ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன....? ஒரு முழு ரிப்போர்ட்....!

ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன....?  ஒரு முழு ரிப்போர்ட்....!

உலக நாடுகள் முழுவதிலும் இப்போது முதற்கட்ட செய்தியாக இருப்பது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது தான். அவர்களது ஆட்சியின் கீழ் வாழ முடியாது எனக் கருதி ஆப்கானிஸ்தான் மக்கள் வேறு நாடுகளுக்கு தஞ்சம் புக தொடங்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது தலிபான்கள் யார் என்பது பற்றி தெரிந்துகொள்ள நாம் அந்நாட்டின் வரலாற்றில் இருந்து தான் தொடங்க வேண்டும். உலகத்தின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் ஆப்கானிஸ்தான் எந்த காலத்திலும் அமைதியாக இருந்ததில்லை. அங்கு எப்போதும் போர் மூளும் சூழல் இருந்துள்ளது. அதற்கு காரணம் அந்த நாடு அமைந்திருந்த இடம்.

பல நூற்றாண்டுகளாக உலக வணிகத்திற்கு முக்கிய வழியாக அமைந்த இடம் ஆப்கானிஸ்தான்.

உலக வரைபடத்தை எடுத்து பார்த்தால் பாகிஸ்தானுக்கு அருகே அமைந்திருக்கிறது ஆப்கானிஸ்தான்.  அதனை சுற்றி ஈரான், உஸ்பெகிஸ்தான் போன்றவை எல்லைகளாக இருக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்திற்கு நுழைவாயிலாகவும் ரஷ்யா சீனாவிற்கு எல்லையாகவும் இருப்பதால்தான் ஆப்கானிஸ்தானில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றது. கிட்டத்தட்ட கிமு 2000-களிலேயே ஆப்கானிஸ்தானில் சிந்து சமவெளி நாகரிகத்தோடு வணிகத் தொடர்பு செய்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இத்தனை முக்கியத்துவங்கள் இருந்ததால் தான் பல சாம்ராஜ்யங்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்திருக்கிறது. பெர்சிய பேரரசு, அலெக்சாண்டர், மௌரியப் பேரரசு, பார்த்தியன் பேரரசு,  குஷான் பேரரசு என பல பேரரசர்கள் ஆண்ட நிலப்பரப்பு அது. கிபி 1861-க்கு பிறகு தொடர்ந்து இஸ்லாமிய அரசுகள் தான் ஆப்கானை ஆட்சி செய்து வருகின்றது. பல அரசுகள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்திருந்தாலும் அந்த நாட்டில் இருக்கக்கூடிய பூர்வகுடிகளை கட்டுப்படுத்துவது என்பது அந்தந்த அரசுகளுக்கு பெரிய சவாலாக இருந்துள்ளது. இதனால் பல உள்நாட்டுப் போர்கள் ஆப்கான் வரலாற்றில் இருக்கிறது.

ஆசிய நிலப்பரப்பில் இருந்த உலகத்தின் வணிக பாதையை  எப்போது ஐரோப்பியர்கள் கடல் மார்க்கமாக ஆரம்பித்தார்களோ அப்போது ஆப்கானிஸ்தான் மேல் இருந்த கவனம் உலகத்திற்கு குறைய ஆரம்பித்தது. ஆனால் அதே நேரம் ஆப்கானிஸ்தான் வேறு ஒரு அரசியல் விளையாட்டிற்குள்  நுழைந்தது. இதன் பிறகுதான் வல்லரசு நாடுகளின் புதைகுழி என்று ஆப்கானிஸ்தான் பெயர் பெற்றது. ஆப்கானிஸ்தான் நாட்டில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்து அவமானப்பட்ட முதல் வல்லரசு நாடு பிரிட்டிஷ். மிகப் பெரிய சாம்ராஜ்யமாக பிரிட்டிஷ் வளர்ந்து இருந்த காலம் அது.

