விவசாய மின் இணைப்புக்காக காத்திருக்கும் 4.74 லட்சம் விவசாயிகள்!விண்ணப்பித்து 20 ஆண்டுகளாகின்றன;
விவசாய மின் இணைப்புக்காக காத்திருக்கும் 4.74 லட்சம் விவசாயிகள்!
கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் வேளாண் பணிக்கான மின் இணைப்புக்காக விண்ணப்பித்து, 4.74 லட்சம் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கான மின் இணைப்பை பெறுவதில், ஏகப்பட்ட சட்டத் திட்டங்கள் இருந்துவந்தன. இதனால் மின் இணைப்பு பெறுவதில் காலதாமதங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக நிலத்தை வாங்கிப் போட்டு விவசாயம் செய்யாமலே உள்ளவர்களும் உண்டு.
தமிழக அரசு, தற்போது இதனை எளிதாக்கியுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அமர்வு, அண்மையில் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மின் இணைப்பு பெறுவதில் எளியமாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு, இதை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தமிழ்நாடு மின்வாரியம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், ‘கடந்த 2000-ம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தமிழகத்தில் மின் இணைப்பு வேண்டி 4,74,593 விவசாயிகள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது அவர்கள் தெரிவித்த விவரம்:
வேளாண் பணிக்கென விண்ணப்பித்த உடனே மின் இணைப்பு வழங்கப்படுவதில்லை.
விவசாயிகள் இலவச மின்சாரம் பெற சுயநிதி மின் இணைப்பு எனப்படும் 'தத்கல்' விரைவு திட்டம், சாதாரண மின் திட்டம் என இரு முறைகளில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
சுய நிதி மின் இணைப்புத் திட்டத்தில், ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டுச் செலவு பிரிவில் 2001-ம் ஆண்டு வரையிலும், ரூ.25 ஆயிரம் மதிப்பீட்டுச் செலவு பிரிவில் 2008-ம் ஆண்டு வரை விண்ணப்பித்தவர்களுக்கும், ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டுச் செலவு பிரிவில் 2010-ம் ஆண்டு வரை விண்ணப்பித்தவர்களுக்கும் தற்போது மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
2017-ம் ஆண்டு சுயநிதி பிரிவு என அழைக்கப்படும் இந்த மின் இணைப்பு திட்டம், 'தத்கல்' விரைவு மின் இணைப்புத் திட்டமாக மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டது.
அதன்படி, 5 குதிரை திறன் உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க, ரூ.2.50 லட்சம்,
7.50 குதிரை திறனுக்கு ரூ.2.75 லட்சம்,
10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சம்,
15 குதிரை திறனுக்கு ரூ.4 லட்சம் என விவசாயிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த முறையில் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.
விரும்புபவர்கள் ‘தக்கல்’ திட்டத்தில், இதற்கான கட்டணத்தை செலுத்தி இணைப்பை பெறலாம். அரசு கூடுதலாக அனுமதி வழங்கினால் அதற்கேற்ப, அதிக எண்ணிக்கையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
ரூ.3,500 கோடி செலவு
இதற்கிடையே, விவசாயத் தேவைக்கென சாதாரண மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களில், முதற் கட்டமாக கடந்த 31.3.2000 முதல் 31.3. 2003 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வரும் 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
விவசாய இணைப்புக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதால், மின் வாரியத்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.3,500 கோடி வரை செலவாகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் பாண்டியனிடம் கேட்டபோது,
“விவசாய மின் இணைப்பை மாற்றிக்கொள்வது குறித்த தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கதக்கது. சாதாரண திட்டம், சுயநிதி திட்டம் என இரு பிரிவிலும் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உடனே மின் இணைப்பு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்றார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தியிடம் கேட்டபோது,
“இலவச மின்சாரம் வழங்குகிறோம் என்று கூறும் அரசு, கட்டணம், கட்டணமில்லா பிரிவு என இரண்டிலும் சேர்த்து 4 லட்சம் விவசாயிகளின் விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருப்பது அநீதியாகும். இதில் தட்கல் முறையில் ஒரு மாதத்தில் இணைப்பு வழங்கப்படும் என்று கூறினாலும், ரூ.4 லட்சம் மற்றும் அதற்கு மேல் கட்டணம் கட்டுபவர்களுக்கு மட்டுமே விரைந்து இணைப்பு வழங்கப்படுகிறது” என்றார்.