவினர் வெளிப்படையாக தங்கள் கார்களில் கட்சிக்கொடியை ஏற்றிச்செல்லமுடியாத நிலையை உருவாக்கினார்கள் அவர்கள்.

“எம்.ஜி.ஆர் என் மடியில் விழுந்த கனி…அதை எடுத்து என் இதயத்தில் பத்திரப்படுத்திக்கொண்டேன்” என பத்தாயிரம் பேர் சூழ்ந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சொன்னார் அண்ணா.

எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கியது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அதையே சற்று மாற்றிப்போட்டு “கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதுதான் துாக்கி தூர எறியவேண்டியதானது” என தன் வார்த்தை ஜாலத்தோடு பதில்சொன்னார், கருணாநிதி.

இறுதிக்காலம் வரை திரைத்துறையில் ராஜாவாக கோலோச்சியபடி அண்ணாவின் கட்சிக்கு ஆதரவாளராக தன் இறுதிவாழ்க்கையை கழிக்க நினைத்த எம்.ஜி.ஆர் அதற்கு நேர்மாறாக அடுத்த பல ஆண்டுகளுக்கு பரபரப்பு அரசியல்வாதியாக மாற அடித்தளம் போட்டது கருணாநிதியின் நடவடிக்கைகள்.

“நான் இறக்கும்வரை அண்ணாவின் கழகத்தில்தான் இருப்பேன். நான் இறக்கும்போது என் உடலில் கழகத்தின் கொடிதான் போர்த்தப்படவேண்டும்” 

-என்று வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு பெருமிதத்துடன் பேட்டியளித்த எம்.ஜி.ஆர், பேட்டி வெளியான சில மாதங்களில் திமுகவை எதிர்த்து ஒரு கட்சியையே உருவாக்கும் கட்டாயத்துக்கு உள்ளானதுதான் வரலாற்றின் விளையாட்டு.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டபின் சாரிசாரியாக தன்னை வந்து சந்தித்த ரசிகர்களும், திமுகவின் அதிருப்திக் கூட்டமும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உருவாகக் காரணமானார்கள்.

காலத்தின் தேவையும் கழகத்தில் சிலருடைய உள்நோக்கமும் எம்.ஜி.ஆருக்கு நிஜத்தில் இன்னொரு பாத்திரத்தை வழங்கியது.

எதிலும் அண்ணாவை முன்னிறுத்தி செயல்படும் எம்.ஜி.ஆர் கட்சிப்பெயரிலும் அண்ணாவின் பெயரை சேர்த்து 'அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்' என்ற கட்சியை 1972-ம் ஆண்டு அக்டோபர் 17 நாளில் துவங்கினார்.

திண்டுக்கல்லில் இடைத்தேர்தலில் பெற்ற முதல் வெற்றியை தன் ஆயுட்காலம் வரை மக்களின் துணையால் தக்கவைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.

அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகாமல் இரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்னைகளின் எதிரொலியாக உருவான ஒரு கட்சி கிட்டதட்ட 49 ஆண்டுகள் தமிழகத்தில் வெற்றிகரமாக கோலோச்சிவருவது பெரும் சாதனை. 

அந்த சாதனைக்கு எம்.ஜி.ஆர் என்ற தனிநபரே காரணம்.எம்.ஜி.ஆரின் மறைவிற்குப்பின் சிதற இருந்த கட்சியை தன் சாதுர்யத்தாலும் திறமையாலும் கட்டிக்காத்து ஆளும் கட்சியாக நீடிக்கவைத்திந்தது #புரட்சித்தலைவி   என்ற இரும்புப் பெண்மணியின் சாதனை.