இந்தியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் பிரிட்டிஷ் கொண்டு வந்திருந்த நேரத்தில் ரஷ்யாவின் முடி ஆட்சி மிக வலிமையாக இருந்தது. அப்போது ரஷ்யா ஆப்கான் வழியாக தங்களைத் தாக்கி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ஆப்கானை பிரிட்டிஷ்  தாக்கியது. அப்போது ஆரம்பிக்கப்பட்டது தான் முதல் ஆங்கிலோ ஆப்கான் போர். அந்த போரில் பிரிட்டிஷ் ஜெயித்ததையடுத்து  அப்போதைய ஆப்கான் அரசராக இருந்த தோஸ்த் முகம்மது கான் பதவியில் இருந்து இறக்கப்பட்டு பிரிட்டிஷ் நாட்டிற்கு சாதகமான ஆட்சிக்குக் கீழ் நாட்டை கொண்டு வந்தார்கள். ஆனால் அதன்பிறகு பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்க பிரிட்டிஷ் படைகளை மொத்தமாக அழித்து விட்டு பிரிட்டிஷ்க்கு சாதகமாக இருந்த அரசை வீழ்த்தி மீண்டும் தோஸ்த் முகம்மது கான் மன்னராக நியமிக்கப்பட்டார்.

இது பிரிட்டிஷ்க்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அதனை சமாளிக்க இரண்டாவது முறையாக போரைத் தொடுத்து அதிலும் தோல்வியை கண்டது. எனவே மீண்டும் மூன்றாவது முறையாக போரை நடத்தி அதிலும் பிரிட்டிஷ் ஜெயிக்க முடியாததால் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு எங்கள் எல்லைகளை மட்டும் தாக்காமல் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து பின்வாங்கியது. பிரிட்டிஷை தோற்கடித்த பிறகு எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என்று  இருந்தது கிங்டம் ஆப் ஆப்கானிஸ்தான் என மாறியது அதன் பிறகு நாட்டின் அரசராக 1933இல் பதவி ஏற்றவர் தான் முஹம்மத் ஜாகிர் ஷா.

அதுவரை கட்டுப்பாடுகள் இல்லாமல் உள்ளுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தானை கட்டுக்குள் கொண்டு வந்த மன்னர் தான் இவர். தீவிர இஸ்லாமிய மதவாத கொள்கைகளை தூக்கி எறிந்து பெண்களுக்கு சம உரிமை, கல்வி உரிமை மாதிரியான சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் இவர்தான். அதேபோன்று ஆப்கானிஸ்தானில் தனக்குக் கீழ் இருந்த முடி ஆட்சியை கலைத்துவிட்டு இப்போது பிரிட்டனில் இருப்பது போன்று பொதுத் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்றம் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யக்கூடிய புதிய வழியை வகுத்தவரும் இவரே. அதனால்தான் 2001-ல்  தலிபான்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் ஆப்கானிஸ்தானில் நுழைந்த இவரை தேசத்தின் தந்தை என்று கொண்டாடினார்கள்.

1973-ல் மன்னர் ஜாகிர் ஷா வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவ அமைச்சராகவும் பிரதமராகவும் இருந்த அரச குடும்பத்தை சேர்ந்த முகம்மத் தாவூத் கான் ஒட்டுமொத்த நாட்டையும் இராணுவத்தைப் பயன்படுத்தி கைப்பற்றியதோடு முடி ஆட்சியை கவிழ்த்து ரிபப்ளிக் ஆப் ஆப்கானிஸ்தானை உருவாக்கினார். நாட்டை சூழ்ச்சியால் கைப்பற்றி இருந்தாலும் இவரது ஆட்சிக்காலம் பொற்காலமாகவே ஆப்கானிஸ்தானுக்கு அமைந்திருந்தது. இவர் ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்கா எப்படி ஆப்கானிஸ்தான் உள்ளே நுழையலாம் என முயற்சிக்க தொடங்கியது. இவரது ஆட்சிக்காலத்தில் பல நன்மைகளை செய்த இவர் பெண்களுக்கு கட்டாயக் கல்வியை கொண்டு வந்தார்.

