நீதிமன்ற நடவடிக்கையை அலைபேசியில் படம் பிடித்த அரசு ஊழியர் மீது அவமதிப்பு வழக்குநீதிபதி நடவடிக்கை

 நீதிமன்ற நடவடிக்கையை அலைபேசியில் படம் பிடித்த அரசு ஊழியர் மீது அவமதிப்பு வழக்குநீதிபதி நடவடிக்கை!

மதுரை, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிமன்றம் அறையில் விசாரணை நடைமுறையை அலைபேசியில் படம் பிடித்த அரசு ஊழியர் மீது தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் ஊரக நல அலுவலராக பணிபுரிபவர் சந்திர மாரியப்பன். இவர் துறை சார்ந்த ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக உயர்நீதிமன்றம் கிளைக்கு வந்தார்.நீதிமன்றம் அறை 5 ல் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்துக் கொண்டிருந்தார். 

அங்கு நீதிமன்ற நடவடிக்கைகளை சந்திர மாரியப்பன் தன் அலைபேசியில் படம் பிடித்தார். இதை கண்காணித்த நீதிபதியின் உத்தரவுப்படி, அலைபேசியை ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். 

அதில், நீதிபதி அமரும் மேடையை படம் பிடித்தது தெளிவற்ற வகையில் பதிவாகியிருந்தது. அலைபேசி நீதிமன்ற பதிவாளரிடம் (நிர்வாகம்) ஒப்படைக்கப்பட்டது. 

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு: 

சந்திர மாரியப்பன் செய்த தவறான செயலுக்கு, அவர் வருத்தம் தெரிவித்தாலும், அது திருப்தி அளிக்கும் வகையில் இருக்காது. அவர் மீது இந்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்கிறது. 

அவரிடம் 4 வாரங்களில் விளக்கம் பெறும் வகையில், உயர்நீதிமன்றம் பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விளக்கத்தின்படி மேல்நடவடிக்கைக்காக உயர்நீதிமன்றம் முதல் அமர்வின் (நிர்வாக நீதிபதி அமர்வு) கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.