பலமாகும் பங்காளி சண்டை......! திமுகவை அசைத்துப் பார்ப்பாரா அழகிரி.....?

 பலமாகும் பங்காளி சண்டை......! திமுகவை அசைத்துப் பார்ப்பாரா அழகிரி.....? 

ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவுக்குள் அதிகாரப் போட்டி தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போதும் அது தொடர்கிறது. திமுகவில் அப்படியான போட்டிகள் எழாத நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுகவிலிருந்து நீக்கப்பட்டிருந்த கலைஞரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி தனிக் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

நேற்று முன் தினம் மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய மு.க.அழகிரி, ஸ்டாலினை முதல்வராக விடமாட்டேன் என பேசினார். “நான் நல்ல முடிவெடுப்பேன். அது நல்ல முடிவாகவோ அல்லது கெட்ட முடிவாகவோ கூட இருக்கலாம். எந்த முடிவாக இருந்தாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். எத்தனையோ பேரை மந்திரியாக்கியிருக்கிறேன். எவனுக்கும் நன்றி கிடையாது. ஆனாலும் உங்களுக்காக ஒரு தொண்டன் அழகிரி இருக்கிறான்” என்று அழகிரி மதுரையில் பேசினார்.

அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அவரது ஆதரவாளர்கள் என அறியப்பட்டவர்களுக்கான முக்கியத்துவம் கட்சியில் குறைந்தது. இதனாலே அழகிரியுடனான தொடர்பை திமுகவினர் தவிர்த்தனர். இதனால் அழகிரியும் அரசியலிலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தனது இருப்பை வெளிக்காட்டும் விதமாக அவ்வப்போது திமுகவுக்கு எதிராக பேட்டியளித்தும் புதிதாக கட்சி தொடங்குவதாக பேசியும் வருகிறார் அழகிரி.

சூப்பர் ஸ்டாராகும் அழகிரி?

'கலைஞர் திமுக' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குகிறார் என்ற தகவல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அது வதந்தியாக மட்டுமே வலம் வந்து அவ்வப்போது ஓய்ந்துவிடும். தற்போது நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி அழகிரி அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகிவரும் நிலையில் அவர் பின்னணியில் யார் உள்ளனர் என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது. அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து ரஜினி பின்வாங்கியுள்ள சமயம் அழகிரியை மையமாக கொண்டு செய்திகள் வெளிவரத் தொடங்கியிருப்பதால் இவர் பின்னணியிலும் பாஜக உள்ளது என பல தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்துவருகின்றன.

அழகிரியின் பலம் என்ன?

அழகிரியால் திமுகவை துண்டாட முடியுமா, அவருக்கு தொண்டர்கள் பலம் உள்ளதா என்ற கேள்வியை திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் கேட்டுப் பார்த்தால் வரும் பதில்கள் அவருக்கு சாதகமாக இல்லை. இது அழகிரிக்கும் தெரியாமல் இல்லை. அப்படியொரு ஆதரவு வட்டம் இருந்திருந்தால் கலைஞர் மறைந்த பின் இத்தனை ஆண்டுகளில் சலசலப்பு உருவாகியிருக்கும். அழகிரியால் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டத்தைக்கூட தான் நினைத்தது போல் நடத்த முடியவில்லை என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது.

திமுகவுக்கு பாதிப்பு உண்டா?

அதிகார போட்டி திமுகவுக்குள்ளும் பலமாக இருக்கிறது என்பதை காட்டவே அழகிரி கொம்பு சீவி விடப்படுகிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆனால் கட்சி முழுமைக்கும் ஸ்டாலின் குடும்பத்தின் நிழல் பரவி நீண்ட காலமாகிவிட்டது. ஸ்டாலின் தனக்கு எதிராக செயல்படுகிறார் என குற்றம் சாட்டும் அழகிரி அதனாலே கோபாலபுரம் வீட்டுக்குகூட வருவதில்லை. ஆனால் கலைஞரின் நினைவிடத்திற்கு செல்ல அழகிரிக்கு என்ன தயக்கம்?

கலைஞரின் நினைவு நாள், பிறந்தநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தும் போது அழகிரி அதை தவிர்த்தது தொண்டர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒருவேளை அழகிரியின் பின்னால் பாஜக இருப்பது உறுதியானால் அது திமுக தொண்டர்கள், ஆதரவாளர்களின் எதிர்ப்பைத்தான் அறுவடை செய்யும். இதனால் அழகிரியின் ஆலோசனைக் கூட்டமும், ஒருவேளை கட்சி தொடங்கினாலும் திமுகவை அது பாதிக்காது. செய்திகளில் சில நாள்களுக்கு அடிபடுவதோடு அது காலாவதியாகிவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.