'ஜாமின்' மனு மீது முடிவெடுக்க அளவுகோல் வகுத்தது: சுப்ரீம் கோர்ட்

 'ஜாமின்' மனு மீது முடிவெடுக்க அளவுகோல் வகுத்தது: சுப்ரீம் கோர்ட்


குற்றம் சாட்டப்பட்டவரின் 'ஜாமின்' மனு மீது முடிவு எடுப்பதற்கு முன், உயர் நீதிமன்றங்கள் பரிசீலிக்க வேண்டிய அளவுகோல்களை உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது.

கொலை குற்றவாளி ஒருவருக்கு, உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

இந்த மனுவை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

'குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கும் முன் உயர் நீதிமன்றங்கள் பரிசீலிக்க வேண்டிய அளவுகோல்களை நிர்ணயிக்க வேண்டியது அவசியம்' என கூறிய நீதிபதிகள், அது குறித்த அளவுகோல்களையும் அறிவித்தனர்.

வழக்கின் சாட்சிகள் பாதிக்கப்பட வாய்ப்பு, குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை மற்றும் முந்தைய குற்ற செயல்கள், குற்றம் செய்ததாக நம்புவதற்கான நியாயமான காரணங்கள், வழங்கப்பட்டுள்ள தண்டனையின் தீவிரம் ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டும்.

மேலும் குற்றச்சாட்டின் தன்மை, ஜாமின் வழங்கினால் தப்பி செல்லும் ஆபத்து உள்ளவரா, மீண்டும் குற்றம் புரிபவரா, நீதித்துறைக்கு நேரும் ஆபத்து ஆகியவற்றையும் பரிசீலித்த பின்பே உயர் நீதிமன்றங்கள் ஜாமின் வழங்க வேண்டும். 

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்.முருகன்