என் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை: எஸ்.பி.வேலுமணி சிறப்பு பேட்டி.....

 என் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை: எஸ்.பி.வேலுமணி சிறப்பு பேட்டி.....

என் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரும் தற்போதைய அதிமுகவின் கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்த வேலுமணியிடமும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பின்னர் முதன்முறையாக எஸ்.பி.வேலுமணி இன்று கோவை திரும்பினார்.

கோவை விமான நிலையம் வந்த அவரை அதிமுக தொண்டர்களும் அவரது ஆதரவாளர்களும் உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி ஊர்வலமாக வந்தார். இதனால் அவினாசி சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. எனக்குச் சம்பந்தப்பட்ட மற்றும் சம்பந்தம் இல்லாத இடங்களில் காவல்துறையை ஏவிவிட்டு சோதனை நடத்தினர்.

இதுபோன்ற சமயத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் அமைச்சர்கள் தொண்டர்கள் கோவை மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கு நடந்து கொண்டிருப்பதால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் மக்கள் எங்களை வெற்றி பெற வைத்து அங்கீகாரம் கொடுத்து உள்ளனர். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியைக் கடந்த 5 ஆண்டுகளில் கோவைக்குப் பெற்றுத் தந்துள்ளேன்.

லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் 13 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகப் பத்திரிக்கைகளில் பார்த்தேன். என் வீட்டிலோ எனது உறவினர் வீட்டிலோ எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதுபோன்று என் வங்கிக் கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை.

எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. 30 ஆண்டுகளாகச் சபரிமலைக்குச் சென்று வருகிறேன். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிபதிகள் மீது நம்பிக்கை இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இந்த ஆட்சி தொடர, கட்சி ஒற்றுமையாக இருக்க நான் முக்கிய காரணம்.

நான் உள்ளாட்சித் துறையிலிருந்தபோது, 148 விருதுகள் பெற்று யாரும் செய்யாத சாதனையைச் செய்துள்ளோம். கோவை மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்” என்று தெரிவித்தார்.