குடியாத்தம் தொகுதியில் வெற்றிக்கொடி நாட்ட போவது யார் ?
மசிகம் பரிதாவா ! கல்லூர் அமுலு வா!
வேலூர் மாவட்டம் , குடியாத்தம் சட்டமன்ற தொகுதி மோர்தானா முதல் தேவலாபுரம் வரை அனுமார் வாலாக நீண்டு இருக்கிறது. இங்கு எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ , அந்த கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்பது அரசியல்வாதிகளின் அதீத நம்பிக்கை.
இந்தத் தொகுதியில் ஆளும் கட்சி வேட்பாளராக போட்டியிடுபவர், பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய கழக இணைச் செயலாளர் மசிகம் பரிதா. இவரை எதிர்த்து தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடுபவர் அமுலு விஜயன். டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ ஜெயந்தி போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடுபவர் கலையேந்திரி. மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணிக் கட்சியான ஐ.ஜே.கே. சார்பில் வளத்தூர் பாபாஜி போட்டியிடுகிறார்.
பிரதான கட்சிகள் சார்பில்
நான்கு பெண் வேட்பாளர்கள் மோதும் தொகுதியாக இருக்கிறது குடியாத்தம் தொகுதி.ஆனால் , கடுமையான போட்டி என்னவோ அ.தி.மு.க. வேட்பாளர் மசிகம் பரிதாவுக்கும் , தி.மு.க.வேட்பாளர்
அமுலு விஜயனுக்கும்தான்.
அ.தி.மு.க. வேட்பாளராக மசிகம் பரிதா அறிவிக்கப்பட்டதும் , பேரணாம்பட்டு பகுதியில் எதிர்ப்புகள் கிளம்பியது. கிளம்பிய வேகத்தில் அடங்கியும் போனது.அ.தி.மு.க. வேட்பாளர் மசிகம் பரிதா தேர்தல் பிரச்சாரத்தில் தச்சு நெய்வது , பீடி சுற்றுவது , தீப்பெட்டி தொழிலாளர்களுடன் கலந்துரையாடுவது,
பூ விற்பது , வளையல் போடுவது தனது நூதன பாணி தேர்தல் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தினார்.இதைக்கண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட வேட்பாளர்களும், அதே பாணியை பின்பற்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.அ.தி.மு.க. வேட்பாளருக்கு
கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தீவிர தேர்தல் பணி செய்து வருகின்றனர்.ஆனால் , அ.தி.மு.க.நிர்வாகிகள் சிலர்
பணம் பட்டுவாடாவில் எவ்வளவு பாக்கெட்டை நிரப்ப முடியும் என்பதிலேயே அக்கறை காட்டி வருகின்றனர்.
தி.மு.க.வேட்பாளர் அமுலுவின் உறவினரும் , குடியாத்தம் ஒன்றிய தி.மு.க செயலாளருமான கள்ளூர் ரவி இரவு பகல் பாராது தேர்தல் பணி செய்து வருகிறார். இவருக்கு கட்சியில் உள்ள ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே உறுதுணையாக இருந்து வருகின்றனர். முக்கியப் பொறுப்பில் உள்ள கட்சி நிர்வாகிகள் சிலர் ஆரம்பம் முதல் இன்றுவரை தேர்தல் பணியில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
ஆரம்பம் முதல் " ப" வைட்டமின் கொடுத்து தொண்டர்களை உற்சாகப்படுத்திய அ.தி.மு.க வேட்பாளர் மசிகம் பரிதா தேர்தல் நாள் வரை தொடர்ந்தால் வெற்றி பெற்று கரையேறும் வாய்ப்பு உள்ளது.கள்ளூர் ரவி காட்டும் அதே வேகத்தை கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகளும் காட்டினாலும், அ.தி.மு.க.வேட்பாளர் மசிகம் பரிதாவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது.
- தீரன் வீரபத்தரன்