பட்டப்படிப்பு முடிச்சா ரூ.50,000; பிளஸ் 2 முடிச்சா ரூ.25,000 - அமைச்சரவை ஒப்புதல்!

பட்டப்படிப்பு முடிச்சா ரூ.50,000; பிளஸ் 2 முடிச்சா ரூ.25,000 - அமைச்சரவை ஒப்புதல்!பிகார் மாநிலத்தில் திருமணமாகாத பெண்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு ’முக்கியமந்திரி கன்யா உத்தன் யோஜனா’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிப் படிப்பை நிறைவு செய்த பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பை முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் பெண் குழந்தைகள் திருமணத்தை தவிர்க்கவும், பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டில் இருந்து திருமணமாகாத பெண்களுக்கான கல்வி உதவித்தொகையை அதிகரித்து முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி, பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பை முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இதுதொடர்பான கல்வித்துறையின் மசோதாவிற்கு பிகார் மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தால் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 1.6 கோடி பெண்கள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ’முக்யமந்திரி வித்யார்த்தி பிரோத்சாகன் யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் 33,666 சிறுபான்மையின சமூக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 34 கோடி ரூபாய் பிகார் மாநில அமைச்சரவை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கிடையில் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்படும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய மதிப்பீடு அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இவர்கள் 60 வயது வரை பணியில் தொடரலாம். இதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதேபோல் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான எழுத்துத் தேர்வில் சில மாற்றங்களைச் செய்வதற்கான உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கும் அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து பிகார் போலீஸ் ரேடியோ (ஒயர்லெஸ்) மற்றும் டெக்னிகல் சர்வீஸ் சட்டம், 2021ல் சில திருத்தங்கள் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பிகார் மாநில முன்னாள் முதல்வரும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான ஜிதன்ராம் மாஞ்சி பெண்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்விற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை வரவேற்றுள்ளார். இதே விஷயத்தை தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்று தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதியாக அளித்ததை நினைவுகூர்ந்தார்.