6, 7, 8ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு; அடுத்த வாரம் அறிவிப்பு
தமிழகத்தில் கோவிட்-19 தொற்று காரணமாக சுமார் 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி உரிய அனுமதி பெற்ற பின்னர், படிப்படியாக பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு பாடத்திட்டம் 40 சதவீத அளவிற்கு குறைக்கப்பட்டன. இந்த சூழலில் மாணவர்களும், பெற்றோர்களும் விரும்பும் வகையில் பொதுத்தேர்வில் புதிய மாற்றங்கள் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
மேலும் பள்ளிகளில் போதிய சுகாதார நடவடிக்கைகளுடன் மாணவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இவர்களுக்கு இன்று முதல் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
இதற்கிடையில் தனியார் பள்ளிகள் முழு கல்வி கட்டணமும் கேட்டு வற்புறுத்துவதாக பெற்றோர்கள் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 100 சதவீதம் கல்வி கட்டணம் கேட்டு வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் குறித்து புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. மேலும் 2020-21ஆம் கல்வியாண்டில் மேற்குறிப்பிட்ட வகுப்பினருக்கு மூன்று பருவத்திற்கும் 50 சதவீத அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயம் இல்லை என்ற தகவல் தற்போது தான் எங்களுக்கு தெரியவந்துள்ளது. இதுபற்றி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதுவார். தமிழத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கின்றனர். பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்ட பின்னர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.