அதோடு தனது சீர்திருத்தக் கொள்கைகளை எதிர்த்த தீவிர இஸ்லாமிய அமைப்புகளை பாகிஸ்தானுக்கு விரட்டியடித்தார் தாவூத். இவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்பில் உள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்து பாகிஸ்தானில் இருக்கும் மதரஸாவில் தீவிர இஸ்லாமிய கோட்பாடுகளை கற்றுக் கொடுத்தனர். இதுதான் தலிபான்களின் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. ஆப்கானிஸ்தானில் அப்போது இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டிதான் PEOPLE'S DEMOCRATIC PARTY OF AFGANISTAN  இதற்குள்ளும் இரண்டு பிரிவினை இருந்தது. அது இரண்டையும் ஒன்றாக இணைக்க சோவியத் யூனியன் தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.

அதன் மூலமாக ஆப்கானிஸ்தான் உள்விவகாரங்களில் அதிகமாக தலையிட ஆரம்பித்தது சோவியத் யூனியன். இதனை குறைப்பதற்காகவும் கம்யூனிஸ்ட்டிற்கு  மாற்றாக இன்னொரு பார்ட்டி இருக்க வேண்டும் என்பதற்காகவும் NATIONAL REVOLUTIONARY PARTY என ஒரு புதிய கட்சியை ஆரம்பித்தார் தாவூத். இது சோவியத்தை எரிச்சலடைய செய்த சமயத்தில் தான் சோவியத் யூனியனின் அதிபராக இருந்தவரை தாவூத் சந்தித்தார். அப்போது அந்த அதிபர் தாவூத்திடம் ஆப்கானிஸ்தான் தனது எல்லைகளில் இருக்கும் அமெரிக்க படைகள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்றும் தாவூத் தனது அமைச்சரவையில் முடி  ஆட்சியிலிருந்து அதிகாரிகளாக இருப்பவர்களை நீக்கிவிட்டு புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கு தாவூத் ஆப்கானிஸ்தான் சுதந்திரமான நாடு, எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம் என்று நேரடியாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அதன்பிறகு ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய தாவூத் சோவியத் யூனியனுடன் இருந்த தொடர்பை குறைக்க தொடங்கியதோடு அமெரிக்காவுடனும் ஐரோப்பாவுடன் இருக்கக்கூடிய உறவை அதிகரித்துக் கொண்டார். தனது எல்லைக்கு அருகே இருக்கும் நாட்டில் அமெரிக்காவின் கால்தடம் பதிந்து விடக்கூடாது என சோவியத் யூனியன் முடிவு செய்ததால் தனது உளவு படையான KGB மூலமாகவும் ஆப்கானிஸ்தானில் இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டி மூலமாகவும்  தாவூத் கானின் ஆட்சியை கலைத்தது சோவியத் யூனியன்.

ஆட்சியை கைப்பற்றியதோடு மட்டுமில்லாமல் தாவூத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை அதிபர் மாளிகையில் வைத்து படுகொலை செய்தது அந்த படை. அதன்பிறகு கம்யூனிஸ்ட் பார்ட்டியின் கீழ் வந்த ஆப்கானிஸ்தானுக்கு புதிய அதிபராக பதவியேற்றார் நூர் மோகமத் தராக்கி. அவரது ஆட்சிக்காலத்தில் ஆப்கானிஸ்தான் பல மாற்றங்களை கண்டது. ஜாஹிர் ஷாவும் தாவூத்தும் முன்னெடுத்த சமூக சீர்திருத்தங்களை தராக்கி வந்த வேகத்தில் முன்னெடுத்தது இஸ்லாமிய தலைவர்களுக்கு பிரச்சினையாக அமைந்தது. அதனால் தராக்கியை எதிர்த்து உள்நாட்டுப் போரை அவர்கள் தொடங்கினார்கள். கம்யூனிஸ்ட்களை ஒடுக்க நினைத்த அமெரிக்கா இந்த உள்நாட்டுப் போரில் இஸ்லாமியப் படைக்கு மறைமுகமாக ஆதரவளித்தது.

இந்த உள்நாட்டுப் போரில் தராக்கி கொலை செய்யப்பட்டு கம்யூனிஸ்ட் பார்ட்டியின் ஹஷிபுல்லா அதிபராக பொறுப்பேற்றார். அதே நேரத்தில்தான் ஈரானில் ஆடம்பரமாக செலவு செய்து கொண்டிருந்த மன்னனை தூக்கி எறிந்து விட்டு அங்கு இஸ்லாமிய குடியரசு என்பது உருவானது. ஈரானில் ஏற்பட்ட அந்த இஸ்லாமிய புரட்சி ஆப்கானிஸ்தானிலும் ஏற்பட்டுவிடுமோ என பயந்து இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உருவாக்கினார் ஹஷிபுல்லா. பொது இடங்களில் குர்ஆனில் உள்ள நல்ல வார்த்தைகளை எடுத்துரைத்து பேசினார். ஆனால் அது எதுவும் பலனளிக்காமல் செப்டம்பரில் அதிபராக பதவியேற்ற அவரை அக்டோபரில் படுகொலை செய்தார்கள் இஸ்லாமிய அமைப்பினர்.

கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருக்கும் நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டு அந்த காட்சியை கலைக்கும் அளவிற்கு நிலைமை சென்றதால் சோவியத் யூனியனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் நேரடியாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் நிலையை சரி செய்வதாக களத்தில் குதித்தது சோவியத் யூனியன். அவர்களை எதிர்த்து இஸ்லாமிய படையினரும் களத்தில் குதிக்க அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் சேர்ந்துகொண்டு ராணுவ பயிற்சி ஆயுத உதவி போன்றவற்றை செய்தது. இந்தப் போரில் இறங்கிய இஸ்லாமிய அமைப்பினர் தங்களை ஒட்டுமொத்தமாக முஜாஹிதீன் என அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

அவ்வாறு சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமிய தேசத்தை காப்பாற்றுவதற்காக அல் கொய்தா என்ற அமைப்பை உருவாக்கி களம் இறங்கிய ஒசாமா பின்லேடனை வளர்த்துவிட்டது அமெரிக்காதான். சோவியத் யூனியனால் போரில் ஆப்கானிஸ்தானின் தாக்குதல் முறையை கையாள முடியாததால் பத்து வருடங்கள் மிகப்பெரிய அளவில் நடந்த அந்தப் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு 1989-ல்  சோவியத் யூனியன் தங்கள் படைகளை ஆப்கானை விட்டு திரும்பச் சொல்லியது. சோவியத் யூனியனுக்கு தலைவலியாக அமைந்த ஆப்கானிஸ்தானுக்கு 1992ல் ஒரு முடிவு வந்தது.

ஆப்கானிஸ்தான் ராணுவத்தை மொத்தமாக தோற்கடித்து விட்டு காபூலை கைப்பற்றிய முஜாஹிதீன் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்று ஆப்கானிஸ்தானின் பெயரை மாற்றியது. அதன் பிறகும் அங்கு அமைதியான சூழல் உருவாகவில்லை. அந்தப் போரில் பங்குபெற்ற இஸ்லாமிய அமைப்பினர் இடையே யார் ஆட்சி பொறுப்புக்கு வருவது என ஒரு போட்டி உருவாகி நாளடைவில் அது போராகவும் மாறியது. 1992 இல் இருந்து அந்தப் போர் நடைபெற்றது. சோவியத் யூனியனையும் கம்யூனிஸ்டுகளையும் விரட்டி அடித்த பிறகும் இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய அமைப்புகளை பார்த்து அந்தப் போரில் பங்கேற்ற முகம்மது உமர் என்பவருக்கு கோபம் வந்ததால் தனது மதரஸா மாணவர்களோடு பிரிந்து சென்று ஆரம்பித்ததுதான் தலிபான்.

தலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று அர்த்தம். பாகிஸ்தானின் மதரஸாக்களில் ஆப்கானிஸ்தானின் மதரஸாக்களில் தீவிர இஸ்லாமிய சட்டங்களை பயின்று அதையே பின்பற்ற வேண்டும் என்று கொள்கையாக வைத்திருந்த மாணவர்கள் தான் இந்த அமைப்பில் அதிகமாக சேர்ந்தார்கள். இந்த தலிபான்களை அமெரிக்கா ஆதரித்து அவர்களுக்கு பல மில்லியன் டாலர் கணக்கில் செலவழித்து ராணுவ உதவி, பண உதவி போன்றவற்றை செய்தது. அதுமட்டுமின்றி தலிபான்கள் தங்கள் மாணவர்களை சரியாக உருவாக்க வேண்டும் என்பதற்காக பல மில்லியன் டாலர்களை இந்தத் தீவிர இஸ்லாமிய கோட்பாடுகளை சொல்லிக்கொடுக்கும் புத்தகங்களை தயார்செய்ய செலவு செய்தது அமெரிக்கா.

அதே நேரம் தங்களது மண்ணில் உருவான தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தால் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும் தலிபான்களுக்கு உதவியது. அதுமட்டுமில்லாமல் அல்கொய்தா ஆதரவும் ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கு கிடைத்தது. இதனால் ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் தலிபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இதனால்தான் மிகத் தீவிரமான இஸ்லாமிய சட்ட திட்டங்கள் உள்ளடங்கிய ஆட்சியை நடத்தியது தலிபான் அமைப்பு.

ஆப்கானிஸ்தான் பல பாரம்பரியங்களுக்கும் வரலாற்று சுவடுகளுக்கும் ஆதாரமாக இருக்கக்கூடிய பூமி. ஆனால் அவை அனைத்தையும் இஸ்லாமியத்திற்கு விரோதமாக பார்த்த தலிபான்கள் கிபி ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புத்தர் சிலை போன்றவற்றை டைனமைட் வைத்து அழித்தார்கள். பெண்கள் கல்வி கற்கக் கூடாது, குர்கா போடாமல் வெளியில் சுற்றக் கூடாது எனக் கூறினார்கள். அவர்கள் விதித்த விதி முறைகளை மீறியவர்களை கல்லால் அடித்து கொன்றார்கள். கைவிரல்களை துண்டாக வெட்டுவது, பொது இடத்தில் தூக்கிலிடுவது, தலையை துண்டிப்பது. சவுக்கடி கொடுப்பது என பல கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டது.

21ஆம்  நூற்றாண்டில் இப்படி ஒரு ஆட்சி நடக்குமா என கேட்கம் அளவிற்கு அவர்களது ஆட்சி காட்டுமிராண்டித்தனமாக இருந்தது. இந்த சூழலில் எந்த பின்லேடனை சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்கா வளர்த்ததோ அதே பின்லேடன் அமெரிக்காவிற்கு எதிராக மாறத் தொடங்கினார். எண்ணெய் வளத்திற்காக அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்த்து அதற்கு பதிலடி கொடுப்பதாக 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று இரட்டை கோபுரத்தை தாக்கினார்கள் பின்லேடனின் அல்கொய்தா அமைப்பினர். அந்த தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்திற்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

அதற்கு காரணமான பின்லேடன் ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்து அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டது. ஆனால் தலிபான்கள் பின்லேடனை ஒப்படைக்க முடியாது என நேரடியாக கூறிவிட்டார்கள். அதற்கு பதிலடி கொடுக்க முடிவு எடுத்த அமெரிக்கா தலிபான்களை எதிர்த்து ஆப்கானிஸ்தானில் போர் அறிவித்து முதலில் தலிபான்களை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு தங்களுக்கு சாதகமான ஒரு அரசை ஆப்கானிஸ்தானில் கொண்டு வந்தது. ஆனால் ஒட்டுமொத்த தலிபான்களையும் அமெரிக்காவால் அழிக்க முடியவில்லை. ஏனென்றால் 2003ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக்  மீது கவனம் செலுத்த தொடங்கி விட்டது.

சதாம் உசேனை பிடிக்கும் நோக்கம் ஆப்கானிஸ்தானில் கவனத்தை சிதற வைத்தது. ராணுவத்தின் உழைப்பு, பொருளாதாரம் போன்றவை ஈராக்குடன் நடந்த போரில் அதிகமாக செலவானதால் ஆப்கானிஸ்தானில் அவர்களது கவனம் குறைந்தது. அதன்பிறகு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை தாக்குதல் மூலமாக அமெரிக்கா அழித்தது. பின்லேடனை பிடிப்பதற்காக மட்டுமல்லாமல் தலிபான்களை அழிப்பதாக அமெரிக்கா கூறியதால் இருபது வருடங்களாக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்தது.

ஒவ்வொரு முறையும் போர்தொடுத்து அமெரிக்கா தோல்வியையே சந்தித்ததால் அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் இது  பிரதிபலிக்கத் தொடங்கி வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் விசயமாக மாறியது. இதனிடையே வேறு வழியில்லாமல் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் நாடு திரும்ப முடிவு எடுத்து அது ஒபாமா காலத்தில் தொடங்கப்பட்டு ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் முடிவெடுக்கப்பட்டு தற்போது பைடன் ஆட்சியில் நாட்டிற்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் பிரிட்டிஷ் எப்படி ஆப்கானிஸ்தானிடம் எங்கள் எல்லையைத் தாக்காதீர்கள் என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டு பின்வாங்கியதோ அதேபோன்று இப்போது அமெரிக்கா எங்கள் எல்லைகளைத் தாக்காதீர்கள் என்று தலிபான்களிடம் ஒப்பந்தம் போட்டு நாடு திரும்புகிறது.

இப்படி பல வல்லரசுகளை ஓடவிட்ட புதைகுழி தான் ஆப்கானிஸ்தான். 2001இல் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி எப்படி இருந்தது என்பதை இந்த உலகம் கண்கூடாக பார்த்தது. அதேபோன்று ஒரு கடுமையான ஆட்சியை இப்போதும் அவர்கள் தொடர்வார்கள் என்ற பயத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க படைகளுக்கு உதவியவர்கள் மரண பீதியில் இருக்கின்றனர். இது ஆப்கானிஸ்தான் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல்  இது இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சிகரமான நிகழ்வாகவே அமைந்துள்ளது.

ஏனென்றால் 224 கோடி ரூபாயை  இந்தியா ஆப்கானிஸ்தானில் கட்டமைப்புகளுக்காக செலவு செய்துள்ளது. 2015ல் ஆப்கானிஸ்தானின் புதிய பாராளுமன்றத்தை இந்தியாதான் கட்டிக்கொடுத்தது. அதனை திறந்து வைத்தது கூட நமது பிரதமர் நரேந்திர மோடி தான். ஆனால் இப்போது ஆப்காணிஸ்தானில் தாலிபான்களின் கை ஓங்கி இருப்பதால் இந்தியாவுக்கும்  ஆப்கானுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறிதான். அதே போன்று அடுத்த வல்லரசாக வேண்டும் என கனவு காணும் சீனாவும் ஆப்கான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை தான் எடுத்திருக்கிறது.

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு முதன் முதலில் அங்கீகரித்தது இரண்டு நாடுகளை தான். ஒன்று சீனா மற்றொன்று பாகிஸ்தான். இந்த இரண்டு நாடுகளுமே தலிபான்களுக்கு பின்பலமாக இருந்து ராணுவ உதவிகளையும் பண உதவிகளையும் செய்த நாடுகள். சீனா இந்த விவகாரத்தில் கூடுதலாக ஆர்வம் காட்டுவதற்கு காரணம் இந்தியாவிற்கு செக்  வைக்கவேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகவும் தான். உலகத்தின் மிக முக்கியமான அரசியல் மாற்றங்கள் அனைத்துமே மாணவர்கள் சமுதாயத்தினால் தான் முன்னெடுத்து நடத்தப்பட்டுள்ளது அந்த மாணவர்கள் சரியாக வழி காட்டப்படவில்லை என்றால் அது எங்கு போய் முடியும் என்பதற்கு தலிபான்களும் ஆப்கானிஸ்தானும் நிதர்சனமான உதாரணம